செம்பருத்தி

இந்த பதிவினை அலங்கரிக்கப் போவது, என் வீட்டு தோட்டத்தில் வளர்ந்த செம்பருத்தி பூக்கள். இன்றைக்கு புதிதாக ஒரு படம் செம்பருத்தியை வைத்து எடுத்தேன். அப்புறம் தான் என்னுடைய படத்தொகுப்புகளை கவனித்தேன். வீட்டில் வளர்ந்த செம்பருத்தியை வைத்து நிறைய படங்கள் எடுத்துவிட்டேன் என்பதனை. பார்க்கவே மிகவும் அழகாகவும், சந்தோஷமாகவும் இருந்தது, சிகப்பு செம்பருத்திகளை பார்க்கும் பொழுது. அதை அப்படியே ஒரு பதிவாக வெளியிடுகிறேன்.

நான் முதன்முதலில் செம்பருத்தியை வைத்து எடுத்த படம்...

நான் முதன்முதலில் செம்பருத்தியை வைத்து எடுத்த படம்…

என் வீட்டு மல்லிகைகள், செம்பருத்தியோடு சேர்ந்து எடுத்துக்கொண்ட படம்...

என் வீட்டு மல்லிகைகள், செம்பருத்தியோடு சேர்ந்து எடுத்துக்கொண்ட படம்…

இந்த செம்பருத்தி செடி என் வீட்டுக்கு வந்ததே ஒரு சுவாரசியமான விஷயம். என் இரண்டாவது மகனுக்கு எப்பொழுதும் மதிய சாப்பாடு வெளியில் சென்று தான் ஊட்ட வேண்டும். அன்றும் அப்படியே சாப்பாடு கொடுத்துக் கொண்டிருந்த பொழுது வீதியில் வண்டியில் வைத்து ஒருவர் செடிகளை விற்றுக்கொண்டு வந்து கொண்டிருந்தார். என் மகன் அவரை பார்த்தவுடன் செடிகள் வாங்கலாம் என்று என்னிடம் அடம்பிடித்து, அவரை நிற்கச் செய்து விட்டான். முதலில் அவன் கேட்டது இந்த செம்பருத்தி செடியை தான். எனக்கு என்ன வருத்தம் என்றால், இதற்கு முன்பு நான் வாங்கிய செம்பருத்தி செடிகள் பூச்சி வந்து பட்டுப் போய்விட்டிருந்தன. “இந்த செடி தாங்குமா?” என்ற சந்தேகம். என் மகன் ஒரே மனதாக கண்டிப்பாக வேண்டும் என்று வாங்க வைத்தது இந்த செடி.

சூரிய ஒளியில் மின்னும் செம்பருத்தி....

சூரிய ஒளியில் மின்னும் செம்பருத்தி….

என் கணவர் விருப்பத்தின் பேரில் எடுத்த படம்...

என் கணவர் விருப்பத்தின் பேரில் எடுத்த படம்…

செம்பருத்தி Macro....

செம்பருத்தி Macro….

இன்றைக்கு புதிதாக எடுத்த படம்....

இன்றைக்கு புதிதாக எடுத்த படம்….

வாங்கும் பொழுது என் இடுப்பு வரை இருந்த இந்த செடி, இன்று 2 ஆள் உயரத்திற்கு வளர்ந்து நிற்கிறது… இந்த அழகான படங்கள் என் மகன் அன்று அடம் பிடித்து எடுத்த முடிவினாலேயே சாத்தியமாயிற்று…

தீபாவளி

தீபாவளி நாளன்று வீட்டை அலங்கரித்த விளக்குகளில் சில….

வண்ணத்தூரிகையில் நான் அலங்கரித்த ஜாடியில் மின்னும் விளக்கு....

வண்ணத்தூரிகையில் நான் அலங்கரித்த ஜாடியில் மின்னும் விளக்கு….

பூக்களுக்கும் விளக்குகளுக்கும் நடுவில் புத்தர்.....

பூக்களுக்கும் விளக்குகளுக்கும் நடுவில் புத்தர்…..

 எங்கும் ஒளியை பரப்பும் குபேர விளக்கு

எங்கும் ஒளியை பரப்பும் குபேர விளக்கு

ஒளி விளக்குகளுக்கு நடுவில் சாந்தமாய் புத்தர்......

ஒளி விளக்குகளுக்கு நடுவில் சாந்தமாய் புத்தர்……

Lepakshi

தீபாவளிக்கு வீட்டிலேயே இருந்து டிவி மட்டும் பார்ப்பது bore என்பதினால் 2, 3 வருடங்களாக எங்கேயாவது பக்கத்து ஊர்களுக்கு செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளோம். இந்த தீபாவளிக்கு எங்கு செல்வது என யோசித்துக் கொண்டிருக்கும் பொழுது சட்டென பாலாஜியின் நினைவுக்கு வந்தது “லெபக்ஷி” தான்.

லெபக்ஷி, பெங்களூரில் இருந்து, ஹைதராபாத் சாலையில் 120கி.மீ. தொலைவில், கர்நாடகா எல்லை முடிவில், ஆந்திரா மாநில ஆரம்பத்தில் உள்ளது. பெங்களூரில் இருந்து காரில் பயணம் செய்தால் 2 மணி நேரத்தில் சென்றடையலாம்.

கோவிலின் முன்தோற்றம்....

கோவிலின் முன்தோற்றம்….

லெபக்ஷி – யில் உள்ள வீரபத்திரர் கோவில் விஜயநகர கட்டிடக்கலையின் பாணியில் கட்டப்பட்டதாகும். இக்கோவில் அகஸ்தியரால் கட்டப்பட்டதாக கருதப்பட்டாலும், இன்று இருப்பதோ 16-ம் நூற்றாண்டில் வீரண்ணா மற்றும் விருபண்ணா சகோதரர்களால் விஸ்தரிக்கப்பட்ட கோவிலே. இவ்விரு சகோதரர்கள், விஜயநகர சாம்ராஜ்யத்தைச் சேர்ந்த பெனுகொண்டாவின் கருவூலத்தாரராக இருந்தவர்கள். இந்தக் கோவில் 5 ஏக்கர் பரப்பளவில் இருந்த ஒரே கல்லில் கட்டப்பட்டிருக்கிறது. எந்த அஸ்திவாரமும் போடப்படவில்லை என எங்களுக்கு கோவிலைப்பற்றி விவரித்த guide கூறினார்.

கோவிலில் நுழைந்தவுடன் அழகான நாட்டிய அரங்கு மற்றும் அதில் கலைநயத்துடன் செதுக்கி இருக்கும் சிற்பங்கள் நம்மை வரவேற்கின்றன.

நாட்டிய அரங்கின் கூரை....

நாட்டிய அரங்கின் கூரை….

நாட்டிய அரங்கின் தூண்களில் சிற்பங்கள்....

நாட்டிய அரங்கின் தூண்களில் சிற்பங்கள்….


அரங்கின் கூரையிலும் அழகழகான ஓவியங்கள். அந்த ஓவியங்கள் அனைத்தும் இயற்கையில் கிடைக்கும் வண்ணகளைக் கொண்டே வரையப்பட்டிருக்கின்றன. இங்கு உரல் போன்றதொரு அமைப்பு கோவில் முழுவதும் ஆங்காங்கே காணப்படுகிறது. அதில் காய்கறி மற்றும் செடிகொடிகளை அரைத்து, அதிலிருந்து எடுக்கப்படும் சாறுகளே ஓவியம் வரைய பயன்படுத்தி இருக்கின்றனர்.

கோவில் கூரையில் வீரண்ணா மற்றும் விருபண்ணா ஆகியோரின் ஓவியம்....

கோவில் கூரையில் வீரண்ணா மற்றும் விருபண்ணா ஆகியோரின் ஓவியம்….


இயற்கை வண்ணங்களை தயாரிக்க பயன்படுத்தப்பட்ட உரல்....

இயற்கை வண்ணங்களை தயாரிக்க பயன்படுத்தப்பட்ட உரல்….

இந்த அரங்கில் காணப்படும் பல தூண்களில் ஒன்று அடித்தளத்தில் உட்காராமல், மேற்கூரையிலிருந்து மட்டுமே தொங்கிக்கொண்டிருக்கிறது!!!!.

தொங்கும் தூண்...

தொங்கும் தூண்…


ஒரே கல்லில் செதுக்கிய பிரமாண்டமான ஏழு தலைகளுடைய நாகலிங்கச் சிலை ஒன்றும் வெளிப்பிரகாரத்தில் உள்ளது. சிலை உருவான சுவாரசியமான கதையையும் நம் guide கூறினார். இதை செதுக்கிய சிற்பிகளின் தாயார் அவர்களுக்கு மதிய சாப்பாடு தயார் செய்வதற்குள் இச்சிலையை அவர்கள் வடித்துள்ளனர். சமையலை முடித்துவிட்டு வந்து பார்த்த தாயின் கண்திருஷ்டி பட்டு சிலையின் இரண்டு இடங்களில் விரிசல் வந்துவிட்டதாம்.

நாகலிங்க சிலை....

நாகலிங்க சிலை….


நாகலிங்க சிலைக்கு பக்கவாட்டில் உள்ள சப்தகன்னியர்கள்...

நாகலிங்க சிலைக்கு பக்கவாட்டில் உள்ள சப்தகன்னியர்கள்…

இந்த சிலையின் பின்புறத்தில் பெரிய விநாயகர் சிலை, எந்த ஒரு நல்ல காரியத்தை செய்வதற்கு முன்பு அவரை வழிபட்டுவிட்டு தான் ஆரம்பிக்கவேண்டும் என்பதற்கு அடையாளமாக, இக்கோவிலை கட்டுவதற்கு முன் வடிக்கப்பட்டிருக்கிறது.

விநாயகர் சிலை ...

விநாயகர் சிலை …


இங்கு வரும் மக்களின் ஆர்வத்தை ஈர்க்கும் மற்றுமொரு விஷயம் – வெளிப்பிரகாரத்தில் இருக்கும் சரியாக கட்டப்படாத, பாதியில் நின்று போன திறந்தவெளி கல்யாண மண்டபம். மண்டபத்தின் தூண்களில் பல்வேறு கடவுளரின் உருவங்களை அழகாக கலைநயம் பட செதுக்கி வைத்துள்ளனர்.

திறந்தவெளி கல்யாண மண்டபத்தின் முன் தோற்றம்....

திறந்தவெளி கல்யாண மண்டபத்தின் முன் தோற்றம்….


திறந்தவெளி கல்யாண மண்டபம்...

திறந்தவெளி கல்யாண மண்டபம்…


திறந்தவெளி கல்யாண மண்டபம்...

திறந்தவெளி கல்யாண மண்டபம்…


கல்யாண மண்டபமும் ஏன் பாதியில் நின்று போனது என்பதற்கும் காரணங்களை “guide” கூறினார். விருபண்ணா காலத்தில் அரசராக இருந்தவரிடம் சிலர், விருபண்ணா, கோவில் கட்டுவதாகக் கூறி பணத்தை விரயம் செய்கிறார் எனக் கூறியதினால் அவருடைய கண்களை பிடுங்கச் சொல்லி உத்தரவிட்டார். இதைக் கேள்விப்பட்ட விருபண்ணா, தன் கண்களை தானே பிடுங்கி எரிந்துள்ளார். அவர் கண்களை வீசி எறிந்த இடம் இன்னமும் ரத்தக்கறையுடன் காணப்படுகிறது. ஆதலால் கல்யாண மண்டபமும் பாதியில் நின்று போனது.

கோவில் சுவரில் விருபண்ணா, தன கண்களை வீசி எறிந்த இடம் ரத்தக்கறையுடன்...

கோவில் சுவரில் விருபண்ணா, தன கண்களை வீசி எறிந்த இடம் ரத்தக்கறையுடன்…

நாங்கள் சென்றது நவம்பர் மாதமாதலினால் வெயிலின் கடுமை சற்று குறைவாகவே இருந்தது. ஆகவே வெளிப்பிரகாரத்தில் சற்று சிரமமில்லாமல் நடக்க முடிந்தது. அப்படி நடந்து சென்று கொண்டிருக்கும் பொழுது பெரிய கால்தடம் ஒன்றும், அதில் எப்பொழுதும் நீர் வற்றாமல் இருப்பதினால் உண்டாகும் பூஞ்சையையும் பார்த்தோம். அது சீதையினுடையது என்றும், இராவணனால் சீதை கடத்தப்பட்டு இலங்கைக்கு கொண்டு செல்லும் பொழுது “ஜடாயு” என்ற பறவை இராவணனை வழிமறித்து சண்டையிட்டது நம் அனைவருக்கும் தெரியும். அப்படி சண்டையிட்டது இந்தக்கோவில் கட்டப்படிருக்கும் கல்லின் மேல் தான் என்பது “guide ” நமக்கு கூறியது புது விஷயம். “ஜடாயு” இராவணனால் காயப்படுத்தப்பட்டு தரையில் விழுந்தபின் சீதை தன் பாதத்தை கல்லின் மேல் பதித்து, அதில் எப்பொழுதும் தண்ணீர் சுரக்கும்படி செய்ததாகவும், அந்த தண்ணீரை குடித்துவிட்டு “ஜடாயு” இராமன் வரும் வரை உயிர் வாழ்ந்து பின் விஷயத்தைக் கூறியிருகிறதாகவும் நம்பப்படுகிறது. பின்பு இராமன் “Le Pakshi”(rise o’ bird) எனக்கூறிய பின் மோக்ஷம் அடைந்ததினால் இத்தலத்திற்கு Lepakshi எனப் பெயர் வந்ததாக கருதப்படுகிறது.

சீதையின் பாதம், எப்பொழுதும் வற்றாத தண்ணீர் ஊற்றுடன் ....

சீதையின் பாதம், எப்பொழுதும் வற்றாத தண்ணீர் ஊற்றுடன் ….

வேலையின் போது சிற்பிகள் பயன்படுத்திய சாப்பாட்டுத் தட்டு....

வேலையின் போது சிற்பிகள் பயன்படுத்திய சாப்பாட்டுத் தட்டு….

யாழி..

யாழி..

அழகிய சிற்பங்கள்....

அழகிய சிற்பங்கள்….

வெளிப்பிரகாரம்....

வெளிப்பிரகாரம்….

இந்தக் கதைகள் அனைத்தையும் நம்மால் நம்ப முடியாவிட்டாலும், கற்பனை நிறைந்த கதைகளை சிறுவயது முதலே நம் அனைவருக்கும் கேட்டுப் பழக்கபட்டதினால் அவையெல்லாம் சுவாரசியமாகவே இருந்தன.

ஒரே கல்லில் செதுக்கப்பட்ட நந்தி....

ஒரே கல்லில் செதுக்கப்பட்ட நந்தி….

கோவிலைப் பார்த்து விட்டு அங்கிருந்து அருகில் இருக்கும் ஒரே கல்லினால் செதுக்கப்பட்ட நந்தியையும் பார்த்து விட்டு வீடு திரும்புவதற்காக காரில் புறப்பட்டோம். காரில் பயணிக்கும் பொழுது சிறுது தூரம் வெயில், சிறுது தூரம் மழை என நவம்பர் மாத வானிலையை ரசித்ததினால் பயணித்த களைப்பு தெரியவில்லை.