கழுகுமலை

ம்முறை மதுரை பயணத்தின் பொழுது கழுகுமலைக்கு சென்று வந்தோம். இது கோவில்பட்டியில் இருந்து 20கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. முன்பு இம்மலை திருமலை அல்லது திருநெச்சுரம் என்ற பெயரால் அழைக்கப்பட்டிருக்கிறது. இம்மலையின்  கீழ்ப்பாகத்தில் வெட்டுவான் கோவிலும், நடுவில் அய்யனார் கோவிலும், மலை உச்சியில் ஓர் முருகன் கோவிலும் இருக்கின்றன. நாங்கள் சற்று ஆர்வக்கோளாறால் வீட்டிலிருந்து 6 மணிக்கு கிளம்பி 8:30 மணிக்கெல்லாம் அங்கு சென்று விட்டோம். வெட்டுவான் கோவில், தொல்பொருள் ஆராய்ச்சி துறையின் கீழ் இருப்பதினால் அங்கு வேலைக்கு அமர்த்தப்பட்டிருந்த காவலாளி 10 மணிக்கு தான் வந்து கேட்டை திறப்பேன் என கூறி விட்டார். நல்ல வேலையாக ஏற்கனவே அங்கு சென்று வந்திருந்த என் தம்பியிடம் காவலாளியின் நம்பரை வாங்கி வைத்திருந்தது உதவியாக இருந்தது.


வெட்டுவான் கோவில் பாண்டியர்கள் காலத்தில் அதாவது 8 மற்றும் 9ம் நூற்றாண்டிற்கு நடுவில் கட்டப்பட்டிருக்கிறது. இது 7.5 மீட்டர் உயரமான  ஒரே கல்லில் செதுக்கப்பட்ட கோவிலாகும். இது எல்லோராவின் கைலாசநாதர் கோவில், பீஜாப்பூரின் பட்டடக்கல் கோவில் மற்றும் பல்லவர்களின் மாமல்லபுரக் கோவில் ஆகியவற்றின் பாணியில் கட்டப்பட்டிருக்கின்றன. முழுமை பெறாத இக்கோவிலின் கோபுரத்தில், உமா மஹேஸ்வரர், தக்ஷிணாமூர்த்தி, விஷ்ணு மற்றும் பிரம்மா ஆகியோரின் சிலைகளை செதுக்கி இருக்கின்றனர். மேற்கூறிய தெய்வங்களின் சிலைகளை சேர்த்து மொத்தம் 122 சிலைகள் இக்கோபுரத்தில் காணப்படுகின்றன. பின் காலத்தில் இந்த கோவிலின் கர்பகிரஹத்தில் விநாயகரை வைத்து வழிபட ஆரம்பித்திருக்கின்றனர்.

வெட்டுவான் கோவிலின்  முன்புறத்தோற்றம்

லையின் நடுவில் இருக்கும் அய்யனார் கோவிலின் அருகில், ஓர் பெரிய ஆலமரத்தின் நிழலில், சமண தீர்த்தங்கரர்களின் சிலைகள் காணப்படுகின்றன. அவைகளோடு சில கல்வெட்டுகளும் இருப்பதினால், தொல்பொருள் துறை இங்கிருக்கும் அய்யனார் கோவிலில் பக்தர்கள், ஆடு, மாடு போன்ற உயிரினங்களை பலியிடுவதற்கு தடை விதித்திருக்கிறது. அய்யனார் கோவில் வரை சிரமம் இல்லாமல் மலை ஏறிவிட முடிகிறது. அதற்கு மேல் சற்று கடினமாகத் தான் இருந்தது. எனினும் சிரமம் பார்க்காமல், ‘வந்தது வந்தோம் ஏறி விடலாம்’, என விடா முயற்சியுடன் ஏறிவிட்டோம்.

லை உச்சியில் ஓர் சிறிய முருகன் கோவிலும் இருக்கிறது. அது சமீப காலத்தில் கட்டிய கோவில் மாதிரி தெரிந்தது. மேலே ஏற கடினமாக இருந்தாலும், கீழ் இருக்கும் கிராமங்களின் அழகு, அங்கு வீசிய சில்லென்ற காற்றும் மேலேறி வந்த களைப்பை முழுவதுமாக மறக்கச் செய்தன. அப்படியே சற்று நேரம் இயற்கை அழகை எல்லாம் ரசித்து விட்டு பின்பு மெதுவாக கீழே இறங்கி வந்தோம்.

வெட்டுவான் கோவில் கோபுரத்தின் சிற்பங்கள் அனைத்தையும் மிக அழகாக செதுக்கி இருக்கின்றனர். அவைகளை எல்லாம் ரசித்து ரசித்து என் காமெராவில் படமெடுத்துக் கொண்டு வீடு வந்து சேர்ந்தோம்.