சத்யா – 4

த்யாவைப் பற்றி நான் ஏற்கனவே எழுதிய கட்டுரைகளில் கூறி இருக்கின்றேன். அதை படித்தவர்களுக்கு அவளின் குணத்தைப் பற்றி ஓரளவிற்கு புரிந்திருக்கும். எதையும், யார் சொன்னாலும், எளிதில் நம்பி விடும் எளிமையான, கள்ளம் கபடமற்ற குணம் அவளுடையது. இந்த குணத்தினாலேயே, அவளை கொடுமைப் படுத்திய கணவனை எதிர்க்காமல் பல காலம் அவனுடனேயே வாழ்க்கையை கடத்திக் கொண்டு இருந்திருக்கிறாள். ஓர் கட்டத்தில் வலி தாங்க முடியாத அவள், தனியே வந்திருக்கிறாள். அப்பொழுது கூட காவல் நிலையத்தில் புகார் கொடுக்க வேண்டுமென்றோ, அல்லது விவாகரத்து செய்யலாம் என்றோ கூட அவளுக்கு தோன்றவில்லை. பெங்களூர் வந்த பிறகு தான் வாழ்க்கையை கொஞ்சம் கொஞ்சமாக புரிந்து கொள்ள ஆரம்பித்திருக்கிறாள். குறிப்பாக எங்கள் வீட்டிற்கு வேலைக்கு வந்த பிறகு தான், சற்று சிரித்து பேச, சின்ன சின்ன விஷயத்தில் சந்தோஷத்தை உணர ஆரம்பித்திருக்கிறாள். 

தாரணத்திற்கு அவள் செய்யும் சிறு சிறு தவறுகளை, நானும் பாலாஜியும் அவளிடம் கோபித்துக் கொள்ளாமல் சரி செய்ய வைப்பது. அதுவும், பல நேரங்களில் பாலாஜி நகைச்சுவையோடு கூறும் பொழுது அதை சரி செய்து கொள்வதுடன், அதை ரசித்து சிரித்துக் கொண்டே வேலையை தொடருவாள். “உங்கள் வீட்டிற்கு வரும் போது தான் நான் மனம் விட்டு சிரிக்கிறேன் அக்கா” என அவள் கூறுவதில் எங்களுக்கும் மகிழ்ச்சியே.

ப்படி அவள் செய்த சிறு சிறு தவறுகளை, நகைச்சுவை கலந்து, உங்களிடம் இங்கு பகிரலாம் என்பதற்காகவே இந்த பதிவு. 

வள் எங்கள் வீட்டிற்கு புதிதாக வந்து சேரும் பொழுது, என்ன என்ன வேலைகள் செய்ய வேண்டுமென்று பட்டியலிட்ட பின், ” வாசலில் கோலம் போட மாட்டீங்களா?” என கேட்டு விட்டு, ” நானே தினமும் கோலம் விடுகிறேன் ” என அவளாகவே அந்த வேலையை சேர்த்துக் கொண்டாள். சில நாட்களுக்கு கோலத்தை படத்தில் இருப்பது போல ஓர் ஓரமாக போட்டிருப்பாள். எங்கள் வாசலின் இரண்டு கேட்டில், ஒரு கேட்டிற்கு மையமாக வருமாறு கோலம் இருக்கும். “ஒரு கேட்டை தானே அக்கா திறந்து வைக்கிறீங்க, எதற்கு இரண்டு கேட்டிற்கு நடுவில் போட வேண்டும்?” என கேள்வி கேட்டு திகைக்க வைத்தாள். ஓ! இப்படி எல்லாம் கூட யோசிக்க முடியுமா?” என எங்களையும் சேர்த்து யோசிக்க வைத்தாள். “சரி இனிமேல் இரண்டு கேட்டிற்கு நடுவிலேயே கோலம் விடு” என சிரித்தபடி கூறி சரி செய்ய வைத்தேன். 

ன்னொரு முறை மாடி அறையை சுத்தம் செய்ய கிளம்பினாள். “சோபாவின் கீழ் இருக்கும் கார்பெட்டை அங்கிருக்கும் நாற்காலியில் எடுத்து வைத்து விட்டு சுத்தம் செய்துவிட்டு வா” என கூறி அனுப்பி வைத்திருந்தேன். வேலை முடித்து வீட்டிற்கு கிளம்பி விட்டிருந்தாள். வேறு ஏதோ வேலையாக மேலே சென்ற நான், அந்த அறையை பார்க்க நேர்ந்தது. நாற்காலியில் கார்பெட் அப்படியே இருந்தது. மறுநாள், ” என்ன சத்யா, கார்பெட்டை சோபாவின் கீழே விரிக்க மறந்திட்டியா?” என கேட்டதற்கு, “மேலே எடுத்து தானே வைக்க சொன்னீங்க, சுத்தம் செய்த பிறகு கீழே விரிக்க சொல்லலையே அக்கா நீங்க” என கேட்டு திகைக்க வைத்தாள். “சரியாக சொல்லாமல் விட்டது என் தப்பு தான்” என நினைத்து சிரித்துக் கொண்டேன்.  அடுத்த முறை செல்லும் போது சரியாக சொல்லி அனுப்பினேன். அதற்கு, “ஒரு தடவை செய்த தப்பை மறுபடி மறுபடி செய்ய மாட்டேன் அக்கா” என எனக்கே பாடம் எடுத்து விட்டு சென்றாள். 

குடைகள் வைப்பதற்காக ஓர் மண் ஜாடியை அழகாக வண்ணம் பூசி, சூரியன் போன்ற ஒரு டிசைன் செய்து வைத்துள்ளேன். தினமும் அதை நகர்த்தி வைத்து விட்டு சுத்தம் செய்வது சத்யாவின் வழக்கம். பின்பு அதை பழையபடி வைக்கும் பொழுது, சூரியன் எப்பொழுதும் சுவர் பக்கம் பார்க்குமாறு மிக சரியாக தவறாக வைத்து விடுவாள். பலமுறை சொல்லியும் அவள் அதை சரியாக செய்யவே இல்லை. அவளுக்கு இருக்கும் அவசரத்தில் இம்மாதிரியான தவறுகள் அடிக்கடி நடந்து கொண்டு தான் இருந்தன. எனக்கு அது கொஞ்சம் நெருடலாகவே இருக்கும். அவள் சென்ற பின் அதை சரி செய்து வைப்பேன். ஓர் நாள், காலையில் நேரமின்மை காரணமாக, சாயங்காலம் வந்து வேலையை செய்து கொண்டிருந்தாள். அப்பொழுதும் அவள் அதே தவறை செய்து விட்டாள். “சூரியன் முன்னாடி தெரியும் படி வை சத்யா” என கூறவே, அதை கேட்டுக் கொண்டிருந்த பாலாஜி, “சாயங்காலம் சூரியன் மறைந்து விடும் இல்லையா, அதனால் தானே அப்படி வைச்சுருக்கே சத்யா. இது கூட அக்காக்கு தெரிய மாட்டேங்குது” என சொல்லவே, அனைவரும் சிரித்து விட்டோம். “சாரி அக்கா, இனிமே சரியா வைக்கிறேன்” என கூறி சரி செய்தாள். இன்று வரை அதை மிக சரியாகவே வைக்கிறாள். அதை வைக்கும் சமயத்தில் அவள் முகத்தில் வரும் சிரிப்பை நான் கவனிக்க தவறுவதில்லை. 

ம்மாதிரியான சேட்டைகள் தினம் தினம் எங்கள் வீட்டில் நடந்தேறும். வாழ்க்கையை தினம் ஓர் போராட்டமாக எதிர்கொள்ளும் சத்யா, எங்கள் வீட்டிற்கு வந்து சிறிது நேரம் மனம் விட்டு சிரித்து விட்டு செல்கிறாள். அவள் கஷ்டங்களை சிறிது நேரம் மறக்க செய்வதில், எனக்கும் பாலாஜி க்கும் ஓர் சிறு சந்தோஷம். 

Leave a comment