சமீபத்திய வாசிப்புகள்…

 2015 ல் சென்னையில் புத்தக கண்காட்சி நடைபெற்ற நேரத்தில் தான் பெருமாள் முருகன் அவர்களுடைய நாவல் “மாதொரு பாகன்” ஐப் பற்றி கேள்விப்பட்டேன். அந்நேரத்தில் ஏற்பட்ட சர்ச்சையால் அவருடைய புத்தகம் எந்த கடைகளிலும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கவில்லை. நண்பர்கள் மூலமாக கிடைத்த PDF ல் படித்தேன். நாவல், மெல்லிய உணர்வுகளை மிக அழகாகவும் அதே சமயம் அழுத்தமாகவும் பதிவு செய்திருந்தது. நாவலை படித்த பின்பு கதை முடிவு பெறாத மாதிரியான எண்ணம் எனக்கு தோன்றியது. மேலும் அது பல கேள்விகளை என் மனதில் உருவாக்கியது. சரி, இப்பொழுதெல்லாம் கதை எழுதுகிறவர்கள், முடிவை வசிப்பவர்களின் கையிலேயே விட்டுவிடுவது ஒரு பேஷன் ஆ இருக்கே, அது மாதிரி தான் என்று எண்ணி, மனதில் தோன்றிய சில முடிவுகளில் ஏதாவது ஒன்று நடந்திருக்க வாய்ப்பிருக்கிறது என யூகித்து, சில நாட்களில் மறந்தும் போய்விட்டிருந்தேன்.
 இப்பொழுது 2 மாதங்களுக்கு முன்பு மதுரை சென்றிருந்த சமயம், ஏதாவது புத்தகம் வாங்கலாம் என புத்தகக்கடைக்கு சென்றிருந்தேன். அப்பொழுது, “பெருமாள் முருகன்” அவர்கள் எழுதிய “பூனாச்சி அல்லது ஒரு வெள்ளாட்டின் கதை” என்ற புத்தகத்தைப் பார்க்க நேர்ந்தது. சரி, படித்து பார்க்கலாம் என வாங்கினேன். புத்தகம் குறைந்த பக்கங்களை கொண்டிருந்ததினால் சீக்கிரம் படித்து விடலாம் என ஒரு சின்ன சந்தோசம். நான் கொஞ்சம் சோம்பேறி ங்க, படிக்கிற காலத்திலேயே பெரிய தடித்த புத்தகங்களை பார்த்தால் ஒரே அலர்ஜி எனக்கு… புத்தகத்தின் முன்னுரையிலேயே, மனிதர்களை பற்றி எழுதினால் சர்ச்சையாகிறது அதனால் ஆட்டை பத்தி எழுதுகிறேன், என அவர் கூறியிருந்தது, அந்த கதையை படிக்கும் ஆவலை கொஞ்சம் அதிகமாகத் தூண்டியது. மெல்லிய உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அவரது தனித்துவம் இந்த நாவலிலும் மிருளியது.
 இரண்டு கதைகளைப் படித்து முடித்த பின்னர், “அவர் வேறு என்னென்ன கதைகளை எழுதி இருக்கிறார்” எனத் தேடும் போது தான் “அர்த்தநாரி”யும் “ஆலவாயன்” னும் கிடைத்தார்கள். புத்தகங்களின்  முன்னுரையில் தான் தெரிந்தது, அது “மாதொருபாகன் ” னின் தொடர்ச்சி என்று. புத்தகங்களைப் பற்றிய என்னுடைய “அறிவை” நினைத்து நொந்து கொண்டேன். மாதொருபாகனின் கதாநாயகன் “காளி”  எடுக்கும் முடிவில் இருந்து ஆரம்பிக்கிறது இரு புத்தகங்களும்.  காளியின் முடிவு இப்படி இருந்திருந்தால் என்னவாகி இருக்கும் என “அர்த்தநாரி” யும் , அவன் வேறு முடிவு எடுத்திருந்தால், அவன் மனைவி “பொன்னா” வின் வாழ்க்கை எப்படி இருந்திருக்கும் என “ஆலவாயான்” னும் விவரிக்கிறது.
“அர்த்தநாரி” யும் “ஆலவாயன்” னும் சரியாக  இரண்டு இரண்டு நாட்கள் எடுத்துக் கொண்டன படித்து முடிக்க. இருகதைகளும் காளி மற்றும் பொன்னா வின் வாழ்க்கையை என் மனதில் நன்றாக பதிய வைத்து விட்டன. கதையில் நானும் ஒரு அங்கமாக பயணித்த ஓர் உணர்வு மனதில். கதை முடிவில் சொந்தங்களை பிரிந்த மனநிலை. அவர்கள் இருவரையும் மறக்க மேலும் சில நாட்கள் தேவைப் பட்டது எனக்கு. அதிக நாள் கழித்து நல்ல கதைகளை படித்த நிறைவு.
அவருடைய படைப்புகளை இது நாள் வரைக்கும் படிக்காமல் விட்டுவிட்டோமே என்ற வருத்தம் மனதில் இருந்தாலும், இப்பொழுதாவது படித்தோமே  என்கிற சந்தோசம் இல்லாமல் இல்லை.  இதோ அவருடைய “ஆளண்டாப் பட்சி” படிப்பதற்கு தயாராகி விட்டேன்.

Advertisements

தஞ்சாவூர் மற்றும் கங்கை கொண்ட சோழபுரம்

பெரிய கோவில் கோபுரம்

முதல் நாள் மதிய உணவை தஞ்சாவூரில் முடித்துக் கொண்டு “பெரிய கோவிலுக்கு” புறப்பட்டோம். இக்கோவில் முதலாம் ராஜராஜனால் கி.பி. 1003 லிருந்து 1010 க்கு இடைப்பட்ட காலகட்டத்தில் கட்டப்பட்டதாகும். பெரிய கோவிலின் வரலாற்றை பற்றி அறியாதவர்கள் இருக்க முடியாது. ஆகவே வரலாற்றில் அதிக கவனம் செலுத்தாமல், கோபுரங்களின் படங்களையும், அங்கு என்னை கவர்ந்த சிற்பங்களின் படங்களையும் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். கோவிலுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் கார்களை நிறுத்த பார்க்கிங் இடவசதி நன்றாக விசாலமாக இருந்ததால் எளிதாக வண்டியை நிறுத்த முடிந்தது. வண்டியிலிருந்து இறங்கி சாலையை கடக்கும் பொழுதே பிரமாண்டமான கேரளாந்தகன் திருவாயில் எங்களை வரவேற்றது. இதுவரை சக புகைப்படக்கலைஞர்களின் படங்களிலேயே கண்டு ரசித்த பெரிய கோவிலை நேரில் முதன் முதலில் காணும் பொழுது, சற்று நேரம் பிரமித்து தான் போனேன். வெயில் சுள்ளென்று சுட்டெரித்தது. ஆகையால் கோவிலில் கூட்டமும் சற்று குறைவாகவே இருந்தது.

 

பெரிய கோவிலின் கோபுரங்கள்

கேரளாந்தகன் திருவாயில்

கேரளாந்தகன் திருவாயில்

கேரளாந்தகன் திருவாயிலும் ராஜராஜன் திருவாயிலும்

கேரளாந்தகன் திருவாயிலும் ராஜராஜன் திருவாயிலும்

பெரிய கோவில் கோபுரம்

பெரிய கோவில் கோபுரம்

கோபுரத்தின் பின்புற தோற்றம்

கோபுரத்தின் பின்புற தோற்றம்

கோபுரத்தின் ஓர் பகுதி.

கோபுரத்தின் ஓர் பகுதி.

இங்கு வேலை செய்பவரைக் கொண்டு கோபுரத்தின் அளவை ஊகிக்கலாம்.

புத்தர் சிற்பம்

புத்தர் சிற்பம்

 

லட்சுமி யின் சிற்பம்

லட்சுமி யின் சிற்பம்

 

கீழக்குயில்குடி யில் உள்ள மகாவீரரின் சிற்பம்

கீழக்குயில்குடி யில் உள்ள மகாவீரரின் சிற்பம்

மேல உள்ள லக்ஷ்மியின் சிற்பத்தில், தலைக்கு மேல் உள்ள குடை மற்றும் பக்கவாட்டில் செதுக்கி இருக்கும் சிலைகளானது, மதுரை அருகில் உள்ள கீழக்குயில்குடி யில் உள்ள மகாவீரரின் சிற்பத்தில் காணப்படும் குடை மற்றும் சிலைகளை ஒத்திருக்கின்றன. ஆகவே சோழர்கள் காலத்தில் புத்த மற்றும் சமண மதத்தினரை சோழர்களின் மதத்தினுள் கொண்டு வருவதற்கான முயற்சியாக இது இருந்திருக்கலாம்.

மகிஷாசுர மர்தினியின் சிற்பங்கள்

 

 

ராஜராஜன் திருவாயிலில் காணப்படும் புத்தரின் சிற்பம்

பெரிய கோவிலை ஒரு முறை சுற்றி வரவும், கோவில் நடை திறக்கவும் நேரம் சரியாக இருந்தது. பின்பு பெருவுடையாரை பார்த்து விட்டு சென்று விடலாம் என உள்ளே போக முற்பட்டோம். ஆனால் கோவில் நடை அப்பொழுது தான் திறந்திருந்ததினால் கூட்டம் சற்று அதிகமாக இருந்தது. கூட்டத்தை பார்த்து பாலாஜியும் சித்துவும், ” நாங்க வெளியில இருக்கோம், நீங்க பெருவுடையாரை பார்த்து விட்டு வாங்க” என்று வெளியில் சென்று விட்டார்கள். நானும் மதியும் தரிசனத்தை முடித்துக் கொண்டு வெளியில் வந்தோம். அனைவர் முகத்திலும் களைப்பு சற்று அதிகமாக தெரியவே,  இன்றைக்கு சுற்றியது போதும், நாளை கங்கை கொண்ட சோழபுரத்துக்கு போய் வரலாம் என ‘ரூம்’ ற்கு கிளம்பினோம். கிளம்புவதற்கு முன் அங்கு விற்றுக் கொண்டிருந்த ‘தஞ்சாவூர் பொம்மை’யை வாங்க தவறவில்லை.

கங்கை கொண்ட சோழபுரம்

டுத்த நாள் காலையில், 250 வருடம் சோழர்களின் தலை நகரமாக திகழ்ந்த “கங்கை கொண்ட சோழபுரத்தில்”, முதலாம் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட “பிரகதீஸ்வரர் கோவில்” க்கு சென்றோம். தஞ்சையில் ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட கோவிலும், இக்கோவிலும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக காணப்பட்டாலும், அங்காங்கே சில வேறுபாடுகள். வெளிப்படையான வித்தியாசம், இரண்டு கோவில்களுக்கிடையேயான அளவு மற்றும் கோபுரங்களின் வடிவமைப்பு.  பின்பு கோவிலின் முகப்பில் உள்ள வேறுபாடு.

கங்கை கொண்ட சோழபுர கோவிலின் முன் புறத் தோற்றம்

கங்கை கொண்ட சோழபுர கோவிலின் முன் புறத் தோற்றம்

வெயிலின் காரணமாக அதிகமான படங்களை எடுக்க முடியவில்லை. ஆனாலும், சக புகைப்படக்கலைஞர்கள் எடுத்த படங்களில் அதிகமாக “inspire” ஆன சிற்பங்களை மட்டும் எடுத்துக் கொண்டேன்.
அவற்றில் சில…

நடராஜர்

நடராஜர்

 

 சண்டேச அனுக்கிரக மூர்த்தி

சண்டேச அனுக்கிரக மூர்த்தி

 

லட்சுமி

லட்சுமி

 

சரஸ்வதி

சரஸ்வதி

கோவிலை சுற்றி முடித்துக் கொண்டு ராஜேந்திரரின் மாளிகை இருந்த இடத்தை பார்க்க சென்றோம்.  மாளிகையின் இன்றைய நிலையை காண மிகவும் வருத்தமாக இருந்தது. பெரிய மாளிகையின் ஒரு பகுதி மட்டுமே, அதுவும் அடித்தளம் மட்டுமே எஞ்சி இருக்கிறது.

ராஜேந்திரரின் மாளிகையின் ஒரு பகுதி

ராஜேந்திரரின் மாளிகையின் ஒரு பகுதி

இரண்டு நாள் போனதே தெரியவில்லை. வெயில் சற்று அதிகமாக இருந்தாலும், நீண்ட நாளாக பார்க்க வேண்டும் என எண்ணிக்கொண்டிருந்த சோழர்களின் கட்டிடக்கலையின் அதிசயத்தை காணும் பொழுது வெயில் எல்லாம் ஒரு பொருட்டாகத் தெரியவில்லை. இந்த பயணம் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் மிகவும் பிடித்தமான பயணமாக அமைந்தது. இது போன்ற இன்னுமொரு பயணத்தை சீக்கிரமே திட்டமிட்டு ஏற்பாடு செய்ய வேண்டும்….

 

 

தாராசுரம்

ராஜகம்பீரன் மண்டபம்
சென்ற வருட கோடை விடுமுறையில் நானும் மதியும் ஹம்பி க்கு சென்று வந்தோம். இம்முறை எங்கே செல்வது என யோசிக்கையில் கும்பகோணமும் தஞ்சாவூரும்  நினைவுக்கு வந்தது. வெயில் சுட்டெரிக்கும் மே மாதத்தில் தானா  ஹம்பி யும் கும்பகோணமும் நினைவிற்கு வர வேண்டும்!!…. சரி, எப்படியோ சமாளிக்கலாம் என துணிந்து, தலைக்கு தொப்பி, காலுக்கு சாக்ஸ் என தேவையானதை எடுத்துக் கொண்டு குடும்ப சகிதமாக கிளம்பி விட்டோம் . 2 நாட்கள் செல்லலாம் என திட்டமிட்டோம். ஏனெனில், அதற்கு மேல் ‘சின்னவர்’ வெயில் தாங்குவாரா  என்ற சந்தேகம் இருந்தது. அதனால் முக்கியமாக, தாராசுரம், தஞ்சை பெரிய கோவில் மற்றும் கங்கை கொண்ட சோழபுரம் ஆகியவற்றை மட்டும் பார்த்துவிடலாம் என்று முடிவெடுத்தோம்.
முதல் நாள் காலையில் தாராசுரம் மற்றும் தஞ்சை செல்லலாம் என கிளம்பினோம்.
தாராசுரம்
கும்பகோணத்திலிருந்து 5 கி .மீ. தொலைவில் அமைந்துள்ளது தாராசுரம். இக்கோவில் சோழப்பேரரசன் இரண்டாம் ராஜராஜனால் 12-ம் நூற்றாண்டில் கட்டப்பெற்றுள்ளது. சிறிய கோவில் தான் என்றாலும் அங்கிருக்கும் சிற்பங்களும், அதன் வேலைப்பாடுகளும் மனதை கவரும் என்பதில் சந்தேகமில்லை. கோவிலின் பிரதான மண்டபமான ராஜகம்பீரன் திருமண்டபத்தை தேர் வடிவிலும், அதை பாய்ந்து செல்லும் 2 குதிரைகள் இழுத்துக் கொண்டு போவதைப் போலவும் மிக அழகாக வடிவமைத்திருக்கிறார்கள். மண்டபத்தின் தூண்களில் சோழர்களின் சிங்க உருவங்களை மறந்து விடவில்லை. மேலும் அங்கிருக்கும் பிற தூண்களில் சிறிய வடிவில் பல சிற்பங்கள். ஆங்காங்கே புத்தர் சிலையும் செதுக்கப்பட்டிருக்கின்றன.
ராஜகம்பீரன் மண்டபம்

ராஜகம்பீரன் மண்டபம்

ராஜகம்பீரன் மண்டபத்தின் தூண்கள்.

ராஜகம்பீரன் மண்டபத்தின் தூண்கள்.

விமானத்தின் பக்கவாட்டுத் தோற்றம்.

விமானத்தின் பக்கவாட்டுத் தோற்றம்.

பின்புறத் தோற்றம்.

பின்புறத் தோற்றம்.

ராஜகம்பீரன் மண்டபத்தின் குதிரையின் கீழ் காணப்படும் புத்தர் சிலை.

ராஜகம்பீரன் மண்டபத்தின் குதிரையின் கீழ் காணப்படும் புத்தர் சிலை.

புத்தரின் இருபக்கங்களிலும் வாயிற்காவலர்களான ஜெயன் விஜயன் ஐக் காணலாம்.

மேலும் இங்குள்ள ஓர் படிக்கட்டின் பக்கவாட்டு சுவரில் குஞ்சரக்காளை எனும் சிற்பத்தைக் காணலாம். காளை உடலும், யானை உடலும் தலைப்பகுதியில் ஒன்று சேர்வதை போல் காணப்படும் இவ்வகையான சிற்பம் சிறப்புமிக்கவை.

குஞ்சரக்காளை

குஞ்சரக்காளை

வாலி சுக்ரீவன் ஆகியவருடைய சண்டை காட்சியும் அப்பொழுது மறைமுகமாக தாக்கிய ராமனின் சிற்பமும் இங்கு இடம்பெற்றுள்ளது.

வாலி, சுக்ரீவன் மற்றும் ராமர்.

வாலி, சுக்ரீவன் மற்றும் ராமர்.

மேலும் இங்கு எடுத்த வேறு சில படங்கள்.

கர்ப்பிணிப் பெண்ணை தாங்கி கொண்டு வரும் பெண்டிர்.

கர்ப்பிணிப் பெண்ணை தாங்கி கொண்டு வரும் பெண்டிர்.


அர்த்தநாரி சூரியன்

அர்த்தநாரி சூரியன்

நான்கு திருமுகங்களும், எட்டு கைகளுடனும் காணப்படும் அர்த்தநாரி சூரியன்.
மகிஷாசுரமர்த்தினி

மகிஷாசுரமர்த்தினி ( கொற்றவை )

சாகச விளையாட்டுக் காட்சிகள் சில.

 

தாராசுரம் கோவிலின் சிற்பங்களை ரசித்து விட்டு புறப்படுகையில் மதியம் ஆகிவிட்டிருந்ததினால், தஞ்சையில் மதிய உணவை முடித்துக் கொண்டோம். காலையில் தாராசுரத்தில் தோழி லக்ஷ்மியும் சேர்ந்து கொண்டதினாலேயே முக்கியமான சிற்பங்கள் எவை என்பதை தெரிந்து கொள்ள முடிந்தது. மேலும் ஒவ்வொரு சிற்பங்களுக்கும் அவருடைய விளக்கங்கள் சோழர் காலத்துக்கே நம்மை கொண்டு சென்றது எனவும் கூறலாம். தோழி லக்ஷ்மிக்கு நன்றிகள் பல.
தஞ்சையிலும், கங்கை கொண்ட சோழபுரத்திலும் எடுத்த புகைப்படங்களை அடுத்த பதிவில் பகிர்ந்து கொள்கிறேன்.

சிற்பங்களின் அடையாளங்கள் மற்றும் விளக்கங்கள் – குடவாயில் பாலசுப்ரமணியன் அவர்களின் “தாராசுரம் ஐராவதேசுவரர் திருக்கோவில்” நூலிலிருந்து.

 

லில்லி

இன்று காலை சற்று சீக்கிரம் எழுந்து கொண்டதினால் நேரம் சற்று அதிகமாக கிடைத்தது. என்ன செய்வதென்று யோசிக்கையில், வீட்டு தோட்டத்தில் லில்லி மொட்டு அப்பொழுது தான் கொஞ்சம் கொஞ்சமாக விரிய ஆரம்பித்திருந்தது. என்னிடமிருந்த Canon 100mm Macro லென்ஸ், background அழகாக வட்ட வடிவமாக சுழல்வதைப் போன்ற தோற்றமளிக்கும் படங்களைக் கொடுக்கக் கூடிய Helios லென்ஸ் மற்றும் ரஷ்யா விலிருந்து வரவழைத்த Tair 11A 135mm லென்ஸ்களில் படமெடுக்கலாம் என்று அனைத்தையும் தூக்கிக்கொண்டு போய் படமெடுத்து தள்ளிவிட்டேன்.

இதோ இன்று எடுத்த படங்களிலிருந்து சில…

100 mm Macro வில் எடுத்த படங்கள்….

 

 

Helios லென்ஸில் எடுத்த படங்கள்…

முன்னொரு முறை இதே லில்லி பூத்திருக்கும் பொழுது எடுத்த படம் இது. இது மாதிரியான background இம்முறை கிடைக்கவில்லை. பூவிலிருந்து நாமிருக்கும் தூரம் மற்றும் பூவிலிருந்து background ன் தூரம் ஆகியவற்றை பொறுத்தே “Swirly Bokeh” ன் தரம் அமையும்.

இம்முறை எடுத்த படங்கள்…

 

Tair 11A 135mm -ல் எடுத்த படம்…

இந்த லென்ஸில் 100 mm போலவோ, Helios போலவோ பூவிற்கு அருகில் சென்று படமெடுக்க இயலாது. குறைந்தது 1.2m தூரத்திலிருந்து படமெடுக்க வேண்டும்.

ஒரு வழியாக காலை நேரத்தை பயனுள்ளதாக கழித்துவிட்டேன் என நினைத்துக் கொண்டிருக்கையில், “அம்மா பசிக்குது…” என கடைக்குட்டி, “காலையில் சமையல் வேலையும் செய்ய வேண்டும்” என்பதை ஞாபகப்படுத்தவே, வேகமாக அடுப்பறையில் நுழைந்து சட்னிக்காக வெங்காயம் நறுக்க ஆரம்பித்தேன்……..

அம்பேத்கர் சமூக கணினி மையம் – இரண்டாவது ஆண்டு விழா

சென்ற சனிக்கிழமை 14 ஏப்ரல் அன்று பெங்களூரின் “குருப்பன்பாள்யா” எனும் பகுதியில் நடந்து வரும் “Ambedkar Community Computing Center”(சுருக்கமாக ‘AC3’) -ன் 2-வது ஆண்டு விழா மற்றும் நூலக திறப்பு விழாவிற்கு மதி மற்றும் சித்தார்த்துடன் நானும் பாலாஜியும் சென்றிருந்தோம். முதலில் AC3 பற்றி ஒரு சிறிய அறிமுகம்.

AC3, இது “குருப்பன்பாள்யா” பகுதியில் இருக்கும் குழந்தைகளுக்கு, சுதந்திர மென்பொருள் மூலமாக தகவல் தொழில்நுட்பம் மற்றும், குழந்தைகளுக்கு கடினமாக இருக்கும் கணக்கு, அறிவியல், ஆங்கிலம் ஆகியவற்றை மிக எளிதாகவும், சுவாரஸ்யமாகவும் பயிற்றுவிக்கும் ஓர் களம். குறிப்பாக இப்பகுதி குழந்தைகளுக்கு கணினி என்பது கனவாக இருந்த நேரத்தில், இக்களம் மூலமாக அதன் தொழில்நுட்பத்தை சில தன்னார்வ தொண்டூழியர்கள் இம்மையத்தை ஆரம்பித்து பயிற்றுவித்து வருகின்றனர். AC3 2007ம் வருடமே ஆரம்பித்திருந்தாலும், சில காரணங்களினால் தொடர்ந்து நடத்த முடியாமல் போய்விட்டிருந்தது. மறுபடியும் அந்த பகுதியில் இருக்கும் குழந்தைகளை ஒன்று திரட்டி 2016 ம் ஆண்டு Free Software Movement Karnataka -ன் Volunteer ஷிஜில் மறு துவக்கம் செய்துள்ளார். நாங்கள் சென்றது அதன் 2 வது ஆண்டுவிழாவிற்கே.

“Reading is exercise for our mind” எனும் கூற்றில் அதீத நம்பிக்கை கொண்ட இப்பகுதி குழந்தைகள் தங்களுக்காக ஓர் சிறிய நூலகத்தை ஆரம்பித்திருக்கிறார்கள். அதற்கான புத்தகங்களையும் அவற்றை அடுக்குவதற்கான புத்தக அலமாரியையும் பலர் நன்கொடையாக கொடுத்திருந்தார்கள்.

விழா ஆரம்பித்த நிமிடத்திலிருந்து முடியும் வரை ஒவ்வொரு நிகழ்வும் நம்மை வியப்பில் ஆழ்த்தின. குறிப்பாக அவர்களின் நடனமும், அவர்களே எழுதி இசையமைத்திருந்த பாட்டும், நாடகமும்.. அப்பப்பா!!! அனைத்தும் அருமை. அக்குழந்தைகளின் நடனம், பாட்டு, இசையமைப்பு ஆகிய திறமைகளுக்கு முன், தேர்ந்த கலைஞர்களும் தோற்று விடுவார்கள். அவ்வளவு நேர்த்தி. “கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்த முடிந்தாலே நாங்கள் சிகரத்தை எளிதாக எட்டிவிடுவோம்” என்பதை நடைமுறையில் நிரூபித்தனர்.

இந்த விழாவின் இன்னொரு சிறப்பம்சம், விழா மற்றும் அதில் இடம்பெற்ற நிகழ்ச்சிகள், விழாவிற்கு தேவையான மேடை, சௌண்ட் சிஸ்டம் ஆகியவற்றை அந்த பகுதி குழந்தைகளே ஏற்பாடு செய்தது தான்.

அங்கு எடுத்த புகைப்படங்களில் சில….

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களான ரேணுகா மற்றும் வினோத்….

 

அப்பகுதியின் நடனப்புயல் அஸ்வினி….

 

தானே எழுதி இசையத்த பாடலைப் பாடும் வருண்....

தானே எழுதி இசையத்த பாடலைப் பாடும் வருண்….

 

நாடகத்திலிருந்து ஓர் காட்சி....

நாடகத்திலிருந்து ஓர் காட்சி….

 

volunteers களுடன் AC3 குழந்தைகள்....

volunteers களுடன் AC3 குழந்தைகள்….

பெயரிடப்படாத சிறுகதை

சிறுகதையில்(ஒரு பக்க கதை என்றே சொல்லலாம்) என் முதல் முயற்சி. பல நாட்களாக பதிவிட நினைத்து இன்று தான் வேளை வந்திருக்கிறது.


சூரியன் மறையும் சாயங்கால வேளையில், சாலையெங்கும் ஒரே வண்ணத்திலான பூக்கள் பூக்க ஆரம்பித்ததைப் போல் பள்ளியிலிருந்து சீருடை அணிந்த குழந்தைகள் வெளி வரத் தொடங்கினர். அதில், அன்று புதிதாக பூத்த மலரைப் போல் மிகவும் பிரகாசமாகத் தென்பட்டாள் சரயு. மிகவும் மகிழ்ச்சியாக தன் தோழிகளுடன் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தாள். ஐந்தாம் வகுப்பில் படிக்கும் சரயு, சராசரியான மதிப்பெண்களை எடுப்பவள். தன் அம்மாவிடம் மார்க் கார்டில் கையெழுத்து வாங்கும் சமயமெல்லாம் தவறாது, ” எப்பொழுது தான் முதல் பத்து ரேங்க்-குள் வரப்போறே?” என வசை வாங்குபவள். எவ்வளவு திட்டு வாங்கினாலும், பெரியவர்களை எதிர்த்து ஒரு வார்த்தை கூட பேசாதவள். தன் அண்ணனை விட நிறம் சற்று குறைவாக இருப்பதினாலோ என்னவோ, அம்மாவின் அன்பும், அவளுக்கு சற்று குறைவாகவே கிடைத்தது.

அன்றைய அவளுடைய மகிழ்ச்சியில் காரணம் இல்லாமல் இல்லை. அப்பொழுது நடந்து முடிந்திருந்த தேர்வில், வகுப்பில் நன்றாகப் படிக்கும் மாணவிகளை விட மதிப்பெண்கள் அதிகமாக பெற்று மூன்றாவது ரேங்க் வாங்கி இருந்தாள். அம்மா அவளுக்கு தினமும் கொடுக்கும் காசையெல்லாம் ஒரு வாரமாக மிச்சப்படுத்தி, வீடு செல்லும் வழியில் ‘ஜிகர்தண்டா ‘ வாங்கி குடித்து, பசித்து கொண்டிருந்த வயிற்றை கொஞ்சம் சாந்தப்படுத்தினாள். மீண்டும் வீடு நோக்கி மெதுவாக நண்பர்களுடன் நடக்க ஆரம்பித்தாள். உடன் வந்த நண்பர்கள் ஒவ்வொருவராக அவரவர் வீடுகளை அடைந்தனர். கடைசி ஐந்து நிமிடங்கள் சரயு தனியாக நடக்க வேண்டி இருக்கும். அப்பொழுது அவள் மனதில், அன்றைக்கு வீட்டில் நடக்கவிருக்கும் நிகழ்வுகள் எல்லாம் காட்சிகளாக ஓடின. அவளின் ரேங்க் கார்டை பார்த்த அம்மா, மகிழ்ச்சியில் அவளை கட்டி அணைத்து முத்தம் கொடுத்து, அவளுக்கு பிடித்த தக்காளி சாதத்தை இரவு உணவுக்காக சமைப்பாள். பின் அப்பா வார இறுதியில் வீட்டிற்கு வரும் பொழுது, அம்மா அவளைப் பற்றி பெருமையாக பேசுவாள். என்றெல்லாம் மனதில் நினைத்துக் கொண்டே வீடு வந்து சேர்ந்தாள்.
வீடு வந்து சேர்ந்தவளுக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது. அவள் அம்மா, உறவினர் ஒருவர் வீட்டு நிச்சயதார்த்தத்திற்கு தன் அண்ணனை அழைத்துக் கொண்டு சென்று விட்டிருந்தாள். வீட்டில் பாட்டி மட்டுமே. அவள், தட்டில் பிசைந்து வைத்துக் கொடுத்த சாதத்தை சாப்பிட்டுவிட்டு வீட்டுப்பாடத்தை முடிக்க புத்தகப்பையை தன் பக்கமாக இழுத்து வைத்துக் கொண்டாள். மறுபடியும் ஒருமுறை மார்க்கார்டை ஆசையாக பார்த்துக் கொண்டிருந்தாள். அம்மா வந்தவுடன் கண்டிப்பாக அவளிடம் காண்பித்துவிட வேண்டுமென்று நினைத்துக் கொண்டாள். இரவு 8 மணி ஆகியும் அம்மா வீட்டிற்கு வரவில்லையே என்ற சோகம் மெலிதாக அவள் மனதில் ஊடுருவ ஆரம்பித்தது. அந்த எண்ணத்திலிருந்து மீளாமல், அடுத்த நாளைக்கான வகுப்பு அட்டவணையின் படி புத்தகங்களை பைக்குள் அடுக்கலானாள். எல்லா வேலைகளையும் தவறாமல் முடித்து விட்டு மீண்டும் ஒரு முறை கடிகாரத்தை பார்த்தாள். மணி 8:45. தூக்கம் மெது மெதுவாக அவள் கண்களில் எட்டி பார்க்க ஆரம்பித்திருந்தது. தனக்கு மிகவும் பிடித்த பொம்மையை படுக்கையில் தன்னருகில் வைத்துக் கொண்டு அம்மாவிற்காக காத்திருக்க ஆரம்பித்தாள். எப்பொழுது தூக்கம் வந்தது எனத் தெரியவில்லை சரயுவிற்கு. கண்முழித்து பார்க்கும் பொழுது காலை 6 மணி. அவசரமாக எழுந்தவளுக்கு பக்கத்தில் படுத்திருந்த அம்மாவையும், அண்ணாவையும் கண்டவுடன் ஒரே சந்தோஷம். வேகமாக புத்தகப் பையிலிருந்த மார்க்கார்டை எடுத்துக் கொண்டு அம்மாவை எழுப்பினாள். “அம்மா எழுந்திருங்க. பாருங்கம்மா, கிளாசில் நான் மூன்றாவது ரேங்க் வாங்கியிருக்கிறேன். எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்ததும்மா. வந்தவுடன் உன்னிடம் தான் காண்பிக்கணும்னு நெனச்சேன். நீ வெளியில போயிருந்ததினால நேத்தே காண்பிக்க முடியலை” என தன் மனதில் அடக்கி வைத்திருந்த சந்தோஷத்தை எல்லாம் கொட்ட ஆரம்பித்தாள். ஆனால் அவள் அம்மாவோ, இரவு சற்று தாமதமாக வந்ததினால் மிகவும் களைப்புடன் அயர்ந்து தூங்கி கொண்டிருந்தாள். சரயு பேசிக்கொண்டே போனதில் சற்று கோபமடைந்த அவள் அம்மா, ” சீ தள்ளிப் போ பிசாசே.. கொஞ்ச நேரம் தூங்க விட்றியா, சும்மா தொண தொணன்னு ஏதோ பேசிகிட்டு”, என அவளை தள்ளி விட்டு திரும்பி படுத்துக் கொண்டாள். சரயு மறுபடியும் அம்மாவை எழுப்ப முயன்று தோற்றுப் போனாள். பின்பு, பள்ளி செல்வதற்காக குளித்து முடித்து ரெடியாகி கிளம்பும் சமயம், அம்மாவிடம் கார்டை நீட்டினாள். எப்பொழுதும் விழும் திட்டுக்கள் இல்லாமல், கார்டில் கையெழுத்திட்டாள் அம்மா. அன்றைய தினம் அவளுக்கு ஏமாற்றம் மிகுந்த தினமாகவே கழிந்தது. சரயுவால் இந்த ஏமாற்றத்தை அவள் மனதிலிருந்து அவ்வளவு எளிதாக அகற்றி விட முடியவில்லை.
இரண்டு குழந்தைகளுக்கு தாயாகிவிட்ட சரயுவின் மனதில் இன்னமும் அந்நிகழ்வு ஒட்டிக் கொண்டிருந்தது. இதே மாதிரியான நிகழ்வு தன் வாழ்வில் மற்றொரு முறை எட்டிப் பார்க்கும் என்று தன் கனவில் கூட நினைத்திருக்கவில்லை அவள். ஆம், அதே மாதிரியான ஒரு நிகழ்வு தான், ஆனால் இம்முறை, மார்க்கார்டை தூக்கி கொண்டு வந்து நின்றது தன குழந்தைகளுள் ஒருவரல்ல, தன்னிடம் டியூசன் படித்த சரளா. பத்தாவது படிக்கும் சமயம் டியூசன் வந்து சேர்ந்த சரளா, பள்ளியில் எந்த பாடத்திலும் “பாஸ் மார்க்” வாங்காமல், டீச்சர்களினால் ” நீ ஒன்னும் தேறமாட்டே, பத்தாவது பாஸ் பண்றதே கஷ்டம் தான்” என நம்பிக்கையில்லா வார்த்தைகளை எதிர்கொண்டவள். தன் அம்மா, வீதிகளை சுத்தம் செய்யும் துப்புரவு தொழிலை செய்து, தன்னைப் படிக்க வைக்க எவ்வளவு கஷ்டப்படுகிறாள் என்பதை நன்றாக உணர்ந்தவள். பத்தாவது பொதுத் தேர்வில், சரயுவின் உதவியினாலும் சரளாவின் உழைப்பினாலும், அவள் எல்லா பாடங்களிலும் தேர்ச்சி பெற்று மிகுந்த உற்சாகத்துடன் சரயு முன்பு வந்து நின்றிருந்தாள். சரயுவிடம், “அக்கா, மார்க் பார்த்துட்டு மொதோ உங்க கிட்ட தான் காண்பிக்கணும் னு இங்க வந்தேன். அம்மா கிட்ட கூட காண்பிக்கலைக்கா ” என்றவளை பார்க்கும் பொழுது சரயுவிற்கு தன் சிறு வயது நிகழ்வு ஞாபகத்திற்கு வராமல் இல்லை. தன்னிடம் பல குழந்தைகள் டியூசன் படித்தாலும், ஏனோ சரளாவின் வெற்றி சரயுவிற்கு, தானே பரீட்சையில் வெற்றி பெற்ற மாதிரியான சந்தோஷத்தையும் மன நிறைவையும் தந்தது. அந்த சந்தோஷத்தில் அப்படியே அவள் நெற்றியில் முத்தமிட்டு, அருகிலிருந்த கடைக்கு கூட்டிச் சென்று ஒரு பெரிய சாக்லெட்டை வாங்கிக் கொடுத்து “முதலில் அம்மாவிடம் கொண்டு போய் மார்க்கைக் காண்பி” என சரளாவை அவள் வீட்டிற்கு அனுப்பி வைத்தாள்.
தன் சிறு வயதில் நிகழ்ந்த அந்த நிகழ்வினால் எப்பொழுதும் பாரமாக உணரும் சரயுவின் மனம், இன்று சற்று லேசாகிப் போனதில் ஐயமில்லை.


படித்து விட்டு கருத்துக்களை பகிர்ந்தால் மகிழ்ச்சியடைவேன்.

 

மயான கொள்ளை – காவேரிப்பட்டிணம்

இரண்டாவது தடவையாக மயான கொள்ளை திருவிழாவிற்காக காவேரிப்பட்டிணம் சென்றிருந்தேன். ஏற்கனவே இந்த திருவிழாவைப் பற்றி எழுதி இருக்கிறேன். படிக்காதவர்கள் இங்கு சென்று படிக்கலாம். இம்முறை சில மாற்றங்கள் செய்திருந்தார்கள் காவேரிப்பட்டிணத்தில். முதல் முறை நாங்கள் சென்றிருந்த காரை கோவிலில் இருந்து வெகு தூரத்தில் தான் நிறுத்துவதற்கு இடம் கிடைத்திருந்தது. இம்முறை சற்றே அருகில் நிறுத்த முடிந்தது. மேலும் நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள், வாயில் சூலாயுதம் குதிக்க கொள்ளும் வழக்கம் இந்த திருவிழாவில் பிரசித்தி. சென்றமுறை மிக நீளமான அலகை அதிக மக்கள் குத்தி கொண்டிருந்ததை காண முடிந்தது. ஆனால் இம்முறை 5 அடிக்கு மேல் குத்திக் கொள்ளக் கூடாது என கோவில் நிர்வாகம் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தது.

சென்றமுறை மயானத்திற்கு செல்லாமல் ஊர் திரும்பி இருந்தோம். இம்முறை கண்டிப்பாக மயானத்திற்கு செல்ல வேண்டும் என நண்பர்கள் கூறியதிற்கிணங்க மயானத்திற்கும் சென்றுவிட்டே திரும்பினோம்.

அங்கு எடுத்த புகைப்படங்களில் சில….

இம்முறையும் காளியாக ஒப்பனை செய்து கொள்பவர்களின் முகங்களைத் தான் அதிகம் படம் எடுத்தேன்.

ஒப்பனை முடிந்த பின்னர்….

மயானத்தில் …