சித்ரதுர்கா கோட்டை 

கோவிட்-ன் தாக்கம் சற்று குறைவாக இருப்பதினால், அருகில் இருக்கும் ஊர்களுக்கு சென்று வரலாம் என முடிவானது. முதலில் சித்ரதுர்கா செல்லலாம் என பாலாஜி தான் யோசனை கூறினார். நான் வேறு சில இடங்களையும் இணையத்தில் தேடிக் கொண்டிருந்தேன். ஆனால் சித்ரதுர்கா கோட்டைக்கே செல்லலாம் என பாலாஜி பல முறை கூறிக் கொண்டே இருந்தார். எதற்கென்று தெரியவில்லை, சரி ரொம்ப ஆசைப் படுறாரே, அங்கேயே செல்லலாம் என சம்மதித்தேன். எப்பொழுதும் போல் காலை 5 மணிக்கே, என்னையும் சித்துவையும் கிளம்ப வைத்து விட்டார். ஜூலை மாதம், மேலும் பெங்களூரில் கடந்த சில மாதங்களாக கிட்டத்தட்ட தினமும் மழை என்ற நிலை, ஆகையால், கோட்டைக்கு செல்லும் வழி முழுவதும் வெயிலின் தாக்கமே இல்லாமல், சிலு சிலுவென்ற காற்றுடன் மழைதூறலும் சேர்ந்து எங்களின் பயணத்தை மேலும் அழகாக்கின. பூனே செல்லும் தேசிய நெடுஞ்சாலை என்பதினால், கார் பயணம் சற்றும் அலுப்பை தரவில்லை. அதன் காரணமாக மூன்றரை மணி நேரத்தில் அங்கு சென்றடைந்தோம். 

சித்ரதுர்கா கோட்டை வாயில் மிக பிரமாண்டமாக நின்று எங்களை வரவேற்றது. இந்த கோட்டை 11ம் நூற்றாண்டிலிருந்து 13ம் நூற்றாண்டு வரை சிறு சிறு பகுதிகளாக, அப்பொழுது ஆட்சியில் இருந்த சாளுக்கியர்களும் ஹொய்சளர்களும் கட்டி முடித்திருக்கிறார்கள். பிற்காலத்தில் ஆட்சியில் இருந்த விஜயநகர பேரரசை சேர்ந்த நாயக்கர்களும், இக்கோட்டையை விரிவுபடுத்தியதில் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். 1779 ம் வருடம் ஹைதர் அலி யிடமிருந்து, அவர் மகன் திப்பு சுல்தானை வீழ்த்தி, ஆங்கிலேயர்கள் இக்கோட்டையை தங்கள் வசப்படுத்தி கொண்டுள்ளனர். இக்கோட்டையில் பல கோவில்களும், ஒரு மசூதியும் இருக்கின்றன. மசூதி, ஹைதர் அலி காலத்தில் கட்டப்பட்டிருக்கிறது. மசூதி இன்னும் இப்பொழுது ஆட்சியில் இருப்பவர்களின் கவனத்தை ஈர்க்கவில்லை போலும். கோட்டையின் உள்ளே, தானியங்கள், எண்ணெய் மற்றும் தண்ணீர் ஆகியவற்றை சேமித்து வைத்துக் கொள்ள பல வசதிகள் செய்யப்பட்டிருக்கின்றன. ஆகையால் கோட்டையில் எப்பொழுதும் தண்ணீர் பஞ்சமே வந்ததில்லை என கூறப்படுகிறது. மேலும் இக்கோட்டையைப் பற்றிய தகவல்கள் பல இணையத்தில் கிடைக்கிறது. அங்கு எடுத்த புகைப்படங்களை இங்கு பகிர்கிறேன். 

கோட்டை வாயிலும், மதில் சுவற்றில் இருக்கும் சிற்பங்களும். 

கோட்டை கிட்டத்தட்ட 1500 ஏக்கரில் விரிந்து கிடக்கிறது. அத்தனை தூரம் நடக்க சற்று சிரமமாகவே இருந்தது. மேலும் கோட்டையில் அமைந்துள்ள படிகள் ஒவ்வொன்றும் சற்று உயரமாக இருந்ததினால் மேலே ஏறுவதற்குள் கால் முட்டி போதும் என கெஞ்ச ஆரம்பித்து விட்டன. ஆனால் பாலாஜியும் சித்துவும் கொஞ்சம் கூட கஷ்டப்படாமல் சந்தோஷமாக சுற்றி பார்த்து வந்தனர்.  எதற்கு பாலாஜி இங்கு செல்லலாம் என வற்புறுத்தினார் என இப்பொழுது புரிந்தது எனக்கு. மலை அல்லது இம்மாதிரியான கோட்டை போன்ற இடங்களுக்கு செல்வதென்றால் அவ்வளவு சந்தோஷம் பாலாஜிக்கு. நமக்கு தான் இந்த இடங்களைப் பற்றி கேட்டாலே வயிற்றில் கொஞ்சம் புளியை கரைக்கிறது. 

எப்படியோ கால் வலியுடன் கோட்டையை சுற்றி பார்த்து முடித்துவிட்டு அடுத்து எங்கு செல்வது என்ற திட்டமிடலுடன் முடிந்தது இப்பயணம்.