சத்யா – 3

முந்தைய பதிவில், சத்யாவை அறிமுகப்படுத்தும் போது, அவளின் கணவன்,  குடிப்பழக்கத்தினால் இவளை அடித்து கொடுமை படுத்தியதாக கூறி இருந்தேன் அல்லவா… அதை பற்றி இந்த பதிவில் கொஞ்சம் பேசலாம் என இருக்கிறேன். 

ல்யாணம் ஆன முதல் நாள் தான் அவனுக்கு வலிப்பு இருப்பது அவளுக்கு தெரிந்திருக்கிறது. ஆகையால் அவன் அருகில் செல்லவே இவளுக்கு பயம். அதில் தொடங்கிய கருத்து வேறுபாட்டினால், இன்றும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறாள். அவனோ முரடன், இவளோ செக்ஸ் பற்றிய சரியான புரிதல் இல்லாத வெகுளி. ஆதலால், நிறைய நேரத்தில் அவனிடம் கண் மண் தெரியாமல், ரத்தம் வரும் அளவிற்கு அடி வாங்கி இருக்கிறாள். சில நேரம் தையல் போடும் அளவிற்கு கூட. இதை எல்லாம் பொறுத்துக் கொள்ள முடியாமல் தான் இங்கு பெங்களூரில் தனித்து வாழ்ந்து வருகிறாள். தான் இருக்கும் இடம் அவனுக்கு தெரியாமல் இருக்க வேண்டும் என்பதற்காகவே அடிக்கடி வீட்டையும், போன் நம்பரையும் மாற்றி விடுவாள். 

த்தனைக்கும் வீட்டில் பார்த்து ஏற்பாடு செய்த மாப்பிள்ளை தான் இவள் கணவன். பிரச்சனை வரும் பொழுதெல்லாம் அம்மா, அப்பாவிடம் சென்று முறையிடுவாள். ஒன்றும் பலனில்லை, எல்லா பெற்றோர் மாதிரியே அவர்களும், இவளையே சகித்துக் கொண்டு போகச் சொல்லி இருக்கிறார்கள். எத்தனை நாள் தான் பொறுத்து போக முடியும். அதனால் அமைதியாக தனித்து வாழ்ந்து வருகிறாள். ஆனாலும் அவ்வப்பொழுது இவள் வீட்டிற்கு வந்து தொல்லை கொடுத்துக் கொண்டே தான் இருப்பான் அவன். 

ப்பொழுது கூட 6 மாதத்திற்கு முன் இவள் வீட்டிற்கு வந்து தங்கி இருந்திருக்கிறான். எப்பொழுதும் போலவே சண்டை. ஆனால் இம்முறை, தைரியமாக, “சண்டை போடுவதென்றால் இங்கு இருக்க வேண்டாம், வீட்டை விட்டு போய்விடு”, என கண்டிப்புடன் சொல்லி இருக்கிறாள். அவன் வீட்டை விட்டு வெளியேறியவுடன் கொஞ்சம் நிம்மதி அடைந்திருக்கிறாள். ஆனால் அந்த நிம்மதி அதிக நாள் இருக்கவில்லை. ஓர் நாள், அதிகாலை இவளது உறவினர் யாரோ போன் செய்து, “மார்க்கெட்டில் இருக்கும் கால்வாயில் உன் புருஷன் இறந்து கிடக்கிறான்” என சொல்லி இருக்கிறார். உடனே பதறி அடித்துக் கொண்டு அங்கு சென்று பார்த்திருக்கிறாள். அப்படி ஒன்றும் அங்கு நடக்கவில்லை என அங்கிருந்தவர்கள் கூறி இருக்கிறார்கள். மேலும் சிலர் அவனை அங்கு பார்த்ததாகவும் தெரியப்படுத்தி இருக்கின்றனர். அதைக் கேட்டு கொஞ்சம் அமைதியாகி  இருக்கிறாள். ஆனாலும் மனதில் ஒருவித பயம். அதை அதிகமாக்கும் விதமாக கணவன் வீட்டு வழியாக வந்த உறவினர்கள் இவளை, “நீ தான் ஆள் வைத்து ஏதோ செய்துவிட்டாய்” என பழி சுமத்தி இருக்கிறார்கள். 

தை எல்லாம், வேலை குறைவாக இருக்கும் ஓர் நாள் என்னிடம் சொல்லி அழுது கொண்டிருந்தாள். நானும், “சரி அதை பற்றி எல்லாம் கவலைப்படாதே, நீ எதுவும் செய்யவில்லை என்று உன் மனதுக்கு தெரியும் அல்லவா, மற்றவர்கள் சொல்வதை காதில் வாங்கி கொள்ளாதே” என தைரியம் கூறிக் கொண்டிருந்தேன். வீட்டில் அன்று அவள் அவ்வளவாக பேசவும் இல்லை, முகத்தில் எப்பொழுதும் இருக்கும் சந்தோஷமும் இல்லை. ஏதேதோ சொல்லி தேற்றிக்கொண்டிருக்கும் பொழுது பாலாஜி அங்கு வந்தார். எல்லாவற்றையும் பக்கத்து அறையில் இருந்து கேட்டுக் கொண்டிருந்தார் போலும். “விடு சத்யா, இப்பொழுது பிள்ளைகளை எப்படி நன்றாக படிக்க வைப்பது என்பதில் மட்டும் கவனம் செலுத்து” என்று அவர் பங்குக்கு தைரியம் கூறி கொண்டிருந்தவர், என்னிடம், ” இனிமேல் ஏதாவது பிரச்சனை என்றால் சத்யாவிடம் சொல்லிவிடு வனிலா, ரௌடிகளை வைத்து அவள் பார்த்து கொள்வாள்” என என்னிடம் கூறியவுடன் எனக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை. அங்கு இருந்த இறுக்கம் சற்று குறைந்து வீட்டின் சூழல் சற்று லேசாக ஆரம்பித்தது. மேலும் சத்யாவிடம், “இப்படி ஒரு ‘டான்’, அண்டர் கவரில் எங்கள் வீட்டில் வேலை செய்வதை நினைத்தால் எனக்கு பெருமையாக இருக்கிறது சத்யா” என கூறினாரே பார்க்கணும், சத்யா தன் கவலை எல்லாம் மறந்து சிரிக்க ஆரம்பித்துவிட்டாள். 

தனால் தான் அக்கா இங்கு வரும் பொழுது என் மனதுக்கு கொஞ்சம் நிம்மதியாக இருக்கிறது. என் கவலையை எல்லாம் நீங்கள் இருவரும் மறக்க செய்து விடுகிறீர்கள்..” என சிரித்துக் கொண்டே தன் வேலையை தொடர ஆரம்பித்தாள். 

 சத்யா வீட்டு வேலையில் செய்யும் சில சேட்டைகளை அடுத்த பதிவில் கூறுகிறேன் 🙂 

சத்யா – 2

சென்ற பதிவில், சத்யா நடிகர் விஜய்யின் தீவிர ரசிகை என்று கூறி இருந்தேன் அல்லவா?.. இன்று அதை பற்றி கொஞ்சம் பேசலாம் என்று இதை எழுதுகிறேன். ஒவ்வொரு வருடமும் விஜய்யின் பிறந்தநாள் அன்று, சத்யா தன் Whatsapp ல் “பிறந்த நாள் வாழ்த்துக்கள் விஜய் அண்ணா” என ஸ்டேட்டஸ் வைத்துக் கொள்வாள். அதை பார்த்து பலரும் தன்னை கேலி செய்வதாகவும் கூறி இருக்கிறாள். ஆனால் அதை எல்லாம் பொருட்படுத்தாமல் ஒவ்வொரு வருடமும் இதை தொடர்கிறாள். 

பாலாஜியின் சித்தி மகன், பிரதீப், சில மாதங்களுக்கு முன்பு எங்கள் வீட்டிற்கு வந்திருந்தார். அவர், தமிழ் சினிமா சிலவற்றிலும், வெப் சீரிஸ் சிலவற்றிலும் நடித்து, தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்திருக்கிறார். அவர் சத்யாவை எங்கள் வீட்டில் சந்திக்கும் பொழுது, “சத்யா விஜய்யின் தீவிர ரசிகை” என்று கூறியே அறிமுகப்படுத்தினேன். பின்பு சத்யா, ‘சந்திரமுகி’ மாதிரி கண்கள் விரிய விஜய்யை பற்றி பிரதீப்பிடம் பேசிக் கொண்டிருந்தாள். அப்பொழுது பேச்சு வாக்கில் பிரதீப், சத்யாவிடம், “நீங்க திரையில் பார்க்கிற மாதிரி நிஜத்தில் இல்லை அவர். மிகவும் அமைதியாகத்தான் இருப்பார். Energetic ஆகவும் இருக்க மாட்டார்.”, என விஜய் பற்றி  கூறியது தான் தாமதம். சத்யா வின் முகம் சுருங்கி போய் விட்டது. “என்னண்ணா இப்படி சொல்லிடீங்க, பொய் சொல்றீங்க நீங்க” என ப்ரதீப்பையே சாடிக் கொண்டிருந்தாள். எப்படியோ பிரதீப், சினிமாவில் தனது அனுபவங்களை பலவற்றைக் கூறி, அவளை நம்ப வைக்க முயற்சித்தார். அன்று, எதை நம்புவது, எதை நம்பக்கூடாது என்ற குழப்பத்திலேயே வீடு திரும்பினாள் சத்யா. 

றுநாள் அவள் வேலைக்கு வரும் சமயம், பிரதீப்பும் நானும் Youtube ல் பாடல்கள் சிலவற்றை பார்த்துக் கொண்டிருந்தோம். சரியாக சத்யா வரும் சமயம் “ரஞ்சிதமே…” பாட்டு வரவே, வேறு பாடலுக்கு  மாற்ற விடவில்லை அவள். அதில், கடைசி ஒரு நிமிடம் விஜய் ஆடுவதை பார்த்து, அப்படியே திரும்பி முறைத்துக் கொண்டே பிரதீப்பை பார்த்தாள். “அண்ணா பாருங்க எப்படி ஆடுறார்னு, இவரைப் போய் ‘Energy’ யே இல்லாம இருப்பாருன்னு சொல்லிடீங்களே!!” என அவள் கூறியதை கேட்ட பிரதீப், மெதுவாக தனக்குள் சிரித்துக் கொண்டார். மேலே கூறிய டயலாக், எப்பொழுதெல்லாம் எங்கள் வீட்டில் விஜய் படம் ஓடுகிறதோ அப்பொழுதெல்லாம் காதில் கேட்கும். “இப்படி சொல்லிட்டாரே பிரதீப் அண்ணா” என்று.  அவளால் பிரதீப் கூறியதை இன்றும் ஜீரணிக்க முடியவில்லை. 

வ்வளவு ஏன், நேற்று அதிகமாக ‘போர்’ அடிக்கிறதென்று, விஜய் படம் ஒன்றை பார்த்துக்  கொண்டிருந்தேன். வேலைக்கு வந்த சத்யா, “நான் வரும் போது விஜய் படம் பார்க்காதீங்க அக்கா. அப்புறம் நானும் பார்க்க உட்கார்ந்து விடுவேன், வேலை எல்லாம் pending ஆகிவிடும் பரவாயில்லையா?” என என்னை படத்தை மாற்ற வைத்து விட்டாள். நானும் அவள் வேலையை எதுக்கு கெடுப்பானேன் என்று வேறு படத்தைப் பார்க்க ஆரம்பித்தேன். 

லவிதமான கஷ்டங்களை அனுபவித்து வரும் சத்யா போன்றோர்களுக்கு சினிமா மட்டுமே அவர்களுடைய கஷ்டங்களை மறக்கச் செய்கிறது. அந்த மூன்று மணி நேரம் தான் , தன் கஷ்டங்கள் அனைத்தையும் மறந்துவிட்டு சந்தோஷமாக இருக்கிறார்கள். அதனாலேயே, எப்பொழுது விஜய் படம் புதிதாக OTT ல் ரிலீஸ் ஆனாலும் சத்யாவையும் படம் பார்க்க வீட்டிற்கு அழைத்து விடுவேன். அவள் சந்தோஷமாக படம் பார்ப்பதைப் பார்க்க எனக்கு ஓர் சந்தோஷம். இம்மாதிரியான சிறு சிறு சந்தோஷங்கள் தானே வாழ்க்கையை அழகாக்குகிறது. அவளைப் பற்றிய மேலும் சில சுவாரஸ்யமான விஷயங்களை அடுத்த பதிவில் பகிர்கிறேன். 

பி.கு : சென்ற பதிவை சத்யாவிடம் வாசித்துக் காண்பித்தேன். என்னைப் பற்றி கூட எழுதுறீங்களே என ஆச்சரியப்பட்டுக் கொண்டாள். கூடவே வெட்கத்துடன் ஓர் சிறு புன்னகை. 🙂

சத்யா – 1

கோவிட் ற்கு முன்பு சாதாரண ஒரு நாளில் என் வீட்டிற்கு வேலைக்கு வந்து சேர்ந்தவள் தான் சத்யா. ஏற்கனவே வீட்டில் எனக்கு உதவியாக இருந்த கிருஷ்ணவேணி அக்கா, சில காரணங்களால் எங்கள் வீட்டில் வேலையை தொடர முடியாத நிலை. அவர் நின்ற பிறகு வேலை அனைத்தையும் நானே செய்து கொண்டிருந்தேன். “வீட்டு வேலைகளையே செய்து கொண்டிருந்தால், புகைப்படக்கலையை கொஞ்சம் கொஞ்சமாக மறந்து விடுவாய் போல இருக்கிறதே” என்ற பாலாஜியின் கண்டிப்பினால் தான் சத்யா எங்கள் வீட்டிற்கு வந்து சேர்ந்தாள். பொதுவாக புதிதாக வீட்டு வேலைக்கு வருகிறவர்கள், மூஞ்சியை சற்று தூக்கி வைத்துக் கொண்டு friendly யாக  இல்லாமல்,  கடுகடுவெனவே வேலை செய்வார்கள். அதற்கு காரணம் இல்லாமல் இல்லை. புது வீடு, புது மனிதர்கள், மேலும் முதலிலேயே கண்டிப்புடன், ‘இந்தெந்த வேலைகள் தான் செய்வேன்’ என் நம் மனதில் ஏற்றி விட வேண்டும் என்று தான் நினைப்பார்கள். இல்லையென்றால் பல வேலைகளை நம் மேல் சுமத்தி விடுவார்களோ என்ற பயம் வேலையாட்களின் மனதில் இருக்கும். சத்யா மட்டும் இதற்கு விதிவிலக்கல்ல. அப்படிப்பட்ட எண்ணங்களில் இருந்து மீளவே பல மாதங்கள் எடுத்துக் கொண்டாள். அதுவரை, நான் எதாவது சரியில்லை என சொல்லிவிட்டால், படபடவென பொரிந்து தள்ளி விடுவாள். மற்ற வீட்டு ஆட்கள் போல் நாங்கள் இல்லை என அவள் புரிந்து கொள்ளவும் நாட்கள் எடுத்துக் கொண்டாள். 

ங்கள் வீட்டில் வேலை செய்பவர்களுக்கு, மற்ற சில வீடுகளில் செய்வது போல், சாப்பாடோ, காபியோ கொடுப்பதற்கு தனி பாத்திரங்கள் வைப்பதில்லை. “இப்பொழுதெல்லாம் யார் இது மாதிரி செய்கிறார்கள்?” என சிலர் கூறுவது தெரிகிறது. பல வீடுகளில் இன்னும் இந்த அவலம் இருந்து கொண்டு தான் இருக்கிறது. இந்த சிறு விஷயமே அவளை எங்களிடம் சகஜமாக பழக வைத்தது. 

திருவண்ணாமலை அருகிலிருக்கும் ஓர் சிறு கிராமத்திலிருந்து கல்யாணம் செய்து கொண்டு பெங்களூருக்கு வந்திருக்கிறாள். புருஷனின் குடிப்பழக்கத்தினால் பெண்டாட்டிக்கு கிடைக்கும் பரிசுகளான அடி, உதை களிலிருந்து வெளியில் வரவேண்டும் என முடிவு செய்து, தன் மூன்று பிள்ளைகளையும் வைத்துக் கொண்டு தனியாக வாழ்ந்து வருகிறாள். மிகவும் வெகுளி. எந்த அளவிற்கு என்பதை ஓர் சிறு உரையாடலின் மூலம் கூறுகிறேன். 

ர் நாள் வீட்டிற்குள் நுழைந்தவுடன், “அக்கா யானை முட்டையை பார்த்திருக்கீங்களா?” என கேட்டதும், கொஞ்சம் அதிர்ந்து தான் போனேன். கூடவே சிரிப்பும் சேர்ந்து கொள்ள, சரி அவள் முன்னாடி சிரித்தால் அவளை கேலி செய்வது போல் ஆகி விடும் என்று வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு… 

“என்னது யானை முட்டையா ? நீ எங்க பார்த்தே?” என கேட்டேன். 

“எங்க ஊர்ல ஒருத்தர் சொன்னாருக்கா. கோழி முட்டை போட்டு குஞ்சு பொரிப்பது போலவே யானையும்  முட்டை போட்டு தான் குட்டியை பொரிக்கும்னு”

“என்ன சத்யா, Youtube ல் பார்ததில்லையா நீ? யானை முட்டை எல்லாம்  போடாது , குட்டி தான் போடும்…  மாடு மாதிரி” என விளக்கினேன். 

“என்னக்கா அவ்வளவு பெரிய Dinasaur ஏ முட்டை போட்டு தான் குஞ்சு பொரிக்குது, யானை ஏன்க்கா பொரிக்காது?” என எதிர் கேள்வி கேட்டாள். 

“அது சரி புத்திசாலித்தனமா தான் கேள்வி கேட்குறே..” என கூறிவிட்டு, இரண்டு விலங்குகளும் வெவ்வேறு  இனத்தை சேர்ந்தவை என அவளுக்கு புரிய வைக்கவே எனக்கு நேரம் எடுத்தது. 

ப்படி சுவாரசியமான உரையாடல்கள் தினமும் எங்கள் வீட்டில் நிகழும். இம்மாதிரியான உரையாடல்களில் இருந்து, உலகம், தான் நினைத்தது போல் இல்லை என அவளும், இன்னும் சத்யா மாதிரியானவர்கள் இருக்கிறார்கள் என நாங்களும், புரிந்து கொள்ளத் தவறவில்லை. 

த்யாவுடன் தினம் நடக்கும் சுவாரசியமான உரையாடல்களை சிறு சிறு பதிவுகளாக பதிவிடலாம் என நினைக்கிறேன். வாசித்துவிட்டு உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள். அடுத்த பதிவில், சத்யா, நடிகர் விஜய்க்கு எந்த அளவுக்கு ரசிகை என்பதை விளக்கமாக கூறுகிறேன். மீண்டும் சந்திப்போம்…

பி. கு. : இதை எழுதும் நேரத்தில், பாலாஜி, மெதுவாக என்ன எழுதுகிறேன் என பார்த்துக் கொண்டே என்னை கடந்து சென்றார். “என்ன பார்க்கறீங்க ?” என கேட்டதற்கு, என் கையில் இருந்த வாட்சை காண்பித்து, “வாட்ச் போட்டு எழுதுறதினால நிறைய கன்டென்ட் கிடைக்குது இல்லை” என சம்பந்தம் இல்லாமல் சொல்லிவிட்டு சென்றார். “என்ன சொல்றீங்க?, புரியலையே” என கேட்டவுடன், “Auto வோட கண்ணாடியை திருப்புனா அது ஸ்டார்ட் ஆகுதில்லை, அந்த மாதிரி” என Logic  சொன்னாரே… “இவரையெல்லாம் பெத்தாங்களா, இல்லை செஞ்சாங்களா?” என மனதில் நினைத்துக் கொண்டே, வந்த சிரிப்பை அடக்கி கொண்டு வேலையை தொடர ஆரம்பித்தேன்.