மஞ்சள் லில்லி

எனது பட வரிசையில் இருக்கும் பூக்களில், லில்லிகள் அனைத்தும் என் வீட்டில் பூத்தவைகளே (அவைகள் தான்  அதிக பராமரிப்பு தேவைப்படாத செடிகள் 😀 ). இதில் வெள்ளை, இளஞ்சிவப்பு நிறங்களை அடுத்து மஞ்சள் நிற லில்லியையும் சேர்க்க விரும்பி ஏறி இறங்காத நர்சரிகள் இல்லை. கடைசியாக போன வருடம் லால்பாக் ல் அந்த செடி கிடைக்கவே மிகுந்த ஆசையோடு கொண்டு வந்து வீட்டில் வைத்தேன்.
IMG_0821copy1

Pink Lily

IMG_0921copy1

White Lily

IMG_5203copy1

Another Variety in Pink lily

பிரயாணத்தின் போது சிறு பிள்ளைகள், ரயில் எப்பொழுது வரும் என்று முதலிலும், ரயிலில் ஏறி அமர்ந்த பின் ரயில் எப்பொழுது கிளம்பும் எனவும்,  எதிர்பார்ப்பின் உச்சியில் இருப்பதைப்  போல, செடி கிடைக்கும் வரை “எப்பொழுது கிடைக்கும்” என்ற எதிர்பார்ப்பும், அது கிடைத்தவுடன் “எப்பொழுது பூக்கும்” என எதிர்பார்ப்பின் விளிம்பிற்கே கூட்டிச் சென்று விட்டன இந்த மஞ்சள் லில்லி செடி.  இதன்  சிறப்பம்சம் என்னவென்றால்,  மழை பெய்தால் மட்டுமே பூக்கள் பூக்கும் . ஆகவே கிட்டத்தட்ட 6, 7 மாதங்கள் காக்க வைத்து விட்டன. இதற்கு நடுவில் எங்கள் வீட்டு “சேட்டையின் சிகரமான” வெள்ளைப் பூனை கோடையின் சூடு தாங்காமல் குளிர்ச்சிக்காக பூந்தொட்டிகளில் ஓய்வெடுப்பது(சாப்பிட்டு ஓய்வெடுப்பது மட்டுமே அதன் வேலை, அது வேறு விஷயம்) சகஜம்.
IMG_3251copy1

Snowy – சேட்டையின் சிகரம்

இந்த செடி வந்தவுடன், அதில் தான் போய் ஓய்வெடுக்க வேண்டுமா அந்த பூனை!!. என்ன செய்வதென்று தெரியாமல் இருக்கும் சமயத்தில் தான் சிங்கப்பூர் தோழி ஒருவர், தொட்டிகளில் உபயோகப்படுத்தாத tooth brush குத்தி வை என யோசனையை சொன்னாள்(சிங்கப்பூரில் பூனைகள் அதிகம்). அதன் படியே  brush களை செருகி வைத்தாயிற்று. அதை பார்த்த பாலாஜி “பார்த்து,  மஞ்சள் பூக்களுக்கு பதிலா brush வளர போகுது” என சிரிக்காமல் சொன்னவுடன், “எப்படி இப்படி!!! ?” என சிரித்துக் கொண்டேன்.

கடைசியாக, கடந்த சில நாட்களாக வருண பகவானின் தயவினால் 2 பூக்கள் பூத்து விட்டன. அந்த இரண்டு பூக்களையும் “படுத்தி”, சில படங்களையும் எடுத்தாகி விட்டது. இதோ உங்களுடன் அந்த படத்தை பகிர்ந்து கொள்கிறேன்.

IMG_5311copy1

சே…!!! ரெண்டு பூக்களுக்கு இவ்ளோ பெரிய build up ஆ !!!, என்ன பண்ண தோழி ஒருவர், “எங்க வீட்டில் எக்கச்சக்கமாக பூத்து விட்டதே, இன்னுமா உன் வீட்டில் பூக்கலை?”, என்ற கேள்வியில் ஆரம்பித்தது இந்த கட்டுரைக்கான யோசனை. நிறைய நாள் கழித்து என்னை எழுத வைத்ததற்காக, இந்த நேரத்தில கண்டிப்பா அந்த தோழிக்கு நன்றி சொல்லியே ஆகணும் நான்(சூர்யா voice ல் படிக்கவும் )….

Advertisements

Ring Light ம் கௌதம் m…

ரிங் லைட் செய்து கிட்டத்தட்ட 6 மாதங்களுக்கு பிறகு, சித்தி மகன் கௌதம்-ஐ வைத்து ஒரு Photo Shoot செய்யலாம் என அவர் பெங்களூர் வந்திருக்கும் பொழுது அவரிடம் கேட்கவே, உடனே  சந்தோஷமாக சரி என்றார். கூடவே சித்தப்பா மகன் யோகேஷ் – ம் சேர்ந்து கொண்டார். Ring Light – ல் எனக்கு மிகவும் பிடித்ததே, அதன் மிதமான ஒளியே. அன்று அவர்களை எடுத்த புகைப்படங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

 

இந்தப் படங்களை எடுப்பதற்கு நான் என்னுடைய 6D – யுடன் Canon 100mm f /2.8 L Lens -ஐ உபயோகப்படுத்தி இருக்கிறேன். படங்களைப் பார்த்து “கௌதம் ஹாப்பி அண்ணாச்சி !!”…. உங்களுக்கும் பிடித்திருக்கும் என நினைக்கிறேன்.

சித்தார்த் என்கிற சித்து….

குழந்தைகள் எப்படி எல்லாம் யோசிக்கிறார்கள் என்று நினைக்கும் பொழுது ஆச்சர்யமாக இருக்கும்.. மதி-க்கு 4 – 5 வயது இருக்கும் பொழுது John Holt எழுதிய How Children Learn என்ற புத்தகத்தைப் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதில் குழந்தைகளின் சிந்தனைத் திறன் பற்றியும், அவர்கள் எப்படி விஷயங்களைப் புரிந்து கொள்கிறார்கள், அவர்களிடம் பெரியர்வர்களின் அணுகு முறை எப்படி இருக்க வேண்டும் என்பதைப் பற்றியும் மிகவும் அழகாக கூறி இருப்பார்.. அதைப் படிக்கும் பொழுது இது எந்த அளவுக்கு உண்மை என்று என்னால் மதிப்பிட முடியவில்லை. ஆனால் இப்பொழுது சித்துவிடம் பேசும் பொழுது, John Holt அனைத்தையும் அனுபவித்து தான் எழுதி இருக்கிறார் என்ற எண்ணம் தான் வருகிறது… “ஏன் இப்படி இவ்ளோ serious-ஆ கொண்டு போறீங்க???” -ன்னு கேட்கிறீங்களா… இதோ வந்திட்டேன் விஷயத்துக்கு… இன்னைக்கு காலையில் இருந்து சித்துவிடம்(வயது 5)பேசிய விஷயங்களில் சிலவற்றை பகிர்ந்து கொள்கிறேன்… அவன் அளவுக்கு எனக்கு பேசும் திறமை இருக்கவில்லை தான்.
சித்துவின் கேள்விகளில் சில…
2 வாரம் கழித்து நாங்கள் ஒரு கல்யாணத்திற்காக மதுரை செல்ல வேண்டி இருக்கிறது… மதுரை செல்வதென்றாலே, பாட்டியை பார்க்க போகிறோம் – என்று சித்துவிற்கு ஏகப்பட்ட சந்தோஷம்… காலையில் என்னிடம் வந்து
சித்து : எப்போம்மா மதுரை போகப் போறோம் ?
நான் : 2 வாரம் கழித்து….
சித்து : நாளைக்கு 2 வாரமா?
நான் : இல்லைடா… 2 வாரம்-ன்னா 2 சனி, ஞாயிறு வந்து போகணும்…
சித்து : எங்க வந்து போகணும்?…
நான் : ???
முடியலை முடியலை…
இதைக் கேட்டவுடன் John Halt கூறியது தான் நினைவுக்கு வந்தது… “குழந்தைகள் நாம் கேட்கும் கேள்விக்கு சரியாக பதில் சொல்லவில்லை என்றால், அது அவர்களுடைய தவறு இல்லை, நாம் கேள்வி கேட்கும் விதம் தான் தவறு”.. இங்கு சித்துவுக்கு புரியும் படி என் பதில் இல்லை என்றே எனக்கு நினைக்கத் தோன்றுகிறது…
அப்புறம் night, பாலாஜி foot ball match பார்க்க T.V. – யை போட்டவுடன் வேகமாக சித்துவும் வந்து உட்கார்ந்தான். அவனுடைய அக்கறையைப் பார்த்த பாலாஜி சித்துவிடம் …
“உன்னையும் foot ball விளையாட சேர்த்து விடட்டா?” எனக் கேட்ட அடுத்த நொடி, “அதில நெறைய பேர் இருக்காங்களே… என்னை மட்டும் சேர்த்து விடறேன்னு சொல்றீங்க” -ன்னு கேட்டானே… ஐயோ, அடுத்த வார்த்தை பேச முடியலை….
சித்துவின் குறும்புகள் அதிகம் என்று தோன்றினாலும், அவை அனைத்தையும் நாங்கள் ரசிக்கத்தான் செய்கிறோம்..

செம்பருத்தி

இந்த பதிவினை அலங்கரிக்கப் போவது, என் வீட்டு தோட்டத்தில் வளர்ந்த செம்பருத்தி பூக்கள். இன்றைக்கு புதிதாக ஒரு படம் செம்பருத்தியை வைத்து எடுத்தேன். அப்புறம் தான் என்னுடைய படத்தொகுப்புகளை கவனித்தேன். வீட்டில் வளர்ந்த செம்பருத்தியை வைத்து நிறைய படங்கள் எடுத்துவிட்டேன் என்பதனை. பார்க்கவே மிகவும் அழகாகவும், சந்தோஷமாகவும் இருந்தது, சிகப்பு செம்பருத்திகளை பார்க்கும் பொழுது. அதை அப்படியே ஒரு பதிவாக வெளியிடுகிறேன்.

நான் முதன்முதலில் செம்பருத்தியை வைத்து எடுத்த படம்...

நான் முதன்முதலில் செம்பருத்தியை வைத்து எடுத்த படம்…

என் வீட்டு மல்லிகைகள், செம்பருத்தியோடு சேர்ந்து எடுத்துக்கொண்ட படம்...

என் வீட்டு மல்லிகைகள், செம்பருத்தியோடு சேர்ந்து எடுத்துக்கொண்ட படம்…

இந்த செம்பருத்தி செடி என் வீட்டுக்கு வந்ததே ஒரு சுவாரசியமான விஷயம். என் இரண்டாவது மகனுக்கு எப்பொழுதும் மதிய சாப்பாடு வெளியில் சென்று தான் ஊட்ட வேண்டும். அன்றும் அப்படியே சாப்பாடு கொடுத்துக் கொண்டிருந்த பொழுது வீதியில் வண்டியில் வைத்து ஒருவர் செடிகளை விற்றுக்கொண்டு வந்து கொண்டிருந்தார். என் மகன் அவரை பார்த்தவுடன் செடிகள் வாங்கலாம் என்று என்னிடம் அடம்பிடித்து, அவரை நிற்கச் செய்து விட்டான். முதலில் அவன் கேட்டது இந்த செம்பருத்தி செடியை தான். எனக்கு என்ன வருத்தம் என்றால், இதற்கு முன்பு நான் வாங்கிய செம்பருத்தி செடிகள் பூச்சி வந்து பட்டுப் போய்விட்டிருந்தன. “இந்த செடி தாங்குமா?” என்ற சந்தேகம். என் மகன் ஒரே மனதாக கண்டிப்பாக வேண்டும் என்று வாங்க வைத்தது இந்த செடி.

சூரிய ஒளியில் மின்னும் செம்பருத்தி....

சூரிய ஒளியில் மின்னும் செம்பருத்தி….

என் கணவர் விருப்பத்தின் பேரில் எடுத்த படம்...

என் கணவர் விருப்பத்தின் பேரில் எடுத்த படம்…

செம்பருத்தி Macro....

செம்பருத்தி Macro….

இன்றைக்கு புதிதாக எடுத்த படம்....

இன்றைக்கு புதிதாக எடுத்த படம்….

வாங்கும் பொழுது என் இடுப்பு வரை இருந்த இந்த செடி, இன்று 2 ஆள் உயரத்திற்கு வளர்ந்து நிற்கிறது… இந்த அழகான படங்கள் என் மகன் அன்று அடம் பிடித்து எடுத்த முடிவினாலேயே சாத்தியமாயிற்று…