சித்தார்த் என்கிற சித்து….

குழந்தைகள் எப்படி எல்லாம் யோசிக்கிறார்கள் என்று நினைக்கும் பொழுது ஆச்சர்யமாக இருக்கும்.. மதி-க்கு 4 – 5 வயது இருக்கும் பொழுது John Holt எழுதிய How Children Learn என்ற புத்தகத்தைப் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதில் குழந்தைகளின் சிந்தனைத் திறன் பற்றியும், அவர்கள் எப்படி விஷயங்களைப் புரிந்து கொள்கிறார்கள், அவர்களிடம் பெரியர்வர்களின் அணுகு முறை எப்படி இருக்க வேண்டும் என்பதைப் பற்றியும் மிகவும் அழகாக கூறி இருப்பார்.. அதைப் படிக்கும் பொழுது இது எந்த அளவுக்கு உண்மை என்று என்னால் மதிப்பிட முடியவில்லை. ஆனால் இப்பொழுது சித்துவிடம் பேசும் பொழுது, John Holt அனைத்தையும் அனுபவித்து தான் எழுதி இருக்கிறார் என்ற எண்ணம் தான் வருகிறது… “ஏன் இப்படி இவ்ளோ serious-ஆ கொண்டு போறீங்க???” -ன்னு கேட்கிறீங்களா… இதோ வந்திட்டேன் விஷயத்துக்கு… இன்னைக்கு காலையில் இருந்து சித்துவிடம்(வயது 5)பேசிய விஷயங்களில் சிலவற்றை பகிர்ந்து கொள்கிறேன்… அவன் அளவுக்கு எனக்கு பேசும் திறமை இருக்கவில்லை தான்.
சித்துவின் கேள்விகளில் சில…
2 வாரம் கழித்து நாங்கள் ஒரு கல்யாணத்திற்காக மதுரை செல்ல வேண்டி இருக்கிறது… மதுரை செல்வதென்றாலே, பாட்டியை பார்க்க போகிறோம் – என்று சித்துவிற்கு ஏகப்பட்ட சந்தோஷம்… காலையில் என்னிடம் வந்து
சித்து : எப்போம்மா மதுரை போகப் போறோம் ?
நான் : 2 வாரம் கழித்து….
சித்து : நாளைக்கு 2 வாரமா?
நான் : இல்லைடா… 2 வாரம்-ன்னா 2 சனி, ஞாயிறு வந்து போகணும்…
சித்து : எங்க வந்து போகணும்?…
நான் : ???
முடியலை முடியலை…
இதைக் கேட்டவுடன் John Halt கூறியது தான் நினைவுக்கு வந்தது… “குழந்தைகள் நாம் கேட்கும் கேள்விக்கு சரியாக பதில் சொல்லவில்லை என்றால், அது அவர்களுடைய தவறு இல்லை, நாம் கேள்வி கேட்கும் விதம் தான் தவறு”.. இங்கு சித்துவுக்கு புரியும் படி என் பதில் இல்லை என்றே எனக்கு நினைக்கத் தோன்றுகிறது…
அப்புறம் night, பாலாஜி foot ball match பார்க்க T.V. – யை போட்டவுடன் வேகமாக சித்துவும் வந்து உட்கார்ந்தான். அவனுடைய அக்கறையைப் பார்த்த பாலாஜி சித்துவிடம் …
“உன்னையும் foot ball விளையாட சேர்த்து விடட்டா?” எனக் கேட்ட அடுத்த நொடி, “அதில நெறைய பேர் இருக்காங்களே… என்னை மட்டும் சேர்த்து விடறேன்னு சொல்றீங்க” -ன்னு கேட்டானே… ஐயோ, அடுத்த வார்த்தை பேச முடியலை….
சித்துவின் குறும்புகள் அதிகம் என்று தோன்றினாலும், அவை அனைத்தையும் நாங்கள் ரசிக்கத்தான் செய்கிறோம்..

சித்திரைத் திருவிழாவின் முகங்கள்….

சித்திரை திருவிழாவின் போது நான் பார்த்து ரசித்த வித்தியாசமான முகங்களில் சிலவற்றை தொகுத்திருக்கிறேன். ஒவ்வோர் முகத்தின் பின்னாலும் ஒவ்வோர் கதைகள்.

தினமும் இரவில் அம்மன் நகரை வலம் வரும் பொழுது, அம்மனுக்கு முன்னால், இவர்களைப் போன்ற குட்டி குட்டி அம்மன்கள் வலம் வரும் காட்சி மிகவும் அழகாய்த் தான் இருந்தது….
IMG_0771copy1

இராமனும் அனுமனும்…

குட்டிக் குட்டிக் கருப்பண்ண சாமிகள்….

கலர் மிட்டாய்க்காரர். சின்ன வயதில், நாக்கு சிவப்பதற்காகவே வாங்கி சாப்பிடுவோம். திருவிழா சமயத்தில் மட்டும் கிடைக்கும்…

அறுவாள் ஏந்திய கருப்பு….

இவருடைய நாமம் என்னை இவரை படம் எடுக்கச் செய்தது….

கோடை வெயிலை சமாளிக்க விசிறி விற்கும் பெண்மணி….

திருவிழா இவரிடத்தில் எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தி இருக்கவில்லை போலும்… அமைதியாக தன் அன்றாட வேலைகளில் ஈடுபட்டிருந்தார்.
IMG_0944copy1

இந்த திருவிழாவின் போது நான் தெரிந்து கொண்ட புது விஷயம் – கள்ளழகர் அழகர் மலையில் இருந்து புறப்பட்டு வரும் பொழுது அவருக்கு வெயிலின் தாக்கம் குறைவாக இருக்க வேண்டும் என்று எண்ணும் பக்தர்கள், அவரின் மேல் தண்ணீர் பீய்ச்சி அடிப்பார்கள் என்று தெரியும். ஆனால் அந்த தண்ணீரை சேமித்து வைத்துக் கொள்ள அவர்கள் பயன் படுத்துவது ஆட்டுத் தோலினால் ஆன தோல் பையைத்தான். வேண்டுமென்ற அளவில் பக்தர்கள் தோல் பையினை வாங்கிக்கொண்டு ஆட்டின் கால் பகுதியை தைத்து, அதன் கழுத்துப் பகுதியில் ஒரு tube-ஐ இணைத்து, அதில் சேமிக்கும் தண்ணீரைத்தான் கள்ளழகர் மேல் பீய்ச்சுகிறார்கள்… இங்கு படத்தில் இருக்கும் பெண் இம்மாதிரியான ஆட்டுத் தோலைத்தான் விற்கிறார்.

என்ன மக்காஸ்… திருவிழா என்று சொல்லி விட்டு சாமி படம் ஒன்று கூட இல்லையே என்று கேட்கிறீர்களா? சாமி படங்களை எடுப்பதை விட இம்மாதிரியான சாதாரண மக்கள் திருவிழா-வை எப்படி எதிர் கொள்கின்றனர் என்பதை படம் எடுக்கவே இம்முறை மதுரை சென்றிருந்தேன். ஓரளவிற்கு, என்னால் முடிந்தவரை பதிவு செய்திருக்கிறேன். படித்து விட்டு(பார்த்தும் விட்டு) கருத்துக்களை பகிருங்களேன்….