பட்டடக்கல் மற்றும் ஐஹொளே 

டிசம்பர் மாதம் பாதாமி பயணத்தின் ஓர் அங்கமாக பட்டடக்கல் மற்றும் ஐஹொளே ஆகிய கோவில் வளாகங்களுக்கும் சென்று வந்தோம். பட்டடக்கல், பாதாமியில் இருந்து 14 மைல் தொலைவிலும், ஐஹொளே 22 மைல் தொலைவிலும் அமைந்திருக்கிறது. இரு கிராமங்களும், பச்சைபசேலென்று இருக்கும் வயல்வெளிகளுக்கு நடுவில் அமைதியான சாலைகளில் அமைந்திருக்கிறது. இவ்விரண்டு கோவில் வளாகமும், 6ம் நூற்றாண்டிலிருந்து 12ம் நூற்றாண்டு வரை இருக்கும்  காலகட்டத்தில் சாளுக்கியர்களால் கட்டப் பட்டிருக்கிறது. இங்கிருக்கும் கோவில்களின் கட்டிட அமைப்பானது, வட இந்திய மற்றும் தென் இந்திய கட்டிடக்கலையை இணைக்கும் ஒரு கலவையாகவே காணப்படுகின்றன. தென் இந்திய கட்டிடக்கலையில் திராவிட கட்டிட அமைப்பையும், வட இந்திய கட்டிடக்கலையில், ‘நகரா’ கட்டிட அமைப்பையும் இக்கோயில்களில் காணலாம். மேலும் தொடக்க காலத்தில் வாழ்ந்த சாளுக்கிய மன்னர்கள் சைவர்களாகவும், பிற்காலத்தில் அவர்கள் வைணவர்களாக சமயம் மாறி இருக்கின்றனர். ஆகையால் இங்கு சிவன் மற்றும் விஷ்ணு கோவில்கள் ஒரே வளாகத்தில் காணப்படுகின்றன. இந்த காலகட்டத்தில் சமணர்களும் வாழ்ந்து வந்த காரணத்தினால், அவர்களின் கோவில்களும் இடம்பெற்றிருக்கின்றன. பிற்காலத்தில் விஜயநகர ஆட்சியின் போது, இக்கோவில்களை பாதுகாப்பதற்கென்றே, பல கோட்டைகள் கட்டப்பட்டிருக்கின்றன. 

கோவில்கள் அனைத்தும் மிகவும் அழகாகவும், பார்ப்பவர் மனதை கவரும் விதமாகவும் கட்டப்பட்டிருக்கின்றது என்பதில் சற்றும் சந்தேகமில்லை. ஆனால், செல்லும் வழி முழுவதும், சற்றும் எதிர்பாரா வகையில் அமைக்கப்பட்டிருந்த வேகத்தடை மிகவும் ஆபத்தாக இருந்தன. மேலும், பாதாமி கிராமத்திற்கு சற்று முன்னால் இருக்கும் ஹம்பிக்கு அதிக சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இங்கு சற்று குறைவே.  பெங்களூரில் இருந்து ஹம்பி வரைக்குமான சாலை மிகவும் நேர்த்தியாக அமைக்கப்பட்டிருக்கின்றன. அதன் பிறகு, பாதாமி சென்று சேரும் வரை சாலை அவ்வளவு வசதியாக இல்லை. பயணத்தை முடித்து விட்டு திரும்பும் பொழுது எங்கள் காரின் ஒரு சக்கரம் பஞ்சர் ஆகி இருந்தது. UNESCO world Heritage Site – ல் ஒன்றாக இருக்கும் பாதாமிக்கு செல்லும் சாலை உலகத்தரத்தில் இல்லாவிட்டாலும், பாதுகாப்பாக செல்லும் அளவுக்காவது இருக்க வேண்டாமா?..  அரசாங்கம் விரைவில் தக்க நடவடிக்கை எடுக்கும் என நம்புவோமாக. பிறகு அங்கு கிடைக்கும் உணவு வகைகளைப் பற்றியும் கண்டிப்பாக சொல்ல வேண்டும். ஒரு சில விலையுயர்ந்த உணவகங்களைத் தவிர மற்ற ஹோட்டல்கள்  அனைத்திலும், கர்நாடக உணவுகளை தவிர்த்து வேறு எதுவும் கிடைக்காது. சிறு பிள்ளைகளை அழைத்துச் செல்பவர்கள் கண்டிப்பாக இதை கருத்தில் கொண்டு பயணிக்க வேண்டும். நமக்கே சில நேரம், சாம்பாரை வாயில் வைத்தவுடன் விஜய் சொல்வதை போல் ” ப்ளடி ஸ்வீட்” என்று சொல்ல வைக்கிறது. அங்கு இருந்த நான்கு நாட்களும் கர்நாடக மாநிலத்தின் உணவுகளையே சாப்பிட்டு சமாளித்தோம். அடுத்த முறை அங்கு சாப்பிட்ட உணவுகளையும் படங்களாக எடுத்து பகிரலாம் என்ற எண்ணம் இருக்கிறது. 

அங்கு எடுத்த படங்களை அனைத்தையும் இங்கு பகிர்ந்திருக்கிறேன். 

ஐஹொளே போய் வந்த பிறகு, பாதாமி கிராமத்தில் அமைந்திருக்கும் பூதநாதா கோவிலின் அருகில் மாலை வேளையின் சூரிய அஸ்தமனத்தை ரசிக்கலாம் என்று அங்கு சென்று அமர்ந்திருந்தோம்.  கோவில், மஞ்சள் மாலை வெயிலில் அவ்வளவு அழகாக இருந்தது. என்ன ஒரு ஆச்சர்யம், அன்று முழுவதும் பயணம் செய்த களைப்பு, இந்த காட்சியை கண்ட பிறகு, முழுவதும் மறைந்தே போனது. அப்படியே அந்த அழகினை என் காமிராவில் படமெடுத்துக் கொண்டு ஹோட்டல் அறைக்கு திரும்பினோம்.