தெய்யம் – அண்டலூர் காவு

தெய்யம் – கேரள மாநிலத்தின் மலபார் மற்றும் கண்ணூர் பகுதிகளில் வருடந்தோறும் நடைபெற்று வரும் பண்டிகைகளுள் முக்கியமானது. 2 – 3 வருடங்களாகவே இப்பண்டிகையை படமெடுக்க வேண்டும் என்ற ஆசை மனதில் இருந்து கொண்டே இருந்தது. பாலாஜி -யின் நண்பர் ஒருவரின் சொந்த ஊரில் வருடந்தோறும் இப்பண்டிகை நடப்பதறிந்து ஒன்றரை வருடமாக அவரை படாத பாடு படுத்தி, இம்முறை சென்று, ஆசை தீர படமெடுத்து விட்டு திரும்பினேன்.

இப்பயணத்தில் என்னுடைய அனுபவங்களையும், புகைப்படங்களையும் பார்க்கும் முன் தெய்யம் பற்றி ஒரு சிறிய அறிமுகம். வழக்கமாக இப்பண்டிகை,  கிராமத்து கதைகளையும், கிராமத்து தேவதைகளையும்  உள்ளடக்கியே நடத்தப்படுகிறது. நான் சென்று வந்த “அண்டலுர் காவு” எனும் ஊரில் மட்டும் ராமாயணத்தின் யுத்த காண்டத்தின் ஒரு பகுதியான வாலி-சுக்ரீவன் ஆகிய இருவருக்கும் நடக்கும் போர் மற்றும் ராமன் அயோத்தியிலிருந்து இலங்கைக்கு சென்று சீதையை மீட்கும் படலம் ஆகியவை கதைக்களமாக உள்ளது. மேலும் இப்பண்டிகைகளில் பலவகையான கதாபாத்திரங்களை  ஏற்று அழகான அடர்த்தியான ஒப்பனை செய்து கொள்கின்றவர் அனைவரும் பழங்குடியின மக்கள் அல்லது தாழ்த்தப் பட்ட வகுப்பினைச் சேர்ந்தவர்களே. இம்மாதிரியான பண்டிகை நாட்களில், ஒப்பனை செய்து கொண்ட தெய்யங்களை, அனைத்து தரப்பின மக்களும், கடவுளாகவே நினைத்து அவர்களின் ஆசீர்வாதங்களையும் பெற்றுக் கொள்கின்றனர்.

சுக்ரீவனின் ஆசீர்வாதங்களை பெரும் இளம்பெண்...

சுக்ரீவனின் ஆசீர்வாதங்களை பெரும் இளம்பெண்…

கதை “போர்” அடித்து விட்டதா?… சரி.. நிறுத்தி விட்டேன்.

பயணத்தில்,  நண்பரின் வீட்டுக்கருகில் பண்டிகை நடப்பதினால், அவருடைய வீட்டிலேயே தங்க முடிவெடுத்தோம். பெங்களூரிலிந்து இரவு புறப்பட்டு, காலை கண்விழித்தெழும் போதே “சே” வின் ஆளுயர கட் அவுட் கேரளா வந்துவிட்டதை உறுதி செய்தது. பின்பு நண்பரின் வீட்டில் காலை சாப்பாடு மற்றும் பகல் உணவு ஆகியவற்றை முடித்துக் கொண்டு கோவிலுக்குச் சென்றோம். நண்பகல் “யுத்த காண்டம்” நடந்தேறியது. இப்பண்டிகையை படமெடுக்கும் புகைப்படக் கலைஞர்கள் மத்தியில் சில படங்கள் முக்கியமாக கருதப்படுகின்றது. அதில் அக்கலைஞர்கள் ஒப்பனை செய்து கொள்ளும் பொழுது எடுக்கப்படும் படமும் ஒன்று.  அம்மாதிரியான படங்கள் எல்லாம் எடுக்க வேண்டும் என்று முன்கூட்டியே யோசித்து வைத்திருந்தேன். ஆனால் பெண்களை ஒப்பனை அறையில் அனுமதிப்பதில்லை என்று கூறி என்னை அதிர்ச்சி அடையச் செய்தனர். பின்பு யோசிக்கையில் தான் தெரிந்தது, அம்மாதிரியான படங்களை எல்லாம் எடுத்தது ஆண் புகைப்படக் கலைஞர்களே என. மிகுந்த ஏமாற்றத்துடன் வாலி-சுக்ரீவன் போர் காட்சிகளை படமெடுக்க காத்திருந்தேன்.

வாலி -யை போர்க்களத்திற்கு  அழைத்துக்  கொண்டு வரும் போதே கொஞ்சம் கொஞ்சமாக கூட்டம் சேர்ந்து விட்டது. அவசரம் அவசரமாக, எங்கு நின்றால் நல்ல கோணங்களில் படம் கிடைக்கும் என்றெல்லாம் யோசித்து இடத்தை தேர்வு செய்து கொண்டேன். என் நல்ல நேரம், “செண்டா மேளம்” அடித்துக் கலக்கும் மேளக்காரர்களுக்கு நடுவில் மாட்டிக் கொண்டேன். போர் முடியும் பொழுது என் காதின் நிலைமையை நான் சொல்லித்தான் தெரியவேண்டுமா??

அங்கு எடுத்த புகைப்படங்களில் சிலவற்றைப் பார்ப்போம்.

முதலில் வாலி, சுக்ரீவனை அறிமுகம் செய்து கொள்வோம்.

 வாலி

வாலி

சுக்ரீவன்

சுக்ரீவன்

வாலி-ஐ போர்களத்திற்கு அழைத்து வரும் மக்கள்.

வாலி-ஐ போர்களத்திற்கு அழைத்து வரும் மக்கள்.

 

போர்க்களத்தில் சுக்ரீவனை தேடும் வாலி.

போர்க்களத்தில் சுக்ரீவனை தேடும் வாலி.

 

மலை மேல் வாலியும் தரை மேல் சுக்ரீவனும் போரிடுவதற்கு தயாராக...

மலை மேல் வாலியும் தரையில் சுக்ரீவனும் போரிடுவதற்கு தயாராக…

போர்க்களத்தில் ஆக்ரோஷமான சுக்ரீவன்...

போர்க்களத்தில் ஆக்ரோஷமான சுக்ரீவன்…

கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் நடந்தது போர். போர் முடிந்த பிறகு தான் தெரிந்தது, கேமரா வை தூக்கிக் கொண்டிருந்ததினால் என் வலது கை மற்றும் முதுகின் ஒரு புறம் முழுக்க வலி கண்டிருந்ததை. பின்பு இரவு ஸ்ரீ ராமனை பார்க்க வரலாம் என வீடு திரும்பினோம்.

இரவு 9 மணிக்கு மேல் கோவிலுக்கு வந்த எங்களுக்கு அங்கு கூடி இருந்த மக்கள் கூட்டத்தை பார்த்தவுடன், கடைசி வரை தெய்யத்தை பார்த்து விட்டு போக முடியுமா என்ற சந்தேகம் வந்துவிட்டது. முழுமையாக பார்க்க முடியாது என்பதை தெரிந்து கொண்டு கோவிலின் முன் மக்களுக்கு ஆசி வழங்கி கொண்டிருந்த ஸ்ரீ ராமனையும், லக்ஷ்மணனையும், பப்புரான் என அழைக்கப்படும் அனுமனையும் படமெடுத்துக் கொண்டு வீடு திரும்பினோம்.
"தெய்வத்தார்" என்றழைக்கப்படும் ஸ்ரீ ராமன்.

“தெய்வத்தார்” என்றழைக்கப்படும் ஸ்ரீ ராமன்.

 

அங்ககாரனான லக்ஷ்மணன்

அங்ககாரனான லக்ஷ்மணன்

 

லக்ஷ்மணனின் தலை மேலிருக்கும் முடி

லக்ஷ்மணனின் தலை மேலிருக்கும் முடி

பப்புரான் என அழைக்கப்படும் அனுமன்

பப்புரான் என அழைக்கப்படும் அனுமன்

ஒவ்வொரு வருடமும் மலையாள கும்ப மாதத்தின் முதல் ஏழு நாட்கள் நடந்தேறும் இவ்வகையான தெய்யம், பலதரப்பட்ட மக்களின் ஒற்றுமையை வளர்க்கும் நோக்கத்திலேயே நடத்தப்படுகிறது.
தமிழ்நாட்டில் நடக்கும் தெருக்கூத்தை  “தெய்யம்” பல இடங்களில் நினைவூட்டினாலும்,  இது ஒரு வித்தியாசமான அனுபவமாகவே இருந்தது.  உடல்சார்ந்த களைப்பு ஒரு பக்கம் இருந்தாலும் நல்ல படங்கள் கிடைத்த சந்தோஷம் அதையெல்லாம் மறக்கச் செய்தன.

Advertisements

சோம்நாத்புரா

கோவிலின் அழகான தோற்றம்

சோம்நாத்பூர், மைசூரிலிருந்து 35 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. பெங்களூரிலிருந்து இரண்டரை மணி நேரத்தில் சென்று விடலாம். இவ்வூர், செழிப்பு வாய்ந்த காவிரி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. ஹொய்சளர்களின் திறமை வாய்ந்த கட்டிடக்கலையின் சான்றாக நிற்கும் சில கோவில்களில் இதுவும் ஒன்று.

கோவிலின் முன்தோற்றம்

கோவிலின் முன்தோற்றம்

உள் மண்டபத்திலிருந்து

உள் மண்டபத்திலிருந்து

கோவிலின் அழகான தோற்றம்

கோவிலின் அழகான தோற்றம்

இக்கோவில், ஹொய்சள மன்னர் நரசிம்ஹா III என்பவரின் படைத்தளபதி தண்டநாயக என்பவரால் கி.பி. 1268 இல் கட்டப்பட்டுள்ளது. “schist ” எனப்படும் ஒருவித தகட்டுப்பாறைகளால் கட்டப்பட்ட இக்கோவில், அக்கற்களின் தன்மையினால், மிகவும் அழகான சிற்பங்களுடன், இன்றும் பார்ப்பவர்கள் அனைவரையும் எளிதாக கவர்ந்து விடுகிறது. அணிகலன்களை செதுக்குவதில் புகழ்பெற்ற ருவாரி மலிதாம்பா எனும் சிற்பியின் கைவண்ணத்தில் உருவானதே இக்கோவில். கோவில் முழுவதும் சிற்பியின் கைபடாத இடமே இல்லையென கூறும் அளவிற்கு சிற்பங்கள்!!!. மேலும் சில சிற்பங்களுக்கு கீழ் “மலிதாம்பா” என்ற அவரின் கையெழுத்தையும் காணலாம்.

நரசிம்ஹ அவதாரம்

நரசிம்ஹ அவதாரம்

மத்ஸ்ய அவதாரம்

மத்ஸ்ய அவதாரம்

கோவிலின் உட்புறத்தில் 3 கர்ப்பகிரஹங்களில் முறையே கேசவர், ஜனார்தனர் மற்றும் வேணுகோபாலன் போன்ற மகாவிஷ்ணுவின் அவதாரங்கள் காணப்படுகின்றன. இக்கோவிலில் முதலில் பிரதிருஷ்டை செய்யப்பட்ட மூலவர்கள், அந்நியர்களின் படையெடுப்பினால் சூரையாடப்பட்டதினால் அதற்கு பதிலாக வேறு சிலைகளே இன்று காணப்படுகின்றன. மூன்று கர்ப்பகிரஹங்களுக்கு மூன்று கோபுரங்கள் என்ற விதத்தில் இக்கோவில் ஓர் சிறிய மேடையின் மேல் கட்டப்பட்டுள்ளது. இம்மாதிரியான கட்டிடங்கள் ஹொய்சளர்களுக்கே உரிய பாணி. ஆதலால் கோவில் கட்டிடக்கலையில் அவர்களுடைய பாணியை எளிதாக அடையாளம் கண்டு கொள்ள முடிகிறது.

கோவிலின் அடிப்பாகம் 2 பகுதியாக 6 வார்ப்புகளாக அழகான சிற்பங்களுடன் காட்சியளிக்கின்றன. கீழிருந்து முதல் வார்ப்பில் யானைகளின் அணிவகுப்பும், இரண்டாவதில் குதிரைவீரர்களும், மூன்றாவதில் பசுமையான இலைத்திரள்களும், நான்காவது வார்ப்பில் இராமாயணம், மகாபாரதம் போன்ற புராணங்களில் வரும் காட்சிகளும், ஐந்தாவதில் யாளிகளும், ஆறாவது வார்ப்பில் அழகிய அன்னங்களின் அணிவகுப்பும் கோவில் சுவரை அலங்கரிக்கின்றன. மேலும் கோவிலின் தெற்கு வெளிப்புற சுவர்களின் நான்காவது வார்ப்பில் இராமாயணக் கதைகளும், பின்புற சுவற்றில் கிருஷ்ணரின் கதைகளும், வடப்புறச் சுவற்றில் மகாபாரதக் கதைகளும், சிற்பியின் உளி வழியாக சிற்பங்களாகி கோவிலின் அழகிற்கு மேலும் அழகு சேர்க்கின்றன.

யானைகளும், குதிரைவீரர்களும் முதல் இரண்டு வார்ப்புகளில்

யானைகளும், குதிரைவீரர்களும் முதல் இரண்டு வார்ப்புகளில்

3வது வார்ப்பில் உள்ள இலைகள்

3வது வார்ப்பில் உள்ள இலைகள்

4வது வார்ப்பில் புராணக்கதைகள்

4வது வார்ப்பில் புராணக்கதைகள்

ராமாயணத்திலிருந்து ஓர் காட்சி

ராமாயணத்திலிருந்து ஓர் காட்சி

5 மற்றும் 6வது வார்ப்புகள்

5 மற்றும் 6வது வார்ப்புகள்


6 வார்ப்புகளுடன் கூடிய கோவில் சுவரின் அடிப்பாகம்

6 வார்ப்புகளுடன் கூடிய கோவில் சுவரின் அடிப்பாகம்

Somnathpura

கருடனுடன் விஷ்ணு லக்ஷ்மி

கருடனுடன் விஷ்ணு லக்ஷ்மி

வெளிப்பிரகாரம்

வெளிப்பிரகாரம்

ஹொய்சளர்களின் கட்டிடக்கலைக்கு சான்றாக விளங்கும், பேலூர், ஹளபேடு வரிசையில் சோம்நாத்பூரும் சிறந்து விளங்குகிறது. அடுத்த முறை மைசூர் பயணம் மேற்கொள்ளும் பொழுது தவறாமல் சோம்நாத்பூர் – க்கும் சென்று வரலாமே!!!.

Roots Of India -வுடன் சித்திரைத் திருவிழா

சென்ற வருடம் முதல் முறையாக சித்திரை திருவிழாவிற்கு சென்று வந்த நான், இம்முறை Roots Of India வின் சார்பாக Photowalk ஆக சித்திரை திருவிழாவை, புகைப்படக்கலையில் ஆர்வமுள்ள சில நண்பர்களுடன், சென்று வந்தேன்.

Roots Of India(ROI) பற்றி தெரியாதவர்களுக்காக ஒரு சிறு முகவுரை.  முகநூலில் புகைப்படக்கலைஞர்களுக்காக பல குழுமங்கள் இருக்கின்றன. அதில் அக்கலைஞர்களுக்கு மத்தியில், 30,000க்கும் அதிகமான உறுப்பினர்களுடன் பிரபலமாக உள்ள குழுமமே ROI. சென்னை யில், புகைப்படக்கலையில் ஆர்வமுள்ளவர்களுக்காக இயங்கி வரும் “Chennai Weekend Clickers” குழுமத்தின் இன்னுமொரு வடிவமே இக்குழுமம். இதில் இந்தியாவின் வேர்களாக கருதப்படும் கலை, கலாசாரம், பண்டிகைகள், திருவிழாக்கள் ஆகியன பற்றிய படங்களை பதியலாம். இங்கு படங்களை பதிபவர்கள்,  பொழுதுபோக்கு புகைப்படக்கலைஞர்களில் இருந்து, நன்கு அனுபவமிக்க கலைஞர்கள் வரை அடங்குவர்.

வருடாவருடம் ROI ஆரம்பித்த மே 1-ம் தேதி, தேசிய அளவில் Photowalk நடத்துவது வழக்கம். இவ்வருடம் 15-க்கும் மேற்பட்ட இந்திய நகரங்கள் இதில் பங்குபெற்றன. சென்ற வருடம் நான் பெங்களூரில் இருந்ததினால் அங்கேயே கலந்து கொண்டேன். இவ்வருடம் மதுரையில், மீனாக்ஷி திருக்கல்யாணம் முடிந்த அடுத்த நாள்,  மே 1-ம் நாள் சொக்கரும், மீனாட்சியும் தேரில் மாசி வீதியில் வலம் வரும் நாளில் Photowalk சென்றேன். ROI யில் ஆர்வமுள்ள சில முகநூல் நண்பர்களும் என்னுடன் கலந்து கொண்டனர்.

Photowalk – ல் கலந்து கொண்ட நண்பர்கள் அனைவருக்கும் அன்றைய அனுபவம் மிகவும் பிடித்துப் போகவே, அடுத்த நாள் கள்ளழகர் அழகர் கோவிலில் இருந்து மதுரைக்கு கிளம்பும் விழாவிற்கும் சேர்ந்தே போகலாம் என முடிவு செய்து அழகர் கோவிலையும் ஒரு கலக்கு கலக்கி விட்டோம்.

அங்கு எடுத்த சில புகைப்படங்களை இங்கு உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
தேர் - ஐ பார்க்க மதுரை விளக்குத்தூண் பக்கத்தில் கூடி இருந்த மக்கள்...

தேர் – ஐ பார்க்க மதுரை விளக்குத்தூண் பக்கத்தில் கூடி இருந்த மக்கள்…

IMG_9248copy
அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய தேரின் அடிப்பாகம்.

அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய தேரின் அடிப்பாகம்.

Selfie எடுத்துக் கொள்ளும் பக்தர்கள்.

Selfie எடுத்துக் கொள்ளும் பக்தர்கள்.

கருப்பு வேடமணிந்த பக்தர்கள்.

கருப்பு வேடமணிந்த பக்தர்கள்.

கருப்பு வேடமணிந்த பக்தர்கள்.

கருப்பு வேடமணிந்த பக்தர்கள்.

தேர் வந்து சென்ற பின்பு, சாலையெங்கும் பிளாஸ்டிக் கவர்கள்.  நல்ல வேளையாக அவற்றை அப்புறப்படுத்துவதற்கு இவர்களைப் போன்றவர்களின் சேவை மிகவும் தேவையாகத்தான் இருக்கிறது.

தேர் வந்து சென்ற பின்பு, சாலையெங்கும் பிளாஸ்டிக் கவர்கள். நல்ல வேளையாக அவற்றை அப்புறப்படுத்துவதற்கு இவர்களைப் போன்றவர்களின் சேவை மிகவும் தேவையாகத்தான் இருக்கிறது.

ரிங் லைட்


இணையத்தில் இந்த சுட்டியில், வீட்டில் நாமாகத் தயாரிக்கும் Ring Light பற்றி படித்தது முதல் இம்மாதிரியான light செய்ய வேண்டுமென மிகவும் ஆசையாக இருந்தது. ஆனால் இது நம்மூரில் சாத்தியமா என சற்று யோசனை. மேலும் இதை செய்ய வேண்டுமெனில் என் கணவரின் உதவியை சற்றும் எதிர்பார்க்க முடியாது. வேலையில் மூச்சு விட மட்டுமே நேரம் அவருக்கு. 2 வாரத்திற்கு முன் முகநூல் நண்பர் “ராகேஷ்” இம்மாதிரியான light -ஐ செய்திருந்தார். இதன் உதவியினால் அவர் எடுத்திருந்த புகைப்படங்கள் அருமையாக வந்திருந்தன. அவருடைய முயற்சி எனக்கு மிகவும் நம்பிக்கை அளித்தது. சரி நாமும் செய்து பார்க்கலாம் என 1 வாரத்திற்கு முன்பு plywood கடைக்கு துணிந்து சென்று விசாரித்தேன். இது தான் முதல் படி, இதோ 1 வாரத்தில் light தயாராகி படங்கள் எடுத்தும் பார்த்து விட்டேன். மிகவும் அருமையான, மென்மையான light மற்றும் கண்களின் கருவிழியில் தெரியும் அழகான வட்டவடிவமான பிம்பம். இதை இதை தானே எதிர் பார்த்தேன் நான்.

சரி இந்த லைட் செய்வதற்கு என்னென்ன தேவை என்பதை சற்று விரிவாக பார்ப்போம்.
1. 10mm plywood 3 அல்லது 4 அடி விட்டத்தில் வெட்டுவதற்கு தேவையான அளவில் (நான் 3 அடி விட்டத்தில் செய்து கொண்டுள்ளேன்) வாங்கிக் கொள்ள வேண்டும்.
2. பின்பு அதை மர வேலை செய்பவர்களிடம் கொடுத்து படத்தில் காட்டியது போல் வெட்டி கொண்டுள்ளேன்.
3. அதை ஓர் Electrician -யிடம் கொடுத்து விளக்குகளை பொருத்திக் கொள்ள வேண்டியது தான். நான் உள் வட்டத்திற்கும் வெளி வட்டத்திற்கும் 12 , 12 பல்புகளாக மொத்தம் 24 பல்புகள் பொருத்தி இருக்கிறேன். 24 பல்புகள் பொருத்துவதினால், 25W பல்புகளே போதுமானதாக எனக்கு தோன்றியது. மேலும் ஒவ்வொரு வட்டத்திற்கும் தனித்தனியாக Dimmer(நம்ம fan regulator தாங்க) பொருத்திக் கொண்டேன். இது லைட் -ன் brightness-ஐ கூட்டியோ, குறைத்தோ வைத்துக் கொள்ள உதவும்.
இவை அனைத்தையும் செய்து முடிக்க Rs. 3200 செலவானது.


இதை, வீட்டில் ஊஞ்சல் மாட்டுவதற்காக இருந்த கொக்கியில் மாட்டி, நடுவில் பெரிதாக இருக்கும் வட்டம் வழியாக படங்கள் எடுக்க வேண்டியது தான். லைட் தயாரானவுடன் முதலில் தன்னைத் தான் படம் எடுக்க வேண்டும் என்பது என் மூத்த மகன் மதியின் வேண்டுகோள். ஆகவே அவனையே முதலில் படமெடுத்தேன். இம்மாதிரியான light , Fashion Photographers -க்கு மிகவும் உதவியாக இருக்கும் என நினைக்கிறேன்.

இப்பதிவின் PiT சுட்டி இங்கே.

தீபாவளியை முன்னிட்டு…

கடந்த 2, 3 வருடங்களாகவே தீபாவளி-க்காக மதுரை செல்வதை நிறுத்தி விட்டோம். பாலாஜி-க்கு கூட்டம் மற்றும் சத்தம் என்றாலே அலர்ஜி என்பதே காரணம். தீபாவளி அன்று மதுரை-ஐ விட பெங்களூர், IT கம்பெனி-யில் வேலை பார்க்கும் அனைவரும் அவரவர் சொந்த ஊர்களுக்கு போய் விடுவதினால், சற்று அமைதியாக இருக்கும். சென்ற வருடம் “லெபக்ஷி” எனும் ஊருக்கு போய் வந்தோம். அதற்கு முந்தைய வருடம் “ஒகனேக்கல்” சென்று வந்தோம். அதே போல் இந்த வருடமும் எங்காவது செல்ல வேண்டும் என நினைத்து “எங்கு” என யோசிக்கையில் (இப்படி யோசிக்கும் சமயம், பாலாஜி பிளான் என்கிற பெயரில் உலகத்தையே சுற்றிக் காண்பித்து விடுவார் -திறமைசாலி) “மைசூர் Zoo ” என முடிவானது.

நான் ஏற்கனவே ஒரு முறை அங்கு சென்று வந்துவிட்டதினால் எவ்வளவு பெரிய Zoo, எவ்வளவு நேரம் ஆகும் என்று தெரிந்திருந்தது. ஆகவே காலை 10 மணிக்கு அங்கு உள்ளே செல்லும் படியாக நேரத்தை கணக்கிட்டு பெங்களூரிலிருந்து கிளம்பினோம். உள்ளே செல்லும் பொழுது சரியாக 10 மணி…

பெங்களூரின் “பன்னார்கட்டா Zoo” வை விட பரப்பளவில்(167 ஏக்கர்) மட்டுமல்லாது அங்கு பாதுகாக்கப்படும் விலங்கினங்களின் வகைகளிலும்(168 வகைகள்) மிகப் பெரியது இந்த மைசூர் Zoo. 1892 -ம் ஆண்டு நிறுவப்பட்டு உலகின் மிகப்பழமையான மிருகக் காட்சி சாலையில் ஒன்றாக விளங்குகின்றது.

உள்ளே செல்லும் பொழுதே நம் பைகளை நன்றாக சோதித்து எந்தவொரு பிளாஸ்டிக் பொருட்களும் இல்லை என தெரிந்த பின்பே அனுமதிக்கின்றனர். ஆதலால் zoo முழுக்க பிளாஸ்டிக் இல்லாத பச்சை பசேல் என்ற சூழல் அனைவரையும் அதிகமாகக் கவர்கிறது. அங்கிருக்கும் ஒவ்வொரு கூண்டும், தினசரி நன்றாக சுத்தம் செய்யப்பட்டு சுத்தமான உணவுகள் அங்கிருக்கும் பிராணிகளுக்கு வழங்கப்படுகிறது. பல அரிதான விலங்குகளை இங்கு மிகவும் கவனமாகப் பாதுகாக்கிறார்கள். அங்கு நான் எடுத்த புகைப்படங்களில் சில…

பறவைகளின் கூண்டுகளை சுத்தப்படுத்தும் துப்புரவு தொழிலாளி

பறவைகளின் கூண்டுகளை சுத்தப்படுத்தும் துப்புரவு தொழிலாளி


குரங்கினங்களில் மிக அரிய வகை குரங்குகளை இங்கே காண முடிகிறது. அதில் எங்களை மிகவும் கவர்ந்தவர் இதோ இவர் தான். அச்சு அசல் மனிதனைப் போலவே இருந்தார்.

IMG_5432copy

IMG_5354copy

இங்கு பெலிக்கன், ஹெரான் மற்றும் painted stork போன்ற பறவைகளுக்காக மிகப் பெரிய கூண்டு ஒன்று அமைக்கப்பட்டிருகிறது. அதில் என்ன விசேஷம் என்றால், நாம் அதன் உள்ளே சென்று அப்பறவைகளை மிக அருகே காணலாம் என்பதே. “சித்தார்த்” மிக விருப்பப்பட்டு ரசித்ததில் இதுவும் ஒன்று.


இவ்வளவையும் கண்டு ரசித்து வெளியில் வர சரியாக 4 மணி நேரம் ஆகியது. இத்தனைக்கும் மழையின் காரணமாக சிலவற்றை தவிர்க்க வேண்டியதாயிற்று.

வெளியில் வந்த பின்பு ஓர் நல்ல ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு, St. Philomina சர்ச் பார்த்து விட்டு சரியாக 4 மணிக்கு பெங்களூர் கிளம்பினோம். எப்பொழுதும் 3 மணி நேரத்தில் மைசூரிலிருந்து பெங்களூர் போய் விடலாம். ஆனால், மழை-இன் காரணாமாக போக்குவரத்து நெரிசலாகி அன்று 5 மணி நேரம் ஆகியது. இதனால் எனக்கும் பாலாஜிக்கும் தலைவலியே வந்துவிட்டது. காலையில், அனைத்தையும் ரசித்து அடைந்த சந்தோஷத்துடன் வீடு போய் சேர முடியவில்லை. கார் ஓட்டிக்கொண்டிருக்கும் பொழுது, பாலாஜி ஆள்காட்டி விரலை தன் முன்னே நீட்டி வடிவேலு style-ல், “இனிமே மைசூர் ரோட்டுக்கு கார் எடுத்துட்டு வருவே, வருவே” என்று கேட்டுக் கொண்டது தலைவலியின் நடுவிலும் சிரிப்பை வரவழைத்தது. இப்படி போக்குவரத்து நெரிசலில் திடீரென்று எங்களுக்கு ஓர் ஞானோதயம் பிறந்தது, என்னவென்றால் இனி மைசூர் செல்வதெனில் கண்டிப்பாக ரயிலில் பயணம் செய்வது என்று. இதனால் நேரம் மிச்சமாவதுடன், அங்கு ஊர் சுற்றிய சந்தோஷம் குறைந்தது 2 நாட்களுக்காவது நீடிக்கும்.


இத்தனைக்கும் நடுவிலும் மனதில் சிறிது சந்தோஷம், ஏனென்றால், இந்த போக்குவரத்து நெரிசலை வெறுத்தவர்களுள் கண்டிப்பாக 5, 6 பேராவது ரயில் போன்ற “Public Transport” ஐ உபயோகப்படுத்த வேண்டுமென்று எங்களைப் போன்று நினைத்திருப்பார்கள். இது நல்ல விஷயம் தானே…

பரதம்

கலையை ரசிக்காதவர்கள் யாரவது இருக்கிறார்களா என்ன!!!… அதிலும் நாட்டியம்!!… மற்றவர்களுக்கு எப்படியோ, ஆனால் எனக்கு, சிறுவயதில் இருந்தே நான் கற்றுக்கொள்ள நினைத்த கலைகளுள் ஒன்று. எல்லோருக்கும் எல்லாமும் கற்றுக்கொள்ளும் வாய்ப்பு அமைந்து விடுவதில்லை தான். பரதத்தை T.V யில் கண்டதுண்டு, ஆனால் நேரில் பார்க்கும் வாய்ப்பு இதுவரை எனக்கு கிடைக்கவில்லை. தோழி சௌம்யா-வின் நாட்டிய நிகழ்ச்சி தான் நான் நேரில் பார்த்த முதல் நிகழ்ச்சி. நாட்டியத்தை ரசிப்பதினால் மட்டுமே அதை கேமரா-வில் பதிவு செய்யவும் என்னால் ஆர்வம் காண்பிக்க முடிகிறது என நான் நினைக்கிறேன்.

தோழி சௌம்யா

தோழி சௌம்யா

சௌம்யவுடன் சேர்ந்து, செப்டம்பர் மாதம் பெங்களூர் NGMA (National Gallery of Modern Art) -ல் நடந்த, ருக்மிணி விஜயகுமார் அவர்களின் நாட்டிய நிகழ்ச்சிக்கு சென்றிருந்தேன். வீட்டிலிருந்தே சற்று வேகமாக கிளம்பி சீக்கிரமாக சென்றடைய வேண்டுமென்று முன்கூட்டியே பிளான் செய்து கிளம்பினோம். சரியான நேரத்தில் நாம் கிளம்பினாலும், இந்தியாவில் அப்படி எல்லாம் சென்றுவிட முடியுமா என்ன?. முன்தினம் பெய்த மழையின் காரணமாக போக்குவரத்து நெரிசலில் மாட்டிக்கொண்டு, முக்கால் மணி நேரத்தில் போக வேண்டிய இடத்திற்கு ஒன்றரை மணி நேரத்தில் போய் சேர்ந்தோம். போகும் வழி முழுவதும் , “ஆரம்பித்திருப்பார்களோ” என்ற பதற்றம் என்னுள் இருந்து கொண்டே இருந்தது. என்னுடைய முகத்தைப் பார்த்தே புரிந்து கொண்ட சௌம்யா, “சீக்கிரம் போய்விடலாம்.. நிச்சயமாக உனக்கு நல்ல படங்கள் கிடைக்கும்”, என என்னை சமாதானப் படுத்திக் கொண்டே வந்தார். ஒரு வழியாக நாங்கள் அங்கு சென்றடைந்த நேரத்தில், ருக்மிணி அவர்கள் “புஷ்பாஞ்சலி” யை மட்டும் முடித்திருந்தார்.

ருக்மிணி விஜயகுமார்

ருக்மிணி விஜயகுமார்

அங்கு உள்ளே நுழைந்தவுடன் அவரின் நாட்டியத்தை பார்த்து சிறுது நேரம் கேமரா-வை வெளியில் எடுப்பதற்கு கூட மறந்து விட்டேன். எனக்காகவே சிலர் முன்வரிசையில் 2,3 சீட்டை விட்டு வைத்திருந்தனர் போலும். வேகவேகமாக அதில் சென்று அமர்ந்து கொண்டோம். நான் கேமரா-வின் கண்கள் வழியே ரசித்த அவருடைய நாட்டியம் இதோ உங்களுக்காகவும்.

பெங்களூரின் பீடி சுற்றும் தொழில்

2, 3 மாதங்களுக்கு முன்பு பாலாஜி தன் நண்பருடன் ஏதோ பேசிக் கொண்டிருக்கும் பொழுது, பீடி சுற்றும் தொழிலாளர்களைப் பற்றிய பேச்சு வந்தது. அப்பொழுதிலிருந்து அவர்களைப் பற்றி கொஞ்சம் அதிகமாக தெரிந்து கொள்ள வேண்டுமென்ற ஆவல் வந்தது. அதன் விளைவே இக்கட்டுரை…

ஓர் சனிக்கிழமையை தேர்ந்தெடுத்து, பாலாஜி-இன் நண்பருடன் அத்தொழிலைச் செய்யும் குடும்பங்கள் வசிக்கும் பகுதிக்குச் சென்றோம். அது மைசூர் ரோடு அருகில் இருக்கும் கோரிபாள்யா எனும் இடம். பெங்களூர் என்றவுடன் அனைவருக்கும் நினைவுக்கு வருவது பல அடுக்கு மாடிகளைக் கொண்ட சாப்ட்வேர் நிறுவனங்களும், “இந்தியாவின் Silicon Valley” என்ற பெயரும் தான். மேலும் இந்தியாவின் வளர்ச்சி நன்கு சென்றடைந்த நகரம் என்ற கருத்தும் அனைவருக்கும் இருக்கும். நம் நாட்டின் வளர்ச்சி குறைந்த பட்ச மக்களையே சென்றடைந்திருக்கிறது என்பதை இந்த மக்களின் வாழ்க்கை முறை சந்தேகத்திற்கின்றி நிரூபிக்கின்றது.

சிகரெட் என்பது மேல்மட்டத்தில் உள்ளவர்களுக்கென்று ஆகிவிட்ட நிலையில், கட்டிடத் தொழிலாளிகளும், சாக்கடையை தூர்வாரும் பணியில் இருப்பவர்களும் பீடியை வாங்கித்தான் பயன்படுத்துகிறார்கள். வாழ்க்கையின் பிரச்சனைகளிலிருந்து சற்று நேரம் விடுபட இவர்களுக்கு பீடி உற்ற துணையாக இருக்கிறதென்று நம்புகின்றனர்.

பல வருடங்களுக்கு முன்பு சுடுகாடாக இருந்த இடம் இப்பொழுது இவர்களின் வீடுகளாக உருமாறி இருக்கின்றன. இங்கு வசிக்கும் மக்களில் பெரும்பாலானோர் “கோலார்” மற்றும் “குனிகல்” பகுதியில் இருந்து வந்தவர்களே. இப்பகுதியில் இருக்கும் சுமார் 700 குடும்பங்கள் இந்த பீடி சுற்றும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். மிகவும் குறுகிய பாதைகளுடைய தெருக்களில் வசிக்கும் இவர்களுள் 30 – 40% பேர் பொது கழிப்பறையையே பயன்படுத்துகின்றனர்.

குறுகலான தெருவில் நின்று போஸ் கொடுக்கும் அப்பகுதியை சேர்ந்த சிறுவன்...

குறுகலான தெருவில் நின்று போஸ் கொடுக்கும் அப்பகுதியை சேர்ந்த சிறுவன்…

இவர்களின் பீடி சுற்றும் தொழில் பற்றி சில தகவல்கள்.
இத்தொழில் செய்பவர்கள் இதற்கு தேவையான பீடி சுற்றும் இலையையும்(டெண்டு இலை), புகையிலையையும் பீடி கம்பெனி-களிலிருந்து கொண்டு வருகின்றனர். 1 கிலோ பீடி சுற்றும் இலைக்கு 1800 முதல் 2000 பீடிகள் வரை சுற்றித் தர வேண்டும் கம்பனிகளுக்கு. பீடிகளின் எண்ணிக்கை குறைவாக இருந்தால் அதற்கு ஏற்றாற்போல் இவர்களுக்கு கிடைக்கும் கூலியை குறைத்து விடுகின்றனர் கம்பெனிக்காரர்.

டெண்டு இலையை நன்கு தண்ணீரில் ஊற வைத்து பின்பு ஓர் அளவு அச்சை வைத்து வெட்டி எடுத்து அதில் புகையிலையை திணித்து நூல் கொண்டு கட்டி வைக்கின்றனர். பின்பு ஓர் கட்டுக்கு 25 பீடிகள் வீதம் கட்டி கம்பனிகளுக்கு அனுப்புகின்றனர். கம்பெனிகாரர், அதன் மேல் தங்கள் கம்பெனி பெயருள்ள லேபில்-ஐ ஒட்டி அதை சந்தைக்கு அனுப்புகின்றனர்.

அச்சின் அளவில் பீடி இலையை வெட்டுகிறார்....

அச்சின் அளவில் பீடி இலையை வெட்டுகிறார்….

புகையிலையை நிரப்பிய பின் பீடியின் இருமுனையும் அடைக்கப்படுகிறது...

புகையிலையை நிரப்பிய பின் பீடியின் இருமுனையும் அடைக்கப்படுகிறது…


இங்கு ஆண், பெண் என்ற வித்தியாசமின்றி அனைவரும் வேலை செய்கின்றனர். பெண்கள் வீட்டு வேலையுடன் சேர்த்து ஓர் நாளைக்கு 500 – 800 பீடிகளை சுற்றுகின்றனர். ஆண்கள் நாள் ஒன்றுக்கு 1000 பீடிகள் வரை சுற்றுகின்றனர். 1000 பீடி சுற்றினால் அவர்களுக்கு கூலியாக 110 – 120 ருபாய் வரை கிடைக்கிறது. இந்த வேலையை தவிர்த்து அவர்கள் தனியாக இரும்புக் கடைகளிலும், மெக்கானிக் கடைகளிலும் வேலைக்கு செல்கின்றனர்.

இங்கு வசிக்கும் பெண்களில் பலருக்கு 13 – 15 வயதிலேயே கல்யாணம் முடித்து விடுகின்றனர். அவர்களுக்கு 25 வயதாகும் பொழுது 3, 4 குழந்தைகளுக்கு அம்மா ஆகி விடுகிறார்கள். இவர்கள் குழந்தைகள் படிப்பதற்கு அந்த பகுதியிலேயே ஆண்களுக்கு, பெண்களுக்கு எனத் தனித்தனியே பள்ளிகளும் கட்டிக் கொடுத்திருக்கிறது அரசாங்கம். அனால் அப்பள்ளிகளில் 7-ம் வகுப்பு வரை மட்டுமே இருக்கிறது. ஆண் குழந்தைகள் எப்படியும் வேறு பகுதிகளுக்கு சென்று படித்து விடுகின்றனர், ஆனால் பெண் குழந்தைகளின் நிலை?.. பெங்களூரில் வேறு, கடந்த சில மாதங்களாக பள்ளிகளில் படிக்கும் சிறு குழந்தைகளுக்கு நேரும் அவலங்களை அனைவரும் கேள்விப்பட்டிருப்பீர்கள். அதனாலேயே அவர்களுக்கு சீக்கிரம் கல்யாணம் முடித்து விடுகிறார்கள் போலும். பெண் குழந்தைகளுக்கு கல்வி எவ்வளவு முக்கியம் என்பது, என் உறவினர்கள் எல்லாம் வேண்டாம் என்று சொல்லச் சொல்லக் கேட்காமல் என்னை என் அப்பா படிக்க வைத்த பொழுதும் நான் சரியாக உணரவில்லை தான். ஆனால் இந்த குழந்தைகளையும், அவர்களின் அம்மாக்களையும் பார்க்கும் பொழுதே புரிந்து கொள்ள முடிகிறது. நன்கு படித்ததினால் மட்டுமே எனக்கு பிடித்த விஷயங்களை என்னால் ஓரளவிற்கு செய்ய முடிகிறது.

கம்ப்யூட்டர் மற்றும் செல்போன் ஆகியவற்றின் தாக்கம் குறைவாக இருப்பதினாலோ என்னவோ குழந்தைகள் தெருக்களில் வந்து மற்ற பிள்ளைகளுடன் விளையாடுகின்றனர்.

சிறுவர்கள் திருடன், போலீஸ் விளையாட்டை விளையாடுகின்றனர்...

சிறுவர்கள் திருடன், போலீஸ் விளையாட்டை விளையாடுகின்றனர்…

அங்கு சென்று விட்டு வந்ததிலிருந்து வாழ்கையே ஸ்தம்பித்து போய்விட்டது போல் மனதில் ஓர் கனம். இத்தனை கஷ்டங்களுக்கு நடுவில் அவர்கள் வாழ்கை சந்தோஷமாக இருக்குமா என்பது நமக்கு சந்தேகம் தான். ஆனால் அவர்கள் சந்தோஷமாகத் தான் அவர்களது வாழ்க்கைப் பயணத்தை தொடர்கிறார்கள். படித்த நாமோ சிறு சிறு அற்ப விஷயங்களுக்காக சண்டையிட்டுக் கொள்கிறோம். நாம் நிறைய கற்றுக்கொள்ள வேண்டித்தான் இருக்கிறது அவர்களிடமிருந்து.