சிக்மகளூர்

தசரா விடுமுறைக்கு ஒவ்வொரு முறையும் மதுரையில் அம்மா வீட்டுக்கு சென்று வருவது தான் வழக்கம். இம்முறை என் தங்கை(சித்தி மகள்), தன் அலுவலக நண்பர்களுடன் சிக்மகளூர் சென்று வர திட்டமிட்டிருப்பதாகவும் நீயும் மதியும் வந்தால் நன்றாக இருக்கும் என ஆசைப்பட்டாள். அலுவலக நண்பர்களுடன் என்பதால் முதலில் சற்று தயங்கினேன். தங்கையோ, “அவர்கள் அனைவரும் நன்றாக பேசுவார்கள், நீ தயங்காமல் வா” என கூறியவுடன் நானும் மதியும் அவர்களுடன் செல்ல சம்மதித்தோம்.

3 நாட்கள் சென்று வருவது என திட்டமிட்டபடி முதல் நாள் காலை 6 மணிக்கு பெங்களூரில் இருந்து ரயிலில் புறப்பட்டோம். ரயில் “அர்சிகரே” ஜுங்க்ஷனை காலை 9 மணிக்கு சென்றடைந்தது. அங்கிருந்து பயணிக்க ஓர் “TT ” யும், சிக்மகளூரில் ஓர் “ஹோம் ஸ்டே ” யில் தங்குவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இரவு சிக்மகளூர் செல்வதற்கு முன் பேலூர், ஹளபேடு கோவில்களில் ஹொய்சளர்களின் அழகிய சிற்பங்களை ரசித்துவிட்டு, அப்படியே அங்கிருக்கும் “யகாச்சி” அணையையும் சுற்றிப்பார்த்தோம். அடுத்த நாள் “முல்லையங்கிரி” மலைக்கு சென்று வர திட்டமிட்டிருந்ததினால் முதல் நாளை இத்துடன் முடித்துக்கொண்டோம்.

பேலூர் மற்றும் ஹளபேடில் எடுத்த சில படங்கள்.

 

 

 

 

 

 

 

யகாச்சி அணை

யகாச்சி அணை

அடுத்த நாள் காலை 5 மணிக்கெல்லாம் புறப்பட்டு விட்டோம், முல்லையங்கிரி-ஐக் காண. விடுமுறை தினமாதலால் மலைப்பாதை முழுக்க கார்கள் எறும்புகளைப் போல் ஊர்ந்து கொண்டிருந்தது. பாதை மிகவும் குறுகலாக இருப்பதினால் நல்ல தேர்ந்த கார் ஓட்டிகளினால் மட்டுமே பாதுகாப்பாக ஓட்ட முடியும் என தெரிந்து கொண்டோம். மேலும் முல்லையங்கிரி மலையை அடைய 3 கி.மீ. முன்னதாகவே “TT ” யை போலீஸ் நிறுத்திவிட்டது. சிறிய அளவு கார்கள் மற்றும் பைக்-களை மட்டுமே அதற்கு மேல் அனுமதித்தனர். சிறிது நேரம் நின்று போலீஸிடம் “TT” ஐ அனுமதிக்குமாறு கேட்டு பார்த்தோம். அவர் கண்டிப்புடன் அனுமதிக்க முடியாது என சொல்லியவுடனே மெது மெதுவாக, பக்கவாட்டில் இருந்த மலைகளையும், சிறு சிறு பூக்களையும், பனித்துளிகளை அணிகலன்களாக பூட்டிக்கொண்டிருந்த புற்களையும், சிலந்தி வலைகளையும் ரசித்துக் கொண்டும், படமெடுத்துக் கொண்டும் மலையின் உச்சியை சென்றடைந்தோம்.

முல்லையங்கிரி மலைக்கு போகும் வழியில் எடுத்த சில படங்கள்

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

மலை உச்சியில் அமைந்திருந்த கோவிலில் “மூலப்ப ஸ்வாமி” ஐ தரிசித்து விட்டு, சற்று நேரம் அங்கு நம் காலடியில் மிதந்து கொண்டிருந்த மேகங்களின் அழகில் மெய்மறந்து அமர்ந்திருந்தோம். காலை உணவை உட்கொள்ளாததை வயிறு சற்று ஞாபகப்படுத்தவே, மெதுவாக அங்கிருந்து கீழே இறங்க ஆரம்பித்தோம்.

மலை உச்சியிலிருந்து எடுத்தவை

 

பல நாட்களாக இப்படி ஒரு படம் எடுக்க வேண்டுமென்ற ஆசை அன்று நிறைவேறியது….

முல்லையங்கிரி- ஐ பார்த்து விட்டு அங்கிருக்கும் சில அருவிகளையும் கண்டுவிட்டு செல்லலாம் என நினைத்திருந்தோம். ஆனால் போக்குவரத்து நெரிசல் காரணமாக அவற்றை காணமுடியாமல் ரூமிற்கு செல்ல நேர்ந்தது. சரி அடுத்த நாள் சீக்கிரமே கிளம்பி சென்று அவற்றை பார்த்து விடலாம் என எண்ணி ரூம் போய் சேர்ந்தோம்.

அடுத்த நாள் “மாணிக்கதாரா” அருவியைக் காண காலை 4:30 மணிக்கெல்லாம் மலைப்பாதையை தொட்டுவிட்டோம். அப்பொழுது தான் வண்டியின் “பெல்ட்” ஒன்று அறுந்து விடவேண்டுமா…. அனைவரும் டென்ஷன் -இன் உச்சிக்கே சென்று விட்டோம். நல்ல வேளையாக டிரைவரும், நண்பர் மோகனும் அவர்களுடைய நண்பர்களுடன் பேசி ஓர் ஜீப்-ஐ ஏற்பாடு செய்தனர். அனைவரும் ஜீப்-இல் ஏறி புறப்பட்டோம். மனதில் “செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்….” பாட்டு ஓடிக்கொண்டிருக்க, சில கிலோமீட்டர் சென்றிருப்போம், திடீரென்று பாட்டு நின்று விட்டது. என்னவென்று பார்த்தால் ஜீப்-இன் டயர் பஞ்சர். நல்ல வேளையாக மாற்று டயர் இருந்ததினால் தப்பித்தோம். டயரை மாற்றிக் கொண்டு புறப்பட்டு ஒருவழியாக அருவியை பார்த்து விட்டு திரும்பினோம்.

மாணிக்கதாரா அருவி

மாணிக்கதாரா அருவி

மாணிக்கதாரா அருவி சென்று விட்டு வரும் வழியில் எடுத்தவை

மாணிக்கதாரா அருவி சென்று விட்டு வரும் வழியில் எடுத்தவை

அன்று மாலையே அர்சிகரே -இல் ரயிலை பிடிக்க வேண்டும். நேரமின்மை காரணமாக அர்சிகரே செல்லும் முன்பு இன்னும் ஒரே ஓர் அருவியை பார்த்து விடலாம் என்று “கல்ஹட்டி” அருவியை நோக்கி புறப்பட்டோம். அங்கும் அதே கதை தான். கூட்ட நெரிசலால் அருவியின் அருகில் வேன் செல்ல முடியாமல் 1 கி .மீ. முன்பே இறங்கி சேருக்கும் சகதிக்கும் நடுவில் நடந்து சென்று ஒருவழியாக அருவியை சென்றடைந்தோம். கூட்ட மிகுதியினால் கால் மட்டும் நனைத்துக் கொண்டு புறப்பட்டோம்.

 

கல்ஹட்டி அருவி

கல்ஹட்டி அருவி

கல்ஹட்டி அருவி

கல்ஹட்டி அருவி
படம் – என் தங்கை

மாலை அர்சிகரே -யில் ரயிலைப் பிடித்து இரவு வீடு வந்து சேர்ந்தோம். சென்ற வருடம் சென்று வந்த வாரணாசிக்கு அடுத்து எந்த ஒரு புகைப்பட பயணமும் மேற்கொள்ளவில்லை. என் மனமளவிற்கு உடல் ஒத்துழைக்கவில்லை என்பதே காரணம். அப்பொழுது நினைத்த படி, கால்களை ஓரளவு வலுப்படுத்திக் கொண்ட பின்னரே (உடற்பயிற்சி மற்றும் உணவு முறையில் மாற்றம்), இப்பயணத்தை மேற்கொண்டேன். இல்லையென்றால் 6 கி.மீ. நடந்து முல்லையங்கிரி மலையை பார்த்திருக்க முடிந்திருக்காது. “Health is Wealth” என்பது எவ்வளவு உண்மை. மொத்தத்தில் இப்பயணம் புது புது நண்பர்களைக் கொடுத்து எப்பொழுதும் போலவே ஓர் வித்தியாசமான பயணமாகவே அமைந்தது.

Advertisements

மயான கொள்ளை – காவேரிப்பட்டிணம்

2016 வருடத்தின் இரண்டாம் பயணம், காவேரிப்பட்டிணத்திற்கு, மயான கொள்ளை திருவிழாவிற்காக. 2 வாரத்திற்கு முன்பே நண்பர்களுடன் பேசிக் கொண்டபடி மார்ச் மாதம் 8-ம் தேதி காலையில் பெங்களூரில் இருந்து புறப்பட்டோம். ஊர் போய் சேர சரியாக 2 மணி நேரம் எடுத்துக் கொண்டது. திருவிழாவிற்காக வண்டிகளை ஊருக்குள் அனுமதிக்கவில்லை. கோவிலுக்கு சிறிது தொலைவில் வண்டியை நிறுத்தி விட்டு, திருவிழாவிற்காக சாலையின் இருபுறமும் புதிதாக முளைத்திருந்த சிறு சிறு கடைகைகளை ரசித்துக் கொண்டே கோவில் போய் சேர்ந்தோம். இங்கு கிராம தேவதைகளான பூங்காவனத்தம்மன் மற்றும் அங்காளம்மன் ஆகிய இருவரையும் முன்னிறுத்தியே திருவிழா கொண்டாடப்படுகிறது. விழா எடுக்கப்படும் காரணத்தையும் கதையையும் Wiki மற்றும் பல இணைய தளங்களில் ஏற்கனவே அதிகமாக பகிரப்பட்டு விட்டிருக்கின்றன. ஆகவே இப்பதிவில், விழாவில் நான் எடுத்த புகைப்படங்கள், ரசித்தவை,  மனதை உறுத்தியவை ஆகியவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

திருவிழாவில் முக்கியமாக, மக்கள் தாங்கள் வேண்டிக்கொண்டபடி நேர்த்திக்கடனை அம்மனுக்கு செலுத்துகின்றனர். கன்னத்தில் அலகு குத்துவது, ஆண்களும்  பெண்களும், சிறுவர் சிறுமியரும்,  காளி போன்று வேடமிட்டுக்கொண்டு மயானத்திற்குச் சென்று சில சடங்குகளை செய்து விட்டு வேடங்களை களைவது போன்றவை நேர்த்திக்கடனில் சேர்கிறது.  இதில், அம்மனின் ஆயுதமான சூலாயுதத்தை மக்கள் பல அளவுகளில் கன்னத்தில் குத்திக் கொள்கின்றனர். ஒரு ஜாண் அளவிலிருந்து, 301 அடி வரையிலும் சூலாயுதத்தின் அளவு வேறுபடுகிறது. இதில் என்னை வெகுவாறு பாதித்த விஷயம், சூலாயுத கம்பிகளில் பிடித்திருந்த “துரு”.  கம்பியுடன் இருக்கும் துரு, கன்னத்தில் “செப்டிக் ” ஏற்படுத்தி விடாதா?. இதிலிருந்து மக்கள் தங்களை காத்துக் கொள்ள என்ன மருந்து எடுத்துக் கொள்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ள ஆவலாக இருந்தது. அடுத்த முறை செல்லும் பொது கண்டிப்பாக அதை அவர்களிடம் கேட்டுக் கொள்ள வேண்டும் என எண்ணிக் கொண்டேன்.

இதோ அங்கு எடுத்த சில படங்கள்.

காளியாக வேடமிட்டுள்ள சிலர்
காளியாக மாறும் முன்...

காளியாக மாறும் முன்…

"மேக்கப் போட்டுக் கொள்ள மாட்டேன்" என்று அழும் குழந்தையை சமாதானப்படுத்தும் தாய்.

“மேக்கப் போட்டுக் கொள்ள மாட்டேன்” என்று அழும் குழந்தையை சமாதானப்படுத்தும் தாய்.

சாமியாடும் பெண்ணை கோழியின் ரத்தத்தைக் கொடுத்து சாந்தியடையச்  செய்கின்றனர்.

சாமியாடும் பெண்ணை கோழியின் ரத்தத்தைக் கொடுத்து சாந்தியடையச் செய்கின்றனர்.

நாக்கில் அலகு குத்திக் கொள்ளும் பொழுது

நாக்கில் அலகு குத்திக் கொள்ளும் பொழுது

சென்னையிலிருந்து பல புகைப்பட நண்பர்கள் அங்கு வந்திருந்ததால் முதல் முறை சென்றிருக்கிறோம் என்ற எண்ணம் துளி கூட இருக்கவில்லை. ஆனால் “மகளிர் தினத்தன்று” , அங்கு, ஒரு பெண் புகைப்படக் கலைஞர் கூட இல்லையே என்ற வருத்தம் இல்லாமல் இல்லை.
மதியம் வரை கோவிலில் நேரத்தை கடத்தி விட்டு ஊருக்கு செல்லலாம் என கிளம்பி வெளியில் வரும் பொழுது தான் தெரிந்தது,  நாங்கள் வரும் பொழுது கூட்டம் சற்று குறைவாக இருந்த தெருக்களை பலவிதமான காளிகள் ஆக்கிரமித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களின் நீண்ட நெடிய சூலத்திலிருந்து தப்பித்துக் கொண்டு ஒரு வழியாக கோவிலைக் கடந்து வந்தோம்.
தென்பெண்ணையாற்றின் கரையோரத்தில் இருக்கும் மயானத்தில் தான் திருவிழாவின் இன்ன பிற சடங்குகள் நடைபெறும். நேரமின்மை காரணமாக அங்கு செல்லாமலேயே ஊர் திரும்பினோம்.

மார்ச் மாதம் ஆதலினால் என் மகன்களுக்கு முழுப்பரீட்சை ஆரம்பித்து இருந்தது. “நான் காவேரிபட்டினத்திற்கு போய் வரவா? ” என பாலாஜி-யிடம் கேட்கும் பொழுது, “நான் வீட்டிலிருந்தே வேலை பார்க்கிறேன், நீ போயிட்டு வா ” என கூறி, நாள் முழுவதும் குழந்தைகளை பார்த்துக் கொண்டு, சாயங்காலம் களைப்பாக வந்த எங்களுக்கு டீ (வேறு)செய்து கொடுத்தார். இரண்டு வருடங்களாக போய் வர வேண்டும் என நினைத்திருந்த காவேரிப்பட்டிணத்திற்கு சென்று வந்தது மிகுந்த சந்தோஷத்தைக் கொடுத்தது. “என்னுடைய இந்த உதவிகளே, இவ்வருடத்தின் உனக்கான மகளிர் தின பரிசு” எனக் கூறி அந்த சந்தோஷத்தை இரட்டிப்பாக்கினார் பாலாஜி.

புது மண்டபம்

மதுரையில் பிறந்த மற்றும் அங்கு வாழ்கின்ற மக்களில் பலர் தங்கள் வாழ்நாளில் ஒரு முறையேனும் கண்டிப்பாக புது மண்டபம் சென்றிருப்பார்கள். ஏனெனில் குழந்தை பிறப்பிலிருந்து, மக்கள் சாகும் வரையில் தேவையான அத்தனை பொருட்களும் கிடைக்கும் இடமாக இருக்கிறது புது மண்டபம். இக்கால மக்களுக்கு புது மண்டபம் என்று சொன்னவுடன் சட்டென நினைவுக்கு வருவது பித்தளை பாத்திரக்கடைகளும் புத்தகக் கடைகளும் தான். ஆனால் பலருக்கு இது எதற்காகக் கட்டப்பட்டது, மற்றும் அதன் வரலாற்றினைப் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதைப் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வோமா?

புது மண்டபத்தின் முன்புறத் தோற்றம்.

புது மண்டபத்தின் முன்புறத் தோற்றம்.


மண்டபத்தின் எதிரில் இருக்கும் நந்தி மற்றும் ராயகோபுரம்.

மண்டபத்தின் எதிரில் இருக்கும் நந்தி மற்றும் ராயகோபுரம்.


இந்த மண்டபம் 1500 க்களில் நாயக்க மன்னர்களால் கட்டப்பட்டுள்ளது. வரிசைக்கு 20 தூண்கள் வீதம் 5 வரிசைகளில் மொத்தம் 100 தூண்கள் உள்ள வசந்த மண்டபத்தைச் சுற்றியே இப்பொழுதுள்ள கடைகள் இருக்கின்றன. வருடந்தோறும் சித்திரைத் திருவிழாவின் பொழுது இங்கு மீனாக்ஷி மற்றும் சுந்தரேஸ்வரர் எழுந்தருள்வர்.

நாயக்கர்கள் காலத்தில் இந்த மண்டபம், முக்கியமாக அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், கோவிலுக்கு சென்று வந்த பின்னர் இளைப்பாறுவதற்கே பயன்படுத்தி வந்துள்ளனர். மேலும் இப்பொழுதுள்ள புத்தகக் கடைகள் மற்றும் பித்தளைப் பாத்திரக்கடைகள் இருக்கும் இடம் தண்ணீர் செல்லும் கால்வாயாக பயன்படுத்தி வந்துள்ளனர். ராணியர் வந்து இளைப்பாறும் பொழுது குளிர்ச்சியாக இருக்கவே இந்த ஏற்பாடு.

இந்த மண்டபத்தில் மீனாட்சியின் திக்விஜயக் காட்சியும், சிவபெருமானுடைய ஊர்த்துவத்தாண்டவக் காட்சியும் சிலைகள் மூலம் சித்தரித்துள்ளனர்.

திக்விஜயத்தின் பொழுது தடாதகை மூன்று மார்பகங்களுடன்....

திக்விஜயத்தின் பொழுது தடாதகை மூன்று மார்பகங்களுடன்….

தடாதகையின் எதிரில் சிவபெருமான்.

தடாதகையின் எதிரில் சிவபெருமான்.

பத்திரகாளி

பத்திரகாளி

பத்திரகாளியின் எதிரே ஊர்த்துவ தாண்டவர்.

பத்திரகாளியின் எதிரே ஊர்த்துவ தாண்டவர்.

மண்டபத்தின் தூண்களின் நடுவில் உள்ள பட்டயக் கல்லில் சிவபெருமானின் 64 திருவிளையாடலும் செதுக்கப்பட்டுள்ளன. கிழக்கு வாயிலிலும், தெற்கு வாயிலிலும் 2, 2 குதிரைகள் மண்டபத்தை இழுத்து செல்வது போன்று உருவாக்கி இருப்பதினால் இம்மண்டபம் ஓர் ரதம் போன்று காட்சியளிக்கிறது(இதனை புது மண்டபத்தின் முன்புறத் தோற்றப் படத்தில் காணலாம்).

மீனாட்சி அம்மன் கோவிலின் நந்தி மண்டபத்தில் காணப்படும் 27 சிலைகளை இங்கும் செதுக்கி உள்ளனர்.

இங்கிருக்கும் சிலைகளின் பட்டியல்

இங்கிருக்கும் சிலைகளின் பட்டியல்

அங்குள்ள கடைகள்...

அங்குள்ள கடைகள்…

திருவிழா, சடங்கு, கிராம தேவதைகளின் பூஜைக்கு வேண்டிய பொருட்கள் அனைத்தும் இங்கே வாங்கிக் கொள்ள முடியும்.

திருவிழா, சடங்கு, கிராம தேவதைகளின் பூஜைக்கு வேண்டிய பொருட்கள் அனைத்தும் இங்கே வாங்கிக் கொள்ள முடியும்.

மன்னர் காலத்திற்கு பிறகு ஆங்கிலேயர் காலத்தில் இந்த மண்டபம் ஓர் நூலகமாக செயல்பட்டு வந்திருக்கிறது. இந்தியா சுதந்திரமடைந்த பின்னரே இந்த மண்டபத்தில் கடைகள் முளைக்கத் தொடங்கியுள்ளது. இப்பொழுதுள்ள கடைகளின் வயது கிட்டத்தட்ட 100 ஆண்டுகள்.

சித்திரைத் திருவிழா தொடங்க இருப்பதினால், திருவிழாவின் பொழுது கள்ளழகரின் பக்தர்கள் உடுத்தும் உடைகளைத் தைக்கும் பணி சூடு பிடிக்கத் தொடங்கி உள்ளது.

பக்தர்கள்  அணியும் துணிகளை தைக்கும் தையல்காரர்.

பக்தர்கள் அணியும் துணிகளை தைக்கும் தையல்காரர்.

கள்ளழகர் திருமாலிருஞ்சோலை (அழகர் கோவில்) – யிலிருந்து மீனாட்சி சொக்கநாதர் திருமணத்தைக் காண புறப்பட்டு மதுரைக்கு வருவார். வரும் வழியில் அவருடைய பக்தர்கள் இம்மாதிரியான உடைகளை உடுத்தி, சித்திரை மாத சூட்டினை தணிப்பதற்காக அழகரின் மேல் தண்ணீரை பீய்ச்சி அடிப்பர். ஆண்டு முழுவதும் இந்த துணிகள் விற்பனையானாலும், சித்திரை மாதத்திலேயே அதிகம் விற்பனை ஆகுமென இந்தக் கடையை நடத்தும் கார்த்திகேயன் கூறினார். முன்பெல்லாம் திருவிழா முடிந்ததும் வைகை நதிக் கரையினிலேயே தாம் பயன்படுத்திய துணிகளை தூக்கி எறிந்து விடுவார்களாம். ஆனால் இப்பொழுதெல்லாம் reuse செய்ய துவங்கி விட்டார்கள். நல்ல விஷயம் தான்.

கருங்கச்சை மற்றும் குல்லா வியாபாரம் செய்யும் கார்த்திகேயன் தன் தயாரிப்புகளுடன்….

கார்த்திகேயனின் கடை...

கார்த்திகேயனின் கடை…


மதுரை திருவிழா மட்டுமல்லாது திருநெல்வேலியின் சுடலைமாடசாமி திருவிழாவிற்கும் இங்கிருந்தே துணிகள் வாங்கி செல்கின்றனர் பக்தர்கள்.

சுடலைமாடசாமி பக்தர்கள் அணியும் குல்லா...

சுடலைமாடசாமி பக்தர்கள் அணியும் குல்லா…


வருங்காலத்தில் புதுமண்டபத்தை ஓர் அருங்காட்சியகமாக மாற்றும் திட்டத்தில் அரசாங்கம் இருப்பதாக இங்குள்ளவர்கள் தெரிவித்தனர். அப்படி மாற்றினால் அரசாங்கத்திற்கு நல்ல வருமானமும், சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கும், ஆனால் இங்குள்ள கடைகளும், கடைகளை நடத்துபவர்களின் வாழ்க்கையும் என்னவாகும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

பட்டாபிராமர் கோவில் – ஹம்பி

இந்த வருட கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு ஹம்பி செல்லலாம் என்று 2, 3 மாதங்களுக்கு முன்பே திட்டமிட்டு அதை ஒரு வழியாக செயல்படுத்தியும் விட்டோம். ஏற்கனவே 2005-ம் வருடம் ஒரு முறை ஹம்பி சென்று வந்துவிட்ட காரணத்தினால், அப்பொழுது என்னென்னவெல்லாம் விட்டு போய் இருந்ததோ அங்கெல்லாம் சென்று விட முடிவெடுத்தோம். அதன் படி மூன்றாம் நாள் நாங்கள் சென்றது கமலாபுரம் என்னும் ஊரில் இருக்கும் பட்டாபிராமர் கோவில். அதென்ன முதல் இரண்டு நாட்களுக்கு சென்று வந்த இடங்களை எல்லாம் விட்டுவிட்டு மூன்றாம் நாள் சென்ற கோவில் மட்டும் என நீங்கள் கேட்பது என் காதில் விழுகிறது. ஏனோ இந்த கோவில் எனக்கு அவ்வளவு பிடித்து போனது. பிடித்ததிற்கான காரணத்தை சொல்ல முடியவில்லை. ஏதோ ஓர் ஈர்ப்பு.

கோவிலின் முகப்பில் இருக்கும் மண்டபம்....

கோவிலின் முகப்பில் இருக்கும் மண்டபம்….

கோவிலின் உள்தோற்றம்....

கோவிலின் உள்தோற்றம்….

இந்தக் கோவில் 1540-ம் வருடம் அச்சுதராய மன்னரின் ஆட்சிக்காலத்தில் திம்மராயர் என்பவரால் கட்டப்பட்டுள்ளது. இங்குள்ள கோபுரம் பிற்கால விஜயநகர கட்டிடக்கலைக்கு நல்ல ஒரு உதாரணம். இது சோழ கட்டிடக்கலை முறையில் கட்டப்பட்டுள்ளது. மேலும் இது கமலாபுரம் தொல்பொருள் அருங்காட்சியகத்திற்கு அருகில் அமைந்துள்ளது. ஆனால் விருபாக்ஷா மற்றும் விட்டலா கோவில்களுக்கு வரும் சுற்றுலா பயணிகள் ஏனோ இந்த கோவிலுக்கு வருவதில்லை. அதனால் நாங்கள் அங்கு சென்றிருந்த போது யாருமே இருக்கவில்லை. அதுவே ஒரு வெறுமையை கொடுத்தது. 2005-ல் நாங்கள் செய்த பெரிய தவறு, இந்த கோவிலுக்கு செல்லாதது தான்.

அம்மன் சன்னதிக்கு வழிகாட்டும் கோவில் சுவர்கள்...

அம்மன் சன்னதிக்கு வழிகாட்டும் கோவில் சுவர்கள்…

விட்டலா கோவில் அளவுக்கு பெரியதாய் இருக்கிறது இந்த பட்டாபிராமர் கோவிலும். அந்த கோவில் அளவுக்கு வேலைப்பாடுகள் இல்லை தான், இருந்தாலும் அழகில் சற்றும் குறைந்து விடவில்லை. இங்கிருக்கும் மண்டபத்தின் முதல் வரிசை தூண்களில் அழகான இரண்டு யாழிகள் பிரமாண்டத்தை கூட்டுகின்றன. அங்கிருக்கும் தூண்களின் அடிப்பாகத்தை சிங்கங்கள் தாங்கிப்பிடித்திருப்பதிலிருந்து, இது சோழர்களின் கட்டிடக்கலை பாணி என்று தெரிந்து கொள்ள முடிகிறது(இதை என் தோழி லக்ஷ்மி-யிடமிருந்து சுட்டது).

பிரதான மண்டபத்தின் அடிப்பாகத்தில் சிங்கங்களின் சிலைகள்....

பிரதான மண்டபத்தின் அடிப்பாகத்தில் சிங்கங்களின் சிலைகள்….

மண்டபத்தின் முகப்பில் இருக்கும் யாழி சிலைகள்....

மண்டபத்தின் முகப்பில் இருக்கும் யாழி சிலைகள்….

கோவில் முழுக்க சுற்றிவிட்டு நடுவில் இருக்கும் கற்பக்கிரகத்திற்கு சென்றோம். அங்கு பட்டாபிராமர் இருக்க வேண்டிய இடம் காலியாக இருந்தது. பிற்காலத்தில் வேறு பல மன்னர்களின் ஆக்கிரமிப்பின் பொழுது சூறையாடப்பட்டிருக்கலாம். ஏனோ அதைப்பார்க்கையில் பறவை இல்லாத பறவைக்கூட்டைப் பார்த்ததைப் போன்றதொரு வருத்தம்.

IMG_1335copy

பிரதான மண்டபத்தின் உள்தோற்றம்....

பிரதான மண்டபத்தின் உள்தோற்றம்….

பட்டாபிராமர் சன்னதிக்கு முன் இருக்கும் பிரதான மண்டபம்....

பட்டாபிராமர் சன்னதிக்கு முன் இருக்கும் பிரதான மண்டபம்….


பிறகு இங்கிருக்கும் கோபுரமும் அதே சோழர் பாணியில் காட்சியளிக்கிறது. கோபுரத்தின் அடிப்பாகம் கற்களினாலும், மேல் பாகம் செங்கல் மற்றும் சுண்ணாம்புக் கலவையினால் கட்டி இருக்கிறார்கள். கோபுரத்தின் மேல்பாகம் காலத்தினால் சற்றே களையிழந்து போயிருந்தது.

கோபுரத்தின் மேல் வளர்ந்திருக்கும் செடிகள்....

கோபுரத்தின் மேல் வளர்ந்திருக்கும் செடிகள்….

அதனையும் கற்களினாலேயே கட்டி இருந்திருந்தால் திம்மராயர் கட்டும் பொழுது இருந்திருந்த அதே அழகு இன்று வரை நீடித்திருக்குமே என்ற ஆதங்கமே மிஞ்சியது.

செம்பருத்தி

இந்த பதிவினை அலங்கரிக்கப் போவது, என் வீட்டு தோட்டத்தில் வளர்ந்த செம்பருத்தி பூக்கள். இன்றைக்கு புதிதாக ஒரு படம் செம்பருத்தியை வைத்து எடுத்தேன். அப்புறம் தான் என்னுடைய படத்தொகுப்புகளை கவனித்தேன். வீட்டில் வளர்ந்த செம்பருத்தியை வைத்து நிறைய படங்கள் எடுத்துவிட்டேன் என்பதனை. பார்க்கவே மிகவும் அழகாகவும், சந்தோஷமாகவும் இருந்தது, சிகப்பு செம்பருத்திகளை பார்க்கும் பொழுது. அதை அப்படியே ஒரு பதிவாக வெளியிடுகிறேன்.

நான் முதன்முதலில் செம்பருத்தியை வைத்து எடுத்த படம்...

நான் முதன்முதலில் செம்பருத்தியை வைத்து எடுத்த படம்…

என் வீட்டு மல்லிகைகள், செம்பருத்தியோடு சேர்ந்து எடுத்துக்கொண்ட படம்...

என் வீட்டு மல்லிகைகள், செம்பருத்தியோடு சேர்ந்து எடுத்துக்கொண்ட படம்…

இந்த செம்பருத்தி செடி என் வீட்டுக்கு வந்ததே ஒரு சுவாரசியமான விஷயம். என் இரண்டாவது மகனுக்கு எப்பொழுதும் மதிய சாப்பாடு வெளியில் சென்று தான் ஊட்ட வேண்டும். அன்றும் அப்படியே சாப்பாடு கொடுத்துக் கொண்டிருந்த பொழுது வீதியில் வண்டியில் வைத்து ஒருவர் செடிகளை விற்றுக்கொண்டு வந்து கொண்டிருந்தார். என் மகன் அவரை பார்த்தவுடன் செடிகள் வாங்கலாம் என்று என்னிடம் அடம்பிடித்து, அவரை நிற்கச் செய்து விட்டான். முதலில் அவன் கேட்டது இந்த செம்பருத்தி செடியை தான். எனக்கு என்ன வருத்தம் என்றால், இதற்கு முன்பு நான் வாங்கிய செம்பருத்தி செடிகள் பூச்சி வந்து பட்டுப் போய்விட்டிருந்தன. “இந்த செடி தாங்குமா?” என்ற சந்தேகம். என் மகன் ஒரே மனதாக கண்டிப்பாக வேண்டும் என்று வாங்க வைத்தது இந்த செடி.

சூரிய ஒளியில் மின்னும் செம்பருத்தி....

சூரிய ஒளியில் மின்னும் செம்பருத்தி….

என் கணவர் விருப்பத்தின் பேரில் எடுத்த படம்...

என் கணவர் விருப்பத்தின் பேரில் எடுத்த படம்…

செம்பருத்தி Macro....

செம்பருத்தி Macro….

இன்றைக்கு புதிதாக எடுத்த படம்....

இன்றைக்கு புதிதாக எடுத்த படம்….

வாங்கும் பொழுது என் இடுப்பு வரை இருந்த இந்த செடி, இன்று 2 ஆள் உயரத்திற்கு வளர்ந்து நிற்கிறது… இந்த அழகான படங்கள் என் மகன் அன்று அடம் பிடித்து எடுத்த முடிவினாலேயே சாத்தியமாயிற்று…

Butterfly Park at Bannerghatta National Park.

இரண்டு வாரமாக வண்ணத்துப்பூச்சி பார்க் சென்று வர வேண்டுமென்று நினைத்து போன வாரம் பாலாஜி-யுடன் சென்று வண்ணத்துப்பூச்சிகளை புகைப்படம் எடுக்க முடியாமல் போய் இந்த வாரம் எப்படியும் எடுத்து விட வேண்டுமென்று முடிவெடுத்து நானும் என் சித்தப்பா மகன் யோகேஷ்-ம் சென்றோம்.

காலை நேரத்தோடு சென்றால் தான் கூட்டம் கம்மியாக இருக்குமென்று 9 மணிக்கெல்லாம் அங்கு சென்றுவிட்டோம். முதல் போணி எங்களுடையது தான். பெரியவர்களுக்கு 25 ரூபாயும், கேமரா-க்கு 25 ரூபாயும் கொடுத்து உள்ளே சென்றோம்.

அங்கே எடுத்த சில புகைப்படங்களையும் இத்துடன் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

உள்ளே மிகவும் அமைதியாக ரம்மியமான சூழலை உருவாக்கி வைத்திருந்தார்கள். செயற்கையான அருவி, மற்றும் பூக்கள், அதில் வண்ணத்துப்பூச்சிகள் வந்து தேன் குடிப்பதற்காக தேனில் நனைத்த பஞ்சை வைத்திருந்தார்கள். இந்த புகைப்படத்தில் இருப்பது போல.

செயற்கை பூவில் தேனில் நனைத்த பஞ்சில் வந்து உட்காரும் பட்டாம் பூச்சி.

செயற்கை அருவி

மேலும் அங்கிருந்த வாட்ச்மேனிடம் பேசினதில் அவர் நிறைய விஷயங்களை பகிர்ந்து கொண்டார். வண்ணத்துப்பூச்சிகள் இடும் 50 முட்டைகளில் 2 அல்லது 3 முட்டை மட்டுமே வெற்றி பெற்று பூச்சிகளாக மாறும் வாய்ப்பு உள்ளதாகவும், மற்றவை அனைத்தும் வீணாகி விடும் என்றும் கூறினார். அங்கு ஆய்வுக்கூடம் ஒன்றும் செயல்பட்டு வருகிறது. அங்கு தான் பூச்சிகளை முட்டையிட வைத்து, அதை பட்டாம்பூச்சி ஆகும் வரை பராமரித்து பின்பு அதை பார்க்-இல் கொண்டு வந்து விடுகிறார்கள். அப்படி கொண்டு வந்து விட்ட பட்டாம்பூச்சிகள் பறப்பதற்கு கொஞ்ச நேரம் எடுத்துக்கொள்கின்றன. அப்படி பறப்பதற்கு முன் அதனுடன் நாங்கள் எடுத்துக்கொண்ட படங்கள் இதோ.

Common Mormon என் தோளில்

அங்கு நாங்கள் பார்த்து ரசித்த 2 , 3 வகையான பட்டாம்பூச்சிகளின் புகைப்படங்கள்,

Red Pierrot

Crimson Rose Butterflies.


எல்லாவற்றையும் ரசித்து விட்டு அங்கிருந்து செல்ல மனமில்லாமல் ஒரு வழியாக 2 மணி நேரத்திற்கு பிறகு புறப்பட்டோம்.