உலக புத்தக தினம் 

உலக புத்தக தினத்தன்று, எனக்கு பிடித்த சில புத்தகங்களைப் பற்றி பேசலாம் என நினைத்து இந்த கட்டுரையை எழுதுகிறேன். 

பாலாஜி தன்னுடைய “அறிவியலும் மதமும்” என்ற புத்தகத்தை எழுதுவதற்காக பல புத்தகங்களை படித்துக் கொண்டிருந்தார். அதில் என் கவனத்தை மிகவும் ஈர்த்தது 2 புத்தகங்கள். அவை அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் அவர்கள் எழுதிய  “இந்து மதம் எங்கே போகிறது?” மற்றும் “சடங்குகளின் கதை” ஆகிய இரு புத்தகங்களும். இதில் இந்து மதத்தில் ஒவ்வொரு சடங்குகளை நடத்தும் பொழுதும், புரோகிதர் சமஸ்கிருதத்தில் மந்திரம் கூறுவார் அல்லவா, அதனின் தமிழ் விளக்கங்களை “அப்படியே” விளக்கி இருப்பார். அந்த புத்தகத்தை படித்த பின்பு, “அப்பா … நல்ல வேலை நாம் புரோகிதர் இல்லாமல் திருமணம் செய்து கொண்டோம்” என்று நிம்மதி பெருமூச்சு வந்தது. இதை படிக்கிற அனைவரின் மனதிலும், “நாம் ஏன் இப்படிப்பட்ட சடங்குகளை செய்ய வேண்டும்”, என்ற கேள்வி கண்டிப்பாக எழும். 

மற்றுமொரு புத்தகத்தில், நம் கடவுள்களின் கதைகளில் என்னென்ன தில்லாலங்கடி வேலைகள் எல்லாம் நடந்திருக்கின்றன என்றும் விளக்கமாக கூறி இருப்பார். முக்கியமாக ஊர்த்துவ தாண்டவர் பற்றி அவர் கூறி இருந்தது மறக்கவே இயலாத ஒன்று. உடனே சிலர் இதெல்லாம் பொய் என்று வேட்டியை மடித்துக் கொண்டு திட்டுவதற்கு களம் இறங்கி விடுவார்கள் எனத் தெரியும்.இதை எல்லாம் நான் சொல்லவில்லை, இதைக் கூறியவர் யாரென்று, (அதாவது அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் அவர்கள்) சற்று கூகுள் செய்து பார்த்தால் புரியும். விருப்பம் இருக்கிறவர்கள் புத்தகத்தை வாங்கி படித்தும் பார்க்கலாம். 

அடுத்த புத்தகம் சுதீஷ் மின்னி என்பவர் எழுதிய “நரக மாளிகை” எனும் புத்தகம். அவர் சிறுவயதில் இருந்தே ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் இருந்து, அதில் நடக்கும் அக்கிரமங்களை பார்த்து பிடிக்காமல் போய் வெளியே வந்தவர். அதை படிக்கும் பொழுது, அவர்கள் எப்படி எல்லாம் திட்டம் தீட்டி மக்களை தங்கள் பக்கம் இழுக்கின்றனர் என்பதும், பொய்யான செய்திகளை எப்படி எல்லாம் பரப்புகின்றனர் என்பதும் புரியும். மேலும் மக்கள் மனதில் லேசாக இருக்கும் மதம் சார்ந்த எண்ணங்களை எப்படி தங்களுக்கு சாதகமாக உபயோகப் படுத்துகின்றனர் என்ற தெளிவும் கிடைக்கும். 

அடுத்தது “பெண் ஏன் அடிமையானாள்?” என்ற பெரியாரின் புத்தகம். இந்த புத்தகம் படிக்கும் போது தான், பெண் உரிமைக்காக அவர் எவ்வளவு உழைத்திருக்கிறார் எனப் புரிந்தது. அவரைப் பற்றி சரியாக படிக்காத சிலர், முக்கியமாக பெண்களில் சிலர் அவரைப் பற்றி  அவமரியாதையான பதிவுகளை பதிவிடுவதை கண்டால், வேதனை தான் மிஞ்சுகின்றது. தாங்கள் இன்று முன்னேறி இருப்பதற்கு மிக முக்கியமான காரணம் அவர் அன்று இட்ட விதை தான் என புரிந்து கொள்ளும் காலம் சீக்கிரமே வரும் என நம்புவோமாக. 

இங்கு சமீபத்தில் நான் படித்த சில புத்தகங்களை பற்றி கூறி இருக்கிறேன். இன்னும் நிறைய  புத்தகங்கள் லிஸ்டில் இருக்கின்றன. அடுத்தது “Invisible Women” என்ற புத்தகத்தை படித்துக் கொண்டிருக்கிறேன். Simone de beauvoir வுடைய “Second Sex” என்ற புத்தகத்தை பல முறை எடுத்தும் படிக்க முடியாமல் தோற்றிருக்கிறேன். என்றாவது ஒரு நாள் கண்டிப்பாக படித்து முடித்து விடவேண்டும்.