இன்டெர்ஸ்டெல்லர் (Interstellar)

interstellar-banner
2000 ம் ஆண்டு பாலாஜி என்னை பெண் பார்க்க வரும் போது கூறி இருந்தார், “எனக்கு அறிவியலில் கொஞ்சம் ஆர்வம்” என. அப்பொழுது பின் விளைவுகளைப் பற்றி யோசிக்கவில்லை நான். இப்பொழுது தான் தெரிகிறது அதன் விளைவுகள். “Gravity”, “Interstellar” என வரிசையாக அறிவியல் சம்பந்தப்பட்ட படங்களையும் பார்க்க நேர்கிறது.

Gravity பற்றி ஏற்கனவே நான் எழுதி இருந்தேன். இரண்டு படங்களும் விண்வெளியைப் பற்றி எடுக்கப்பட்டவை என்பதைத் தவிர வேறு ஒன்றும் ஒற்றுமை இல்லை. “Interstellar” ரொம்ப scientific ஆக இருப்பதினால், எனக்கு புரியாத சிலவற்றை பாலாஜியின் உதவியுடனேயே எழுதுகிறேன்(Disclaimer).

“உலக வெப்பமயமாதல்”ன் காரணத்தால் உலகின் பல இடங்களில் உள்ள விவசாய நிலங்களில் விதைக்கும் அத்தனை பயிர்களும் சரியாக விளையாமல் அதனை விதைத்த விவசாயிகளை தோல்வியையே சந்திக்க வைக்கின்றன. கடைசியாக அவர்களுக்கு சோளம் மட்டுமே கைகொடுக்கின்றன. இதில் அடிக்கடி சுழற்றி அடிக்கும் புழுதிப் புயல் வேறு. இப்படி சோளம் பயிரிடும் பல்வேறு விவசாயிகளில் ஒருவர் தான் நம் ஹீரோ, இரண்டு குழந்தைகளின் தகப்பன் மற்றும் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சிக் கூடமான “NASA”ன் முன்னாள் விண்வெளி ஊர்தியின் pilot.

“NASA ” விஞ்ஞானி ஒருவர் “Quantum Gravity” ஐ பற்றி ஆராய்ச்சி மேற்கொண்டிருக்கும் பொழுது, புவி வெப்பத்தினால், பூமியில் இனி வாழ முடியாத நிலை ஏற்பட்ட பின்பு மக்களை வேறு எந்த கிரகத்தில் வாழ வைக்கலாம் என கண்டுபிடித்து வருமாறு சில விஞ்ஞானிகளை விண்வெளிக்கு அனுப்புகிறார். அவர்களிடமிருந்து, விண்வெளியில் வேறு ஒரு நட்சத்திர மண்டலத்தில் உள்ள ஏதோ ஓர் கிரகத்தில், வாழ்வதற்கான சூழல் இருப்பதாக தகவல் வருவதினால் அதைப் பற்றி ஆராய்ச்சிகள் மேற்கொள்ள மேலும் சில விஞ்ஞானிகளை நம் ஹீரோ pilot உடன் சேர்த்து மறுபடியும் அங்கு அனுப்புகிறார். முதலில் சென்ற விஞ்ஞானிகளை ஹீரோ வின் குழு கண்டுபிடித்ததா?, வேறு ஒரு நட்சத்திர மண்டலத்திற்கு(Galaxy) எப்படி செல்ல முடியும்?, வேறு கிரகங்களில் மக்கள் வாழ முடியுமா?. விண்வெளிக்கு சென்ற ஹீரோ திரும்பி வந்து தன் குழந்தைகளை சந்தித்தாரா? என்பதே மீதிக் கதை.

கதையை மிகவும் சுவாரசியமாகவே நகர்த்துகிறார் டைரக்டர் “நோலன்”. ஹீரோ விண்வெளிப்பயணம் மேற்கொள்ள வேண்டும் என்று தெரிய வரும் பொழுது, அவரை பிரிய மனமில்லாத அவருடைய மகளுக்கும் அவருக்கும் இடையேயான வாக்குவாதத்தினை மிக அழகாக படமாக்கி இருக்கிறார். warm Hole, Black Hole, Gravity, 3 Dimensions, 5 Dimensions என பல நுணுக்கங்களை அழகாக கையாண்டிருகிறார்.

ஏற்கனவே பூமியை மாசுபடுத்தியது போதாதென, விண்வெளியில் வேறு கிரகத்திற்கும் சென்று அதையும் மாசுபடுத்த வேண்டுமா?.. மேலும் எல்லாவற்றையும் தொழில்நுட்பம் கொண்டே சரி செய்து விட முடியும் என்பது போல் காண்பிப்பது அபத்தம். எப்பொழுதும் அமெரிக்கா தான் உலக மக்களை காப்பாற்றுவதைப் போல் சித்தரித்திருப்பது “ஹாலிவுட்”ன் எழுதப்படாத விதி. இந்த படமும் அதற்கு விதிவிலக்கல்ல.

இப்பதிவு அதீதத்திலும்.

கடலைச் சந்தை

பெங்களூர்-க்கு வந்து கிட்டத்தட்ட 13 வருடங்கள் ஆகி விட்டது. ஆனால் கடந்த 3,4 வருடங்களாகத்தான் பெங்களூரையும் அதைச் சுற்றி இருக்கும் சிறு சிறு ஊர்களையும் சுற்றிப் பார்க்க ஆரம்பித்திருக்கிறேன். எல்லாம் Photography – ன் உபயம். ஊர்களை மட்டுமல்லாது பெங்களூரில் நடந்து வரும் சில பாரம்பரிய விழாக்களையும், திருவிழாக்களையும் கூட புகைப்படக்கலை தான் என்னை கவனிக்க வைக்கிறது. அவ்வாறான பாரம்பரியமிக்க விழாக்களுள் ஒன்று தான் “கடலே காய் பரிஷே ” எனும் “கடலைச் சந்தை”.

கார்த்திகை மாதத்தின் பௌர்ணமி நாளில், பெங்களூரைச் சுற்றி உள்ள கிராமங்களின் கடலை விவசாயிகள், தங்களின் முதல் சாகுபடி கடலையை, “பசவா” எனக் கூறப்படும் சிவனின் “நந்தி” -க்கு காணிக்கையாக்கி விட்டு மீதமிருக்கும் கடலையை அங்குள்ள கோவில் வீதியில் வைத்து விற்கின்றனர்.
மேலும் விவரங்களுக்கு Wiki-யை படித்து தெரிந்து கொள்ளலாம்.


இந்த வருடம் தான் இச்சந்தைக்கு சென்றிருக்கிறேன். சில படங்களையும் எடுத்தேன். முதலில் என்னுடைய 2 wheeler -ல் செல்லலாம் என தான் நினைத்தேன். கூட்டம் அதிகமாக இருக்கும் என கேள்வி பட்டதினால், ஆட்டோ விலேயே சென்றேன். ஆட்டோவை 2 தெருவிற்கு முன்னாலேயே நிறுத்தி இருங்கிக் கொள்ள வேண்டி இருந்தது. அவ்வளவு கூட்டம். கூட்டத்தைப் பார்த்ததும் கொஞ்சம் பயமாக இருந்தது. இதில் எப்படி உள்ளே சென்று எப்படி வெளியில் வருவதென்று. ஒரு வழியாக உள்ளே நுழைந்து விட்டேன். அதில் நான் நகர வேண்டிய அவசியமே இல்லாமல், அங்கு வந்த மக்களே என்னை நகர்த்தி கூட்டி கொண்டு சென்றனர்.
இங்கு கடலை மட்டுமல்லாது, கலர் கலர் ராட்டினங்கள், கம்ப்யூட்டரில் ஜாதகம் சொல்பவர்கள், களிமண் சிற்பங்கள், கலர் மிட்டாய் விற்பவர்கள் என ஏராளமானோர் கூடி தெருவையே திருவிழாக் கோலம் பூணச் செய்திருந்தனர்.

IMG_7090cp

மண் பொம்மைகள்

மண் பொம்மைகள்

பஞ்சு மிட்டாய்க்காரர்

பஞ்சு மிட்டாய்க்காரர்

வரிசையாக அணிவகுத்து நிற்கும் மண் யானைகள்.

வரிசையாக அணிவகுத்து நிற்கும் மண் யானைகள்.


வீட்டில் இருந்து கிளம்பும் சமயமே பாலிதீன் கவர்கள் வாங்க கூடாது என்றெண்ணி பெரிய துணிப் பையை கொண்டு சென்றிருந்தேன். “எதற்கு பை” என்கிறீர்களா?.. போட்டோ எடுத்துக் கொண்டே, கடலையும் வாங்கி வரலாம் என்று தான். ஆனால் அங்கு பாலிதீன்-ன் தாக்கம் அதிகமாகத்தான் இருந்தது. 2, 3 பேரிடம் கடலையை வாங்கினேன். அனைவரிடமும் “கவர் வேண்டாம், கவர் வேண்டாம் ” என கண்டிப்பாக சொல்ல வேண்டி இருந்தது.

பாலிதீன் பைகளின் ஆக்கிரமிப்பு

பாலிதீன் பைகளின் ஆக்கிரமிப்பு

நம் மக்களில் பலர் இதை உணர மறுக்கின்றனர். இத்தனைக்கும் BMS கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் அங்கு வரும் மக்களிடம் பாலிதீன் பைகளை மறுத்து துணி பைகளை உபயோகியுங்கள் என சலிக்காமல் சொல்லிக் கொண்டு தான் இருந்தனர்.

ஜவ்வு மிட்டாய்க்காரர் தன் பொம்மையுடன்...

ஜவ்வு மிட்டாய்க்காரர் தன் பொம்மையுடன்…

ஜவ்வு மிட்டாய்க்காரர் தன் பொம்மையுடன்...

ஜவ்வு மிட்டாய்க்காரர் தன் பொம்மையுடன்…

மதுரையில் மட்டுமே நான் பார்த்த ஜவ்வு மிட்டாய் இங்கும் விற்பதைப் பார்த்தது எனக்கு மிகவும் ஆச்சர்யமளித்தது. இங்கு வந்த 13 வருடத்தில் இம்மாதியான மிட்டாய்க்காரரை நான் பார்த்ததே இல்லை. இம்மிட்டாய்களை, ரயில், பஸ், பொம்மை என பல வடிவங்களில் வளைத்து கையில் வாட்ச் மாதிரி கட்டி விடுவார். கடைசியில் கொஞ்சம் கன்னத்திலும் ஒட்டி விடுவார். இதை பார்த்த பின் மதுரை-யின் பிறந்த வீட்டு ஞாபகம் என்னை முழுமையாக ஆக்கிரமித்து விட்டிருந்தது.
எல்லோரையும் போட்டோ எடுத்துக் கொண்டு, கொஞ்சம் கடலையும் வாங்கி பையில்(துணி) போட்டுக் கொண்டு ஆட்டோ ஏறி இரவுக்கு என்ன சமையல் செய்வது என யோசித்துக் கொண்டே வீடு வந்து சேர்ந்தேன்.