பெயரிடப்படாத சிறுகதை

சிறுகதையில்(ஒரு பக்க கதை என்றே சொல்லலாம்) என் முதல் முயற்சி. பல நாட்களாக பதிவிட நினைத்து இன்று தான் வேளை வந்திருக்கிறது.


சூரியன் மறையும் சாயங்கால வேளையில், சாலையெங்கும் ஒரே வண்ணத்திலான பூக்கள் பூக்க ஆரம்பித்ததைப் போல் பள்ளியிலிருந்து சீருடை அணிந்த குழந்தைகள் வெளி வரத் தொடங்கினர். அதில், அன்று புதிதாக பூத்த மலரைப் போல் மிகவும் பிரகாசமாகத் தென்பட்டாள் சரயு. மிகவும் மகிழ்ச்சியாக தன் தோழிகளுடன் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தாள். ஐந்தாம் வகுப்பில் படிக்கும் சரயு, சராசரியான மதிப்பெண்களை எடுப்பவள். தன் அம்மாவிடம் மார்க் கார்டில் கையெழுத்து வாங்கும் சமயமெல்லாம் தவறாது, ” எப்பொழுது தான் முதல் பத்து ரேங்க்-குள் வரப்போறே?” என வசை வாங்குபவள். எவ்வளவு திட்டு வாங்கினாலும், பெரியவர்களை எதிர்த்து ஒரு வார்த்தை கூட பேசாதவள். தன் அண்ணனை விட நிறம் சற்று குறைவாக இருப்பதினாலோ என்னவோ, அம்மாவின் அன்பும், அவளுக்கு சற்று குறைவாகவே கிடைத்தது.

அன்றைய அவளுடைய மகிழ்ச்சியில் காரணம் இல்லாமல் இல்லை. அப்பொழுது நடந்து முடிந்திருந்த தேர்வில், வகுப்பில் நன்றாகப் படிக்கும் மாணவிகளை விட மதிப்பெண்கள் அதிகமாக பெற்று மூன்றாவது ரேங்க் வாங்கி இருந்தாள். அம்மா அவளுக்கு தினமும் கொடுக்கும் காசையெல்லாம் ஒரு வாரமாக மிச்சப்படுத்தி, வீடு செல்லும் வழியில் ‘ஜிகர்தண்டா ‘ வாங்கி குடித்து, பசித்து கொண்டிருந்த வயிற்றை கொஞ்சம் சாந்தப்படுத்தினாள். மீண்டும் வீடு நோக்கி மெதுவாக நண்பர்களுடன் நடக்க ஆரம்பித்தாள். உடன் வந்த நண்பர்கள் ஒவ்வொருவராக அவரவர் வீடுகளை அடைந்தனர். கடைசி ஐந்து நிமிடங்கள் சரயு தனியாக நடக்க வேண்டி இருக்கும். அப்பொழுது அவள் மனதில், அன்றைக்கு வீட்டில் நடக்கவிருக்கும் நிகழ்வுகள் எல்லாம் காட்சிகளாக ஓடின. அவளின் ரேங்க் கார்டை பார்த்த அம்மா, மகிழ்ச்சியில் அவளை கட்டி அணைத்து முத்தம் கொடுத்து, அவளுக்கு பிடித்த தக்காளி சாதத்தை இரவு உணவுக்காக சமைப்பாள். பின் அப்பா வார இறுதியில் வீட்டிற்கு வரும் பொழுது, அம்மா அவளைப் பற்றி பெருமையாக பேசுவாள். என்றெல்லாம் மனதில் நினைத்துக் கொண்டே வீடு வந்து சேர்ந்தாள்.
வீடு வந்து சேர்ந்தவளுக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது. அவள் அம்மா, உறவினர் ஒருவர் வீட்டு நிச்சயதார்த்தத்திற்கு தன் அண்ணனை அழைத்துக் கொண்டு சென்று விட்டிருந்தாள். வீட்டில் பாட்டி மட்டுமே. அவள், தட்டில் பிசைந்து வைத்துக் கொடுத்த சாதத்தை சாப்பிட்டுவிட்டு வீட்டுப்பாடத்தை முடிக்க புத்தகப்பையை தன் பக்கமாக இழுத்து வைத்துக் கொண்டாள். மறுபடியும் ஒருமுறை மார்க்கார்டை ஆசையாக பார்த்துக் கொண்டிருந்தாள். அம்மா வந்தவுடன் கண்டிப்பாக அவளிடம் காண்பித்துவிட வேண்டுமென்று நினைத்துக் கொண்டாள். இரவு 8 மணி ஆகியும் அம்மா வீட்டிற்கு வரவில்லையே என்ற சோகம் மெலிதாக அவள் மனதில் ஊடுருவ ஆரம்பித்தது. அந்த எண்ணத்திலிருந்து மீளாமல், அடுத்த நாளைக்கான வகுப்பு அட்டவணையின் படி புத்தகங்களை பைக்குள் அடுக்கலானாள். எல்லா வேலைகளையும் தவறாமல் முடித்து விட்டு மீண்டும் ஒரு முறை கடிகாரத்தை பார்த்தாள். மணி 8:45. தூக்கம் மெது மெதுவாக அவள் கண்களில் எட்டி பார்க்க ஆரம்பித்திருந்தது. தனக்கு மிகவும் பிடித்த பொம்மையை படுக்கையில் தன்னருகில் வைத்துக் கொண்டு அம்மாவிற்காக காத்திருக்க ஆரம்பித்தாள். எப்பொழுது தூக்கம் வந்தது எனத் தெரியவில்லை சரயுவிற்கு. கண்முழித்து பார்க்கும் பொழுது காலை 6 மணி. அவசரமாக எழுந்தவளுக்கு பக்கத்தில் படுத்திருந்த அம்மாவையும், அண்ணாவையும் கண்டவுடன் ஒரே சந்தோஷம். வேகமாக புத்தகப் பையிலிருந்த மார்க்கார்டை எடுத்துக் கொண்டு அம்மாவை எழுப்பினாள். “அம்மா எழுந்திருங்க. பாருங்கம்மா, கிளாசில் நான் மூன்றாவது ரேங்க் வாங்கியிருக்கிறேன். எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்ததும்மா. வந்தவுடன் உன்னிடம் தான் காண்பிக்கணும்னு நெனச்சேன். நீ வெளியில போயிருந்ததினால நேத்தே காண்பிக்க முடியலை” என தன் மனதில் அடக்கி வைத்திருந்த சந்தோஷத்தை எல்லாம் கொட்ட ஆரம்பித்தாள். ஆனால் அவள் அம்மாவோ, இரவு சற்று தாமதமாக வந்ததினால் மிகவும் களைப்புடன் அயர்ந்து தூங்கி கொண்டிருந்தாள். சரயு பேசிக்கொண்டே போனதில் சற்று கோபமடைந்த அவள் அம்மா, ” சீ தள்ளிப் போ பிசாசே.. கொஞ்ச நேரம் தூங்க விட்றியா, சும்மா தொண தொணன்னு ஏதோ பேசிகிட்டு”, என அவளை தள்ளி விட்டு திரும்பி படுத்துக் கொண்டாள். சரயு மறுபடியும் அம்மாவை எழுப்ப முயன்று தோற்றுப் போனாள். பின்பு, பள்ளி செல்வதற்காக குளித்து முடித்து ரெடியாகி கிளம்பும் சமயம், அம்மாவிடம் கார்டை நீட்டினாள். எப்பொழுதும் விழும் திட்டுக்கள் இல்லாமல், கார்டில் கையெழுத்திட்டாள் அம்மா. அன்றைய தினம் அவளுக்கு ஏமாற்றம் மிகுந்த தினமாகவே கழிந்தது. சரயுவால் இந்த ஏமாற்றத்தை அவள் மனதிலிருந்து அவ்வளவு எளிதாக அகற்றி விட முடியவில்லை.
இரண்டு குழந்தைகளுக்கு தாயாகிவிட்ட சரயுவின் மனதில் இன்னமும் அந்நிகழ்வு ஒட்டிக் கொண்டிருந்தது. இதே மாதிரியான நிகழ்வு தன் வாழ்வில் மற்றொரு முறை எட்டிப் பார்க்கும் என்று தன் கனவில் கூட நினைத்திருக்கவில்லை அவள். ஆம், அதே மாதிரியான ஒரு நிகழ்வு தான், ஆனால் இம்முறை, மார்க்கார்டை தூக்கி கொண்டு வந்து நின்றது தன குழந்தைகளுள் ஒருவரல்ல, தன்னிடம் டியூசன் படித்த சரளா. பத்தாவது படிக்கும் சமயம் டியூசன் வந்து சேர்ந்த சரளா, பள்ளியில் எந்த பாடத்திலும் “பாஸ் மார்க்” வாங்காமல், டீச்சர்களினால் ” நீ ஒன்னும் தேறமாட்டே, பத்தாவது பாஸ் பண்றதே கஷ்டம் தான்” என நம்பிக்கையில்லா வார்த்தைகளை எதிர்கொண்டவள். தன் அம்மா, வீதிகளை சுத்தம் செய்யும் துப்புரவு தொழிலை செய்து, தன்னைப் படிக்க வைக்க எவ்வளவு கஷ்டப்படுகிறாள் என்பதை நன்றாக உணர்ந்தவள். பத்தாவது பொதுத் தேர்வில், சரயுவின் உதவியினாலும் சரளாவின் உழைப்பினாலும், அவள் எல்லா பாடங்களிலும் தேர்ச்சி பெற்று மிகுந்த உற்சாகத்துடன் சரயு முன்பு வந்து நின்றிருந்தாள். சரயுவிடம், “அக்கா, மார்க் பார்த்துட்டு மொதோ உங்க கிட்ட தான் காண்பிக்கணும் னு இங்க வந்தேன். அம்மா கிட்ட கூட காண்பிக்கலைக்கா ” என்றவளை பார்க்கும் பொழுது சரயுவிற்கு தன் சிறு வயது நிகழ்வு ஞாபகத்திற்கு வராமல் இல்லை. தன்னிடம் பல குழந்தைகள் டியூசன் படித்தாலும், ஏனோ சரளாவின் வெற்றி சரயுவிற்கு, தானே பரீட்சையில் வெற்றி பெற்ற மாதிரியான சந்தோஷத்தையும் மன நிறைவையும் தந்தது. அந்த சந்தோஷத்தில் அப்படியே அவள் நெற்றியில் முத்தமிட்டு, அருகிலிருந்த கடைக்கு கூட்டிச் சென்று ஒரு பெரிய சாக்லெட்டை வாங்கிக் கொடுத்து “முதலில் அம்மாவிடம் கொண்டு போய் மார்க்கைக் காண்பி” என சரளாவை அவள் வீட்டிற்கு அனுப்பி வைத்தாள்.
தன் சிறு வயதில் நிகழ்ந்த அந்த நிகழ்வினால் எப்பொழுதும் பாரமாக உணரும் சரயுவின் மனம், இன்று சற்று லேசாகிப் போனதில் ஐயமில்லை.


படித்து விட்டு கருத்துக்களை பகிர்ந்தால் மகிழ்ச்சியடைவேன்.

 

மயான கொள்ளை – காவேரிப்பட்டிணம்

இரண்டாவது தடவையாக மயான கொள்ளை திருவிழாவிற்காக காவேரிப்பட்டிணம் சென்றிருந்தேன். ஏற்கனவே இந்த திருவிழாவைப் பற்றி எழுதி இருக்கிறேன். படிக்காதவர்கள் இங்கு சென்று படிக்கலாம். இம்முறை சில மாற்றங்கள் செய்திருந்தார்கள் காவேரிப்பட்டிணத்தில். முதல் முறை நாங்கள் சென்றிருந்த காரை கோவிலில் இருந்து வெகு தூரத்தில் தான் நிறுத்துவதற்கு இடம் கிடைத்திருந்தது. இம்முறை சற்றே அருகில் நிறுத்த முடிந்தது. மேலும் நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள், வாயில் சூலாயுதம் குதிக்க கொள்ளும் வழக்கம் இந்த திருவிழாவில் பிரசித்தி. சென்றமுறை மிக நீளமான அலகை அதிக மக்கள் குத்தி கொண்டிருந்ததை காண முடிந்தது. ஆனால் இம்முறை 5 அடிக்கு மேல் குத்திக் கொள்ளக் கூடாது என கோவில் நிர்வாகம் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தது.

சென்றமுறை மயானத்திற்கு செல்லாமல் ஊர் திரும்பி இருந்தோம். இம்முறை கண்டிப்பாக மயானத்திற்கு செல்ல வேண்டும் என நண்பர்கள் கூறியதிற்கிணங்க மயானத்திற்கும் சென்றுவிட்டே திரும்பினோம்.

அங்கு எடுத்த புகைப்படங்களில் சில….

இம்முறையும் காளியாக ஒப்பனை செய்து கொள்பவர்களின் முகங்களைத் தான் அதிகம் படம் எடுத்தேன்.

ஒப்பனை முடிந்த பின்னர்….

மயானத்தில் …