சிக்மகளூர்

தசரா விடுமுறைக்கு ஒவ்வொரு முறையும் மதுரையில் அம்மா வீட்டுக்கு சென்று வருவது தான் வழக்கம். இம்முறை என் தங்கை(சித்தி மகள்), தன் அலுவலக நண்பர்களுடன் சிக்மகளூர் சென்று வர திட்டமிட்டிருப்பதாகவும் நீயும் மதியும் வந்தால் நன்றாக இருக்கும் என ஆசைப்பட்டாள். அலுவலக நண்பர்களுடன் என்பதால் முதலில் சற்று தயங்கினேன். தங்கையோ, “அவர்கள் அனைவரும் நன்றாக பேசுவார்கள், நீ தயங்காமல் வா” என கூறியவுடன் நானும் மதியும் அவர்களுடன் செல்ல சம்மதித்தோம்.

3 நாட்கள் சென்று வருவது என திட்டமிட்டபடி முதல் நாள் காலை 6 மணிக்கு பெங்களூரில் இருந்து ரயிலில் புறப்பட்டோம். ரயில் “அர்சிகரே” ஜுங்க்ஷனை காலை 9 மணிக்கு சென்றடைந்தது. அங்கிருந்து பயணிக்க ஓர் “TT ” யும், சிக்மகளூரில் ஓர் “ஹோம் ஸ்டே ” யில் தங்குவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இரவு சிக்மகளூர் செல்வதற்கு முன் பேலூர், ஹளபேடு கோவில்களில் ஹொய்சளர்களின் அழகிய சிற்பங்களை ரசித்துவிட்டு, அப்படியே அங்கிருக்கும் “யகாச்சி” அணையையும் சுற்றிப்பார்த்தோம். அடுத்த நாள் “முல்லையங்கிரி” மலைக்கு சென்று வர திட்டமிட்டிருந்ததினால் முதல் நாளை இத்துடன் முடித்துக்கொண்டோம்.

பேலூர் மற்றும் ஹளபேடில் எடுத்த சில படங்கள்.

 

 

 

 

 

 

 

யகாச்சி அணை

யகாச்சி அணை

அடுத்த நாள் காலை 5 மணிக்கெல்லாம் புறப்பட்டு விட்டோம், முல்லையங்கிரி-ஐக் காண. விடுமுறை தினமாதலால் மலைப்பாதை முழுக்க கார்கள் எறும்புகளைப் போல் ஊர்ந்து கொண்டிருந்தது. பாதை மிகவும் குறுகலாக இருப்பதினால் நல்ல தேர்ந்த கார் ஓட்டிகளினால் மட்டுமே பாதுகாப்பாக ஓட்ட முடியும் என தெரிந்து கொண்டோம். மேலும் முல்லையங்கிரி மலையை அடைய 3 கி.மீ. முன்னதாகவே “TT ” யை போலீஸ் நிறுத்திவிட்டது. சிறிய அளவு கார்கள் மற்றும் பைக்-களை மட்டுமே அதற்கு மேல் அனுமதித்தனர். சிறிது நேரம் நின்று போலீஸிடம் “TT” ஐ அனுமதிக்குமாறு கேட்டு பார்த்தோம். அவர் கண்டிப்புடன் அனுமதிக்க முடியாது என சொல்லியவுடனே மெது மெதுவாக, பக்கவாட்டில் இருந்த மலைகளையும், சிறு சிறு பூக்களையும், பனித்துளிகளை அணிகலன்களாக பூட்டிக்கொண்டிருந்த புற்களையும், சிலந்தி வலைகளையும் ரசித்துக் கொண்டும், படமெடுத்துக் கொண்டும் மலையின் உச்சியை சென்றடைந்தோம்.

முல்லையங்கிரி மலைக்கு போகும் வழியில் எடுத்த சில படங்கள்

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

மலை உச்சியில் அமைந்திருந்த கோவிலில் “மூலப்ப ஸ்வாமி” ஐ தரிசித்து விட்டு, சற்று நேரம் அங்கு நம் காலடியில் மிதந்து கொண்டிருந்த மேகங்களின் அழகில் மெய்மறந்து அமர்ந்திருந்தோம். காலை உணவை உட்கொள்ளாததை வயிறு சற்று ஞாபகப்படுத்தவே, மெதுவாக அங்கிருந்து கீழே இறங்க ஆரம்பித்தோம்.

மலை உச்சியிலிருந்து எடுத்தவை

 

பல நாட்களாக இப்படி ஒரு படம் எடுக்க வேண்டுமென்ற ஆசை அன்று நிறைவேறியது….

முல்லையங்கிரி- ஐ பார்த்து விட்டு அங்கிருக்கும் சில அருவிகளையும் கண்டுவிட்டு செல்லலாம் என நினைத்திருந்தோம். ஆனால் போக்குவரத்து நெரிசல் காரணமாக அவற்றை காணமுடியாமல் ரூமிற்கு செல்ல நேர்ந்தது. சரி அடுத்த நாள் சீக்கிரமே கிளம்பி சென்று அவற்றை பார்த்து விடலாம் என எண்ணி ரூம் போய் சேர்ந்தோம்.

அடுத்த நாள் “மாணிக்கதாரா” அருவியைக் காண காலை 4:30 மணிக்கெல்லாம் மலைப்பாதையை தொட்டுவிட்டோம். அப்பொழுது தான் வண்டியின் “பெல்ட்” ஒன்று அறுந்து விடவேண்டுமா…. அனைவரும் டென்ஷன் -இன் உச்சிக்கே சென்று விட்டோம். நல்ல வேளையாக டிரைவரும், நண்பர் மோகனும் அவர்களுடைய நண்பர்களுடன் பேசி ஓர் ஜீப்-ஐ ஏற்பாடு செய்தனர். அனைவரும் ஜீப்-இல் ஏறி புறப்பட்டோம். மனதில் “செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்….” பாட்டு ஓடிக்கொண்டிருக்க, சில கிலோமீட்டர் சென்றிருப்போம், திடீரென்று பாட்டு நின்று விட்டது. என்னவென்று பார்த்தால் ஜீப்-இன் டயர் பஞ்சர். நல்ல வேளையாக மாற்று டயர் இருந்ததினால் தப்பித்தோம். டயரை மாற்றிக் கொண்டு புறப்பட்டு ஒருவழியாக அருவியை பார்த்து விட்டு திரும்பினோம்.

மாணிக்கதாரா அருவி

மாணிக்கதாரா அருவி

மாணிக்கதாரா அருவி சென்று விட்டு வரும் வழியில் எடுத்தவை

மாணிக்கதாரா அருவி சென்று விட்டு வரும் வழியில் எடுத்தவை

அன்று மாலையே அர்சிகரே -இல் ரயிலை பிடிக்க வேண்டும். நேரமின்மை காரணமாக அர்சிகரே செல்லும் முன்பு இன்னும் ஒரே ஓர் அருவியை பார்த்து விடலாம் என்று “கல்ஹட்டி” அருவியை நோக்கி புறப்பட்டோம். அங்கும் அதே கதை தான். கூட்ட நெரிசலால் அருவியின் அருகில் வேன் செல்ல முடியாமல் 1 கி .மீ. முன்பே இறங்கி சேருக்கும் சகதிக்கும் நடுவில் நடந்து சென்று ஒருவழியாக அருவியை சென்றடைந்தோம். கூட்ட மிகுதியினால் கால் மட்டும் நனைத்துக் கொண்டு புறப்பட்டோம்.

 

கல்ஹட்டி அருவி

கல்ஹட்டி அருவி

கல்ஹட்டி அருவி

கல்ஹட்டி அருவி
படம் – என் தங்கை

மாலை அர்சிகரே -யில் ரயிலைப் பிடித்து இரவு வீடு வந்து சேர்ந்தோம். சென்ற வருடம் சென்று வந்த வாரணாசிக்கு அடுத்து எந்த ஒரு புகைப்பட பயணமும் மேற்கொள்ளவில்லை. என் மனமளவிற்கு உடல் ஒத்துழைக்கவில்லை என்பதே காரணம். அப்பொழுது நினைத்த படி, கால்களை ஓரளவு வலுப்படுத்திக் கொண்ட பின்னரே (உடற்பயிற்சி மற்றும் உணவு முறையில் மாற்றம்), இப்பயணத்தை மேற்கொண்டேன். இல்லையென்றால் 6 கி.மீ. நடந்து முல்லையங்கிரி மலையை பார்த்திருக்க முடிந்திருக்காது. “Health is Wealth” என்பது எவ்வளவு உண்மை. மொத்தத்தில் இப்பயணம் புது புது நண்பர்களைக் கொடுத்து எப்பொழுதும் போலவே ஓர் வித்தியாசமான பயணமாகவே அமைந்தது.