என்னுடைய 2017…..

2017-ல் அதிக புகைப்படங்கள் எடுக்கவில்லை தான், மேலும் சொல்லிக்கொள்ளும் படியான இடங்களுக்கும் பயணிக்கவில்லை. ஆனாலும் கடந்த ஆண்டு மறக்க முடியாத ஆண்டாகவே கழிந்தது. எப்படி என்கிறீர்களா?. 2016-ல் சென்ற வாரணாசி மற்றும் சிங்கப்பூர் பயணங்கள் மறக்க முடியாத பயணங்களாக அமைந்தாலும், அவைகளினால் நான் கற்றுக்கொண்ட முக்கியமான பாடம் – புகைப்படங்கள் எடுப்பதற்கு கேமரா மற்றும் நம் கண்கள் மட்டும் போதாது,  நம் உடல் ஆரோக்கியமும் மிக அவசியம். மேற்கூறிய இரு பயணங்களும் இதை திட்டவட்டமாக உணர்த்தவே, 2017 ம் ஆண்டு தொடக்கத்தில் உடற்பயிற்சியை அன்றாட வாழ்வில் கண்டிப்பாக சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பதை “புதுவருட தீர்மானமாகவே ” எடுத்துக் கொண்டேன். இதோ ஒரு வருடம் வெற்றிகரமாக முடிந்து விட்டது. இதன் பயன்களை 2017 ம் வருடத்தில் சிக்மகளூர் சென்றிருந்த பொழுதே நன்றாக தெரிந்தது. கஷ்டம் தெரியாமல் 7 கி. மீ. மலைப்பாதையில் நடக்க முடிந்தது. கால்களை வலுவானதாக ஆக்கிக் கொள்ளவே உடற்பயிற்சியை ஆரம்பித்தேன். மேலும் முதல் 6 மாதங்களுக்கு பயணங்கள் மேற்கொள்ளவே பயமாக இருந்தது. ஆகையால் படங்கள் அவ்வளவாக எடுக்க முடியவில்லை. வீட்டின் அருகில் இருக்கும் மலர்களை மட்டுமே அதிகமாக படங்கள் எடுத்தேன். படம் எடுக்க முடியாததினால், புத்தகங்கள் வாசிக்கலாம் என ஆரம்பித்து, சென்ற வருடம் 8 புத்தகங்களை வாசித்து முடித்தாயிற்று. 12 புத்தகங்கள் என்ற இலக்கில் 8 மட்டுமே வாசிக்க முடிந்தது.
இதோ நான் வாசித்த 8 புத்தகங்களின் பட்டியல் ….

1. வால்கா முதல் கங்கை வரை – ராகுல சாங்கிருத்யாயன்
2. Days of abandonment – Elena Feraante
3. ஓர் தமிழ் கதை புத்தகம், மன்னிக்கவும் பெயர் மறந்துவிட்டேன்.
4. Harappa – Vineet Bajpai
5. When I hit you – Meena Kandasamy
6. The road less traveled – M. Scott Peck
7. Origin – Dan Brown
8. மதமும் அறிவியலும் – பாலாஜி K.R.
9. Why I am not a Hindu – Kancha Ilaiyah – சென்ற வருடம் ஆரம்பித்து வாசித்துக் கொண்டிருக்கிறேன். இன்னும் முடியவில்லை.

சென்ற வருடம் நான் எடுத்த படங்களில் சில….

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் (சற்று தாமதம் தான் … பொறுத்துக் கொள்ளுங்கள்…. :-))

Advertisements

மயான கொள்ளை – காவேரிப்பட்டிணம்

2016 வருடத்தின் இரண்டாம் பயணம், காவேரிப்பட்டிணத்திற்கு, மயான கொள்ளை திருவிழாவிற்காக. 2 வாரத்திற்கு முன்பே நண்பர்களுடன் பேசிக் கொண்டபடி மார்ச் மாதம் 8-ம் தேதி காலையில் பெங்களூரில் இருந்து புறப்பட்டோம். ஊர் போய் சேர சரியாக 2 மணி நேரம் எடுத்துக் கொண்டது. திருவிழாவிற்காக வண்டிகளை ஊருக்குள் அனுமதிக்கவில்லை. கோவிலுக்கு சிறிது தொலைவில் வண்டியை நிறுத்தி விட்டு, திருவிழாவிற்காக சாலையின் இருபுறமும் புதிதாக முளைத்திருந்த சிறு சிறு கடைகைகளை ரசித்துக் கொண்டே கோவில் போய் சேர்ந்தோம். இங்கு கிராம தேவதைகளான பூங்காவனத்தம்மன் மற்றும் அங்காளம்மன் ஆகிய இருவரையும் முன்னிறுத்தியே திருவிழா கொண்டாடப்படுகிறது. விழா எடுக்கப்படும் காரணத்தையும் கதையையும் Wiki மற்றும் பல இணைய தளங்களில் ஏற்கனவே அதிகமாக பகிரப்பட்டு விட்டிருக்கின்றன. ஆகவே இப்பதிவில், விழாவில் நான் எடுத்த புகைப்படங்கள், ரசித்தவை,  மனதை உறுத்தியவை ஆகியவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

திருவிழாவில் முக்கியமாக, மக்கள் தாங்கள் வேண்டிக்கொண்டபடி நேர்த்திக்கடனை அம்மனுக்கு செலுத்துகின்றனர். கன்னத்தில் அலகு குத்துவது, ஆண்களும்  பெண்களும், சிறுவர் சிறுமியரும்,  காளி போன்று வேடமிட்டுக்கொண்டு மயானத்திற்குச் சென்று சில சடங்குகளை செய்து விட்டு வேடங்களை களைவது போன்றவை நேர்த்திக்கடனில் சேர்கிறது.  இதில், அம்மனின் ஆயுதமான சூலாயுதத்தை மக்கள் பல அளவுகளில் கன்னத்தில் குத்திக் கொள்கின்றனர். ஒரு ஜாண் அளவிலிருந்து, 301 அடி வரையிலும் சூலாயுதத்தின் அளவு வேறுபடுகிறது. இதில் என்னை வெகுவாறு பாதித்த விஷயம், சூலாயுத கம்பிகளில் பிடித்திருந்த “துரு”.  கம்பியுடன் இருக்கும் துரு, கன்னத்தில் “செப்டிக் ” ஏற்படுத்தி விடாதா?. இதிலிருந்து மக்கள் தங்களை காத்துக் கொள்ள என்ன மருந்து எடுத்துக் கொள்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ள ஆவலாக இருந்தது. அடுத்த முறை செல்லும் பொது கண்டிப்பாக அதை அவர்களிடம் கேட்டுக் கொள்ள வேண்டும் என எண்ணிக் கொண்டேன்.

இதோ அங்கு எடுத்த சில படங்கள்.

காளியாக வேடமிட்டுள்ள சிலர்
காளியாக மாறும் முன்...

காளியாக மாறும் முன்…

"மேக்கப் போட்டுக் கொள்ள மாட்டேன்" என்று அழும் குழந்தையை சமாதானப்படுத்தும் தாய்.

“மேக்கப் போட்டுக் கொள்ள மாட்டேன்” என்று அழும் குழந்தையை சமாதானப்படுத்தும் தாய்.

சாமியாடும் பெண்ணை கோழியின் ரத்தத்தைக் கொடுத்து சாந்தியடையச்  செய்கின்றனர்.

சாமியாடும் பெண்ணை கோழியின் ரத்தத்தைக் கொடுத்து சாந்தியடையச் செய்கின்றனர்.

நாக்கில் அலகு குத்திக் கொள்ளும் பொழுது

நாக்கில் அலகு குத்திக் கொள்ளும் பொழுது

சென்னையிலிருந்து பல புகைப்பட நண்பர்கள் அங்கு வந்திருந்ததால் முதல் முறை சென்றிருக்கிறோம் என்ற எண்ணம் துளி கூட இருக்கவில்லை. ஆனால் “மகளிர் தினத்தன்று” , அங்கு, ஒரு பெண் புகைப்படக் கலைஞர் கூட இல்லையே என்ற வருத்தம் இல்லாமல் இல்லை.
மதியம் வரை கோவிலில் நேரத்தை கடத்தி விட்டு ஊருக்கு செல்லலாம் என கிளம்பி வெளியில் வரும் பொழுது தான் தெரிந்தது,  நாங்கள் வரும் பொழுது கூட்டம் சற்று குறைவாக இருந்த தெருக்களை பலவிதமான காளிகள் ஆக்கிரமித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களின் நீண்ட நெடிய சூலத்திலிருந்து தப்பித்துக் கொண்டு ஒரு வழியாக கோவிலைக் கடந்து வந்தோம்.
தென்பெண்ணையாற்றின் கரையோரத்தில் இருக்கும் மயானத்தில் தான் திருவிழாவின் இன்ன பிற சடங்குகள் நடைபெறும். நேரமின்மை காரணமாக அங்கு செல்லாமலேயே ஊர் திரும்பினோம்.

மார்ச் மாதம் ஆதலினால் என் மகன்களுக்கு முழுப்பரீட்சை ஆரம்பித்து இருந்தது. “நான் காவேரிபட்டினத்திற்கு போய் வரவா? ” என பாலாஜி-யிடம் கேட்கும் பொழுது, “நான் வீட்டிலிருந்தே வேலை பார்க்கிறேன், நீ போயிட்டு வா ” என கூறி, நாள் முழுவதும் குழந்தைகளை பார்த்துக் கொண்டு, சாயங்காலம் களைப்பாக வந்த எங்களுக்கு டீ (வேறு)செய்து கொடுத்தார். இரண்டு வருடங்களாக போய் வர வேண்டும் என நினைத்திருந்த காவேரிப்பட்டிணத்திற்கு சென்று வந்தது மிகுந்த சந்தோஷத்தைக் கொடுத்தது. “என்னுடைய இந்த உதவிகளே, இவ்வருடத்தின் உனக்கான மகளிர் தின பரிசு” எனக் கூறி அந்த சந்தோஷத்தை இரட்டிப்பாக்கினார் பாலாஜி.

தெய்யம் – அண்டலூர் காவு

தெய்யம் – கேரள மாநிலத்தின் மலபார் மற்றும் கண்ணூர் பகுதிகளில் வருடந்தோறும் நடைபெற்று வரும் பண்டிகைகளுள் முக்கியமானது. 2 – 3 வருடங்களாகவே இப்பண்டிகையை படமெடுக்க வேண்டும் என்ற ஆசை மனதில் இருந்து கொண்டே இருந்தது. பாலாஜி -யின் நண்பர் ஒருவரின் சொந்த ஊரில் வருடந்தோறும் இப்பண்டிகை நடப்பதறிந்து ஒன்றரை வருடமாக அவரை படாத பாடு படுத்தி, இம்முறை சென்று, ஆசை தீர படமெடுத்து விட்டு திரும்பினேன்.

இப்பயணத்தில் என்னுடைய அனுபவங்களையும், புகைப்படங்களையும் பார்க்கும் முன் தெய்யம் பற்றி ஒரு சிறிய அறிமுகம். வழக்கமாக இப்பண்டிகை,  கிராமத்து கதைகளையும், கிராமத்து தேவதைகளையும்  உள்ளடக்கியே நடத்தப்படுகிறது. நான் சென்று வந்த “அண்டலுர் காவு” எனும் ஊரில் மட்டும் ராமாயணத்தின் யுத்த காண்டத்தின் ஒரு பகுதியான வாலி-சுக்ரீவன் ஆகிய இருவருக்கும் நடக்கும் போர் மற்றும் ராமன் அயோத்தியிலிருந்து இலங்கைக்கு சென்று சீதையை மீட்கும் படலம் ஆகியவை கதைக்களமாக உள்ளது. மேலும் இப்பண்டிகைகளில் பலவகையான கதாபாத்திரங்களை  ஏற்று அழகான அடர்த்தியான ஒப்பனை செய்து கொள்கின்றவர் அனைவரும் பழங்குடியின மக்கள் அல்லது தாழ்த்தப் பட்ட வகுப்பினைச் சேர்ந்தவர்களே. இம்மாதிரியான பண்டிகை நாட்களில், ஒப்பனை செய்து கொண்ட தெய்யங்களை, அனைத்து தரப்பின மக்களும், கடவுளாகவே நினைத்து அவர்களின் ஆசீர்வாதங்களையும் பெற்றுக் கொள்கின்றனர்.

சுக்ரீவனின் ஆசீர்வாதங்களை பெரும் இளம்பெண்...

சுக்ரீவனின் ஆசீர்வாதங்களை பெரும் இளம்பெண்…

கதை “போர்” அடித்து விட்டதா?… சரி.. நிறுத்தி விட்டேன்.

பயணத்தில்,  நண்பரின் வீட்டுக்கருகில் பண்டிகை நடப்பதினால், அவருடைய வீட்டிலேயே தங்க முடிவெடுத்தோம். பெங்களூரிலிந்து இரவு புறப்பட்டு, காலை கண்விழித்தெழும் போதே “சே” வின் ஆளுயர கட் அவுட் கேரளா வந்துவிட்டதை உறுதி செய்தது. பின்பு நண்பரின் வீட்டில் காலை சாப்பாடு மற்றும் பகல் உணவு ஆகியவற்றை முடித்துக் கொண்டு கோவிலுக்குச் சென்றோம். நண்பகல் “யுத்த காண்டம்” நடந்தேறியது. இப்பண்டிகையை படமெடுக்கும் புகைப்படக் கலைஞர்கள் மத்தியில் சில படங்கள் முக்கியமாக கருதப்படுகின்றது. அதில் அக்கலைஞர்கள் ஒப்பனை செய்து கொள்ளும் பொழுது எடுக்கப்படும் படமும் ஒன்று.  அம்மாதிரியான படங்கள் எல்லாம் எடுக்க வேண்டும் என்று முன்கூட்டியே யோசித்து வைத்திருந்தேன். ஆனால் பெண்களை ஒப்பனை அறையில் அனுமதிப்பதில்லை என்று கூறி என்னை அதிர்ச்சி அடையச் செய்தனர். பின்பு யோசிக்கையில் தான் தெரிந்தது, அம்மாதிரியான படங்களை எல்லாம் எடுத்தது ஆண் புகைப்படக் கலைஞர்களே என. மிகுந்த ஏமாற்றத்துடன் வாலி-சுக்ரீவன் போர் காட்சிகளை படமெடுக்க காத்திருந்தேன்.

வாலி -யை போர்க்களத்திற்கு  அழைத்துக்  கொண்டு வரும் போதே கொஞ்சம் கொஞ்சமாக கூட்டம் சேர்ந்து விட்டது. அவசரம் அவசரமாக, எங்கு நின்றால் நல்ல கோணங்களில் படம் கிடைக்கும் என்றெல்லாம் யோசித்து இடத்தை தேர்வு செய்து கொண்டேன். என் நல்ல நேரம், “செண்டா மேளம்” அடித்துக் கலக்கும் மேளக்காரர்களுக்கு நடுவில் மாட்டிக் கொண்டேன். போர் முடியும் பொழுது என் காதின் நிலைமையை நான் சொல்லித்தான் தெரியவேண்டுமா??

அங்கு எடுத்த புகைப்படங்களில் சிலவற்றைப் பார்ப்போம்.

முதலில் வாலி, சுக்ரீவனை அறிமுகம் செய்து கொள்வோம்.

 வாலி

வாலி

சுக்ரீவன்

சுக்ரீவன்

வாலி-ஐ போர்களத்திற்கு அழைத்து வரும் மக்கள்.

வாலி-ஐ போர்களத்திற்கு அழைத்து வரும் மக்கள்.

 

போர்க்களத்தில் சுக்ரீவனை தேடும் வாலி.

போர்க்களத்தில் சுக்ரீவனை தேடும் வாலி.

 

மலை மேல் வாலியும் தரை மேல் சுக்ரீவனும் போரிடுவதற்கு தயாராக...

மலை மேல் வாலியும் தரையில் சுக்ரீவனும் போரிடுவதற்கு தயாராக…

போர்க்களத்தில் ஆக்ரோஷமான சுக்ரீவன்...

போர்க்களத்தில் ஆக்ரோஷமான சுக்ரீவன்…

கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் நடந்தது போர். போர் முடிந்த பிறகு தான் தெரிந்தது, கேமரா வை தூக்கிக் கொண்டிருந்ததினால் என் வலது கை மற்றும் முதுகின் ஒரு புறம் முழுக்க வலி கண்டிருந்ததை. பின்பு இரவு ஸ்ரீ ராமனை பார்க்க வரலாம் என வீடு திரும்பினோம்.

இரவு 9 மணிக்கு மேல் கோவிலுக்கு வந்த எங்களுக்கு அங்கு கூடி இருந்த மக்கள் கூட்டத்தை பார்த்தவுடன், கடைசி வரை தெய்யத்தை பார்த்து விட்டு போக முடியுமா என்ற சந்தேகம் வந்துவிட்டது. முழுமையாக பார்க்க முடியாது என்பதை தெரிந்து கொண்டு கோவிலின் முன் மக்களுக்கு ஆசி வழங்கி கொண்டிருந்த ஸ்ரீ ராமனையும், லக்ஷ்மணனையும், பப்புரான் என அழைக்கப்படும் அனுமனையும் படமெடுத்துக் கொண்டு வீடு திரும்பினோம்.
"தெய்வத்தார்" என்றழைக்கப்படும் ஸ்ரீ ராமன்.

“தெய்வத்தார்” என்றழைக்கப்படும் ஸ்ரீ ராமன்.

 

அங்ககாரனான லக்ஷ்மணன்

அங்ககாரனான லக்ஷ்மணன்

 

லக்ஷ்மணனின் தலை மேலிருக்கும் முடி

லக்ஷ்மணனின் தலை மேலிருக்கும் முடி

பப்புரான் என அழைக்கப்படும் அனுமன்

பப்புரான் என அழைக்கப்படும் அனுமன்

ஒவ்வொரு வருடமும் மலையாள கும்ப மாதத்தின் முதல் ஏழு நாட்கள் நடந்தேறும் இவ்வகையான தெய்யம், பலதரப்பட்ட மக்களின் ஒற்றுமையை வளர்க்கும் நோக்கத்திலேயே நடத்தப்படுகிறது.
தமிழ்நாட்டில் நடக்கும் தெருக்கூத்தை  “தெய்யம்” பல இடங்களில் நினைவூட்டினாலும்,  இது ஒரு வித்தியாசமான அனுபவமாகவே இருந்தது.  உடல்சார்ந்த களைப்பு ஒரு பக்கம் இருந்தாலும் நல்ல படங்கள் கிடைத்த சந்தோஷம் அதையெல்லாம் மறக்கச் செய்தன.

தீபாவளியை முன்னிட்டு…

கடந்த 2, 3 வருடங்களாகவே தீபாவளி-க்காக மதுரை செல்வதை நிறுத்தி விட்டோம். பாலாஜி-க்கு கூட்டம் மற்றும் சத்தம் என்றாலே அலர்ஜி என்பதே காரணம். தீபாவளி அன்று மதுரை-ஐ விட பெங்களூர், IT கம்பெனி-யில் வேலை பார்க்கும் அனைவரும் அவரவர் சொந்த ஊர்களுக்கு போய் விடுவதினால், சற்று அமைதியாக இருக்கும். சென்ற வருடம் “லெபக்ஷி” எனும் ஊருக்கு போய் வந்தோம். அதற்கு முந்தைய வருடம் “ஒகனேக்கல்” சென்று வந்தோம். அதே போல் இந்த வருடமும் எங்காவது செல்ல வேண்டும் என நினைத்து “எங்கு” என யோசிக்கையில் (இப்படி யோசிக்கும் சமயம், பாலாஜி பிளான் என்கிற பெயரில் உலகத்தையே சுற்றிக் காண்பித்து விடுவார் -திறமைசாலி) “மைசூர் Zoo ” என முடிவானது.

நான் ஏற்கனவே ஒரு முறை அங்கு சென்று வந்துவிட்டதினால் எவ்வளவு பெரிய Zoo, எவ்வளவு நேரம் ஆகும் என்று தெரிந்திருந்தது. ஆகவே காலை 10 மணிக்கு அங்கு உள்ளே செல்லும் படியாக நேரத்தை கணக்கிட்டு பெங்களூரிலிருந்து கிளம்பினோம். உள்ளே செல்லும் பொழுது சரியாக 10 மணி…

பெங்களூரின் “பன்னார்கட்டா Zoo” வை விட பரப்பளவில்(167 ஏக்கர்) மட்டுமல்லாது அங்கு பாதுகாக்கப்படும் விலங்கினங்களின் வகைகளிலும்(168 வகைகள்) மிகப் பெரியது இந்த மைசூர் Zoo. 1892 -ம் ஆண்டு நிறுவப்பட்டு உலகின் மிகப்பழமையான மிருகக் காட்சி சாலையில் ஒன்றாக விளங்குகின்றது.

உள்ளே செல்லும் பொழுதே நம் பைகளை நன்றாக சோதித்து எந்தவொரு பிளாஸ்டிக் பொருட்களும் இல்லை என தெரிந்த பின்பே அனுமதிக்கின்றனர். ஆதலால் zoo முழுக்க பிளாஸ்டிக் இல்லாத பச்சை பசேல் என்ற சூழல் அனைவரையும் அதிகமாகக் கவர்கிறது. அங்கிருக்கும் ஒவ்வொரு கூண்டும், தினசரி நன்றாக சுத்தம் செய்யப்பட்டு சுத்தமான உணவுகள் அங்கிருக்கும் பிராணிகளுக்கு வழங்கப்படுகிறது. பல அரிதான விலங்குகளை இங்கு மிகவும் கவனமாகப் பாதுகாக்கிறார்கள். அங்கு நான் எடுத்த புகைப்படங்களில் சில…

பறவைகளின் கூண்டுகளை சுத்தப்படுத்தும் துப்புரவு தொழிலாளி

பறவைகளின் கூண்டுகளை சுத்தப்படுத்தும் துப்புரவு தொழிலாளி


குரங்கினங்களில் மிக அரிய வகை குரங்குகளை இங்கே காண முடிகிறது. அதில் எங்களை மிகவும் கவர்ந்தவர் இதோ இவர் தான். அச்சு அசல் மனிதனைப் போலவே இருந்தார்.

IMG_5432copy

IMG_5354copy

இங்கு பெலிக்கன், ஹெரான் மற்றும் painted stork போன்ற பறவைகளுக்காக மிகப் பெரிய கூண்டு ஒன்று அமைக்கப்பட்டிருகிறது. அதில் என்ன விசேஷம் என்றால், நாம் அதன் உள்ளே சென்று அப்பறவைகளை மிக அருகே காணலாம் என்பதே. “சித்தார்த்” மிக விருப்பப்பட்டு ரசித்ததில் இதுவும் ஒன்று.


இவ்வளவையும் கண்டு ரசித்து வெளியில் வர சரியாக 4 மணி நேரம் ஆகியது. இத்தனைக்கும் மழையின் காரணமாக சிலவற்றை தவிர்க்க வேண்டியதாயிற்று.

வெளியில் வந்த பின்பு ஓர் நல்ல ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு, St. Philomina சர்ச் பார்த்து விட்டு சரியாக 4 மணிக்கு பெங்களூர் கிளம்பினோம். எப்பொழுதும் 3 மணி நேரத்தில் மைசூரிலிருந்து பெங்களூர் போய் விடலாம். ஆனால், மழை-இன் காரணாமாக போக்குவரத்து நெரிசலாகி அன்று 5 மணி நேரம் ஆகியது. இதனால் எனக்கும் பாலாஜிக்கும் தலைவலியே வந்துவிட்டது. காலையில், அனைத்தையும் ரசித்து அடைந்த சந்தோஷத்துடன் வீடு போய் சேர முடியவில்லை. கார் ஓட்டிக்கொண்டிருக்கும் பொழுது, பாலாஜி ஆள்காட்டி விரலை தன் முன்னே நீட்டி வடிவேலு style-ல், “இனிமே மைசூர் ரோட்டுக்கு கார் எடுத்துட்டு வருவே, வருவே” என்று கேட்டுக் கொண்டது தலைவலியின் நடுவிலும் சிரிப்பை வரவழைத்தது. இப்படி போக்குவரத்து நெரிசலில் திடீரென்று எங்களுக்கு ஓர் ஞானோதயம் பிறந்தது, என்னவென்றால் இனி மைசூர் செல்வதெனில் கண்டிப்பாக ரயிலில் பயணம் செய்வது என்று. இதனால் நேரம் மிச்சமாவதுடன், அங்கு ஊர் சுற்றிய சந்தோஷம் குறைந்தது 2 நாட்களுக்காவது நீடிக்கும்.


இத்தனைக்கும் நடுவிலும் மனதில் சிறிது சந்தோஷம், ஏனென்றால், இந்த போக்குவரத்து நெரிசலை வெறுத்தவர்களுள் கண்டிப்பாக 5, 6 பேராவது ரயில் போன்ற “Public Transport” ஐ உபயோகப்படுத்த வேண்டுமென்று எங்களைப் போன்று நினைத்திருப்பார்கள். இது நல்ல விஷயம் தானே…

புது மண்டபம்

மதுரையில் பிறந்த மற்றும் அங்கு வாழ்கின்ற மக்களில் பலர் தங்கள் வாழ்நாளில் ஒரு முறையேனும் கண்டிப்பாக புது மண்டபம் சென்றிருப்பார்கள். ஏனெனில் குழந்தை பிறப்பிலிருந்து, மக்கள் சாகும் வரையில் தேவையான அத்தனை பொருட்களும் கிடைக்கும் இடமாக இருக்கிறது புது மண்டபம். இக்கால மக்களுக்கு புது மண்டபம் என்று சொன்னவுடன் சட்டென நினைவுக்கு வருவது பித்தளை பாத்திரக்கடைகளும் புத்தகக் கடைகளும் தான். ஆனால் பலருக்கு இது எதற்காகக் கட்டப்பட்டது, மற்றும் அதன் வரலாற்றினைப் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதைப் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வோமா?

புது மண்டபத்தின் முன்புறத் தோற்றம்.

புது மண்டபத்தின் முன்புறத் தோற்றம்.


மண்டபத்தின் எதிரில் இருக்கும் நந்தி மற்றும் ராயகோபுரம்.

மண்டபத்தின் எதிரில் இருக்கும் நந்தி மற்றும் ராயகோபுரம்.


இந்த மண்டபம் 1500 க்களில் நாயக்க மன்னர்களால் கட்டப்பட்டுள்ளது. வரிசைக்கு 20 தூண்கள் வீதம் 5 வரிசைகளில் மொத்தம் 100 தூண்கள் உள்ள வசந்த மண்டபத்தைச் சுற்றியே இப்பொழுதுள்ள கடைகள் இருக்கின்றன. வருடந்தோறும் சித்திரைத் திருவிழாவின் பொழுது இங்கு மீனாக்ஷி மற்றும் சுந்தரேஸ்வரர் எழுந்தருள்வர்.

நாயக்கர்கள் காலத்தில் இந்த மண்டபம், முக்கியமாக அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், கோவிலுக்கு சென்று வந்த பின்னர் இளைப்பாறுவதற்கே பயன்படுத்தி வந்துள்ளனர். மேலும் இப்பொழுதுள்ள புத்தகக் கடைகள் மற்றும் பித்தளைப் பாத்திரக்கடைகள் இருக்கும் இடம் தண்ணீர் செல்லும் கால்வாயாக பயன்படுத்தி வந்துள்ளனர். ராணியர் வந்து இளைப்பாறும் பொழுது குளிர்ச்சியாக இருக்கவே இந்த ஏற்பாடு.

இந்த மண்டபத்தில் மீனாட்சியின் திக்விஜயக் காட்சியும், சிவபெருமானுடைய ஊர்த்துவத்தாண்டவக் காட்சியும் சிலைகள் மூலம் சித்தரித்துள்ளனர்.

திக்விஜயத்தின் பொழுது தடாதகை மூன்று மார்பகங்களுடன்....

திக்விஜயத்தின் பொழுது தடாதகை மூன்று மார்பகங்களுடன்….

தடாதகையின் எதிரில் சிவபெருமான்.

தடாதகையின் எதிரில் சிவபெருமான்.

பத்திரகாளி

பத்திரகாளி

பத்திரகாளியின் எதிரே ஊர்த்துவ தாண்டவர்.

பத்திரகாளியின் எதிரே ஊர்த்துவ தாண்டவர்.

மண்டபத்தின் தூண்களின் நடுவில் உள்ள பட்டயக் கல்லில் சிவபெருமானின் 64 திருவிளையாடலும் செதுக்கப்பட்டுள்ளன. கிழக்கு வாயிலிலும், தெற்கு வாயிலிலும் 2, 2 குதிரைகள் மண்டபத்தை இழுத்து செல்வது போன்று உருவாக்கி இருப்பதினால் இம்மண்டபம் ஓர் ரதம் போன்று காட்சியளிக்கிறது(இதனை புது மண்டபத்தின் முன்புறத் தோற்றப் படத்தில் காணலாம்).

மீனாட்சி அம்மன் கோவிலின் நந்தி மண்டபத்தில் காணப்படும் 27 சிலைகளை இங்கும் செதுக்கி உள்ளனர்.

இங்கிருக்கும் சிலைகளின் பட்டியல்

இங்கிருக்கும் சிலைகளின் பட்டியல்

அங்குள்ள கடைகள்...

அங்குள்ள கடைகள்…

திருவிழா, சடங்கு, கிராம தேவதைகளின் பூஜைக்கு வேண்டிய பொருட்கள் அனைத்தும் இங்கே வாங்கிக் கொள்ள முடியும்.

திருவிழா, சடங்கு, கிராம தேவதைகளின் பூஜைக்கு வேண்டிய பொருட்கள் அனைத்தும் இங்கே வாங்கிக் கொள்ள முடியும்.

மன்னர் காலத்திற்கு பிறகு ஆங்கிலேயர் காலத்தில் இந்த மண்டபம் ஓர் நூலகமாக செயல்பட்டு வந்திருக்கிறது. இந்தியா சுதந்திரமடைந்த பின்னரே இந்த மண்டபத்தில் கடைகள் முளைக்கத் தொடங்கியுள்ளது. இப்பொழுதுள்ள கடைகளின் வயது கிட்டத்தட்ட 100 ஆண்டுகள்.

சித்திரைத் திருவிழா தொடங்க இருப்பதினால், திருவிழாவின் பொழுது கள்ளழகரின் பக்தர்கள் உடுத்தும் உடைகளைத் தைக்கும் பணி சூடு பிடிக்கத் தொடங்கி உள்ளது.

பக்தர்கள்  அணியும் துணிகளை தைக்கும் தையல்காரர்.

பக்தர்கள் அணியும் துணிகளை தைக்கும் தையல்காரர்.

கள்ளழகர் திருமாலிருஞ்சோலை (அழகர் கோவில்) – யிலிருந்து மீனாட்சி சொக்கநாதர் திருமணத்தைக் காண புறப்பட்டு மதுரைக்கு வருவார். வரும் வழியில் அவருடைய பக்தர்கள் இம்மாதிரியான உடைகளை உடுத்தி, சித்திரை மாத சூட்டினை தணிப்பதற்காக அழகரின் மேல் தண்ணீரை பீய்ச்சி அடிப்பர். ஆண்டு முழுவதும் இந்த துணிகள் விற்பனையானாலும், சித்திரை மாதத்திலேயே அதிகம் விற்பனை ஆகுமென இந்தக் கடையை நடத்தும் கார்த்திகேயன் கூறினார். முன்பெல்லாம் திருவிழா முடிந்ததும் வைகை நதிக் கரையினிலேயே தாம் பயன்படுத்திய துணிகளை தூக்கி எறிந்து விடுவார்களாம். ஆனால் இப்பொழுதெல்லாம் reuse செய்ய துவங்கி விட்டார்கள். நல்ல விஷயம் தான்.

கருங்கச்சை மற்றும் குல்லா வியாபாரம் செய்யும் கார்த்திகேயன் தன் தயாரிப்புகளுடன்….

கார்த்திகேயனின் கடை...

கார்த்திகேயனின் கடை…


மதுரை திருவிழா மட்டுமல்லாது திருநெல்வேலியின் சுடலைமாடசாமி திருவிழாவிற்கும் இங்கிருந்தே துணிகள் வாங்கி செல்கின்றனர் பக்தர்கள்.

சுடலைமாடசாமி பக்தர்கள் அணியும் குல்லா...

சுடலைமாடசாமி பக்தர்கள் அணியும் குல்லா…


வருங்காலத்தில் புதுமண்டபத்தை ஓர் அருங்காட்சியகமாக மாற்றும் திட்டத்தில் அரசாங்கம் இருப்பதாக இங்குள்ளவர்கள் தெரிவித்தனர். அப்படி மாற்றினால் அரசாங்கத்திற்கு நல்ல வருமானமும், சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கும், ஆனால் இங்குள்ள கடைகளும், கடைகளை நடத்துபவர்களின் வாழ்க்கையும் என்னவாகும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

Coorg பயணம் – Bylakuppe

Buddha Sakyamuni.

நீண்ட நாள் கனவு Coorg பயணம், சுதந்திர தினத்தன்று நிறைவேறியது. இரண்டு முறை போவதென்று முடிவெடுத்து கடைசி நேரத்தில் போகமுடியாமல் போன Coorg பயணம். ஆசை ஆசையாய் கிளம்பினோம். இங்கு சுற்றிப்பார்த்த இடங்களை எல்லாம் ஒரே பதிவில் பகிர முடியாததால் தனித் தனி பதிவாக கொடுத்துவிடலாமென்று நினைத்திருக்கிறேன். முதலில் நாங்கள் சென்றது Bylakuppe-வில் உள்ள Namdroling Monastry தங்க கோவில்.

திபெத்தியர்கள் இந்தியாவில் குடியேறும் பொழுது சிலர் Bylakuppe -விலும் குடிபெயர்ந்துள்ளனர். புத்த சமயத்தை பரப்புவதற்காக மைசூர் மாவட்டம், கர்நாடகா – வில் மிகப்பெரிய மடம் ஒன்று Penor Rinpoche என்பவரால் 1963 -ம் ஆண்டு நிறுவப்பட்டுள்ளது. இந்த மடத்தில் 5000-திற்கும் மேற்பட்ட துறவிகள் மற்றும் சந்நியாசிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த மடத்தின் முழுப் பெயர் “Thegchog Namdrol Shedrub Dargyeling” சுருக்கமாக “Namdroling”.

 நுழைவு வாயில்...

நுழைவு வாயில்…ஆரம்ப காலத்தில் இந்த மடத்தினுள்ளே இருந்த மூங்கிலால் கட்டப்பட சிறு கோவிலே 1999 செப்டம்பர் 24 – ல் “Padma Sambhava Buddhist Vihara” எனப்படும் தங்க கோவிலாக உருவெடுத்தது. இந்தக் கோவில் ஒரே நேரத்தில் பல ஆயிரத்துக்கும் மேற்பட்ட துறவிகள் வழிபட ஏதுவாக கட்டப்பட்டுள்ளது.
Padma Sambhava Buddist Vihara - தங்க கோவிலின் நுழைவு வாயில்...

Padma Sambhava Buddist Vihara – தங்க கோவிலின் நுழைவு வாயில்…


இந்த கோவிலுக்குள் அடியெடுத்து வைத்தவுடன் அங்கு நிலவியிருக்கும் அமைதி நம்மையும் தொற்றிக்கொள்கிறது. எதிரில் 60 அடி உயரம் கொண்ட 3 சிலைகள் நம்மை பிரமிப்பில் ஆழ்த்துகிறது.
கோவிலின் உள்ளே....

கோவிலின் உள்ளே….


நடுவில் இருப்பவர் Buddha Sakyamuni ( நமக்கெல்லாம் தெரிந்த கௌதம புத்தர்), அவருக்கு வலப்பக்கம் இருப்பவர் Padma Sambhava, மற்றும் இடப்பக்கம் இருப்பவர் Buddha Amitayus.

Buddha Sakyamuni

Buddha Sakyamuni

Buddha Sakyamuni.

Buddha Sakyamuni.


இதில் Padma Sambhava என்பவர் “இரண்டாவது புத்தர் ” என்று திபெத்தியர்களால் அழைக்கப்படுபவர். இவர் தான் புத்த சமயத்தை திபெத் மக்களிடம் பரப்பியவர்.Buddha Amitayus அரசராக இருந்து பௌத்த மதத்தை தழுவியவர். இவருடைய சிலையை நிருவியவர்களுக்கு நீண்ட ஆயுள் கிடைக்கும் என்பது ஐதீகம்.

Padma Sambhava

Padma Sambhava

Buddha Amitayus

Buddha Amitayus

பின்பு அங்கிருக்கும் ஓவியங்கள் மற்றும் கலைநயம் மிக்க பொருட்களை ரசித்துவிட்டு அங்கிருந்து கிளம்ப மனமில்லாது கிளம்பினோம்…

Thanga Painting...

Thanga Painting…

Dibetian Thanga Paintings

Dibetian Thanga Paintings

Door Knockers...

Door Knockers…

வழிபாட்டில் ஈடுபட்டிருக்கும் துறவிகள்.

வழிபாட்டில் ஈடுபட்டிருக்கும் துறவிகள்.

 புத்த துறவிகள்.

புத்த துறவிகள்.

இடைவேளை நேரத்தில் புத்த துறவிகள்.

இடைவேளை நேரத்தில் புத்த துறவிகள்.

இடைவேளை நேரத்தில் அமைதியாக காட்சியளிக்கும் கோவில்.

இடைவேளை நேரத்தில் அமைதியாக காட்சியளிக்கும் கோவில்.

சிட்டுக் குருவிகள் அமைதியான இடங்களில் மட்டுமே வாழுமோ?

சிட்டுக் குருவிகள் அமைதியான இடங்களில் மட்டுமே வாழுமோ?