2018 – ஐ நிறைவு செய்ய…..

2018 ம் ஆண்டை ஓர் பயணத்துடன் நிறைவு செய்யலாம் என நினைத்து குடும்பத்துடன் கொடைக்கானல் சென்று திரும்பினோம். தங்குவதற்கான ஏற்பாடுகள் முன்கூட்டியே செய்துவிட்டதினால், அங்கு சென்று எந்தெந்த இடங்களுக்கு போய் வருவது என்ற கேள்விகள் மட்டும் மனதில் ஓடிக்கொண்டே இருந்தது. வழக்கமாக எல்லோரும் போகின்ற இடங்களுக்கு சென்றால் மதியிடமிருந்து (என் முதல் மகன்) ‘டோஸ்’ கிடைக்கும் என்று தெரியும். அவன் டிரக்கிங் செல்ல வேண்டும் என பெங்களூரிலிருந்து சொல்லிக் கொண்டிருந்தான். என் தங்கை இரண்டு நாட்களுக்கு முன்பு தான் அங்கு சென்று வந்திருந்ததினால், அவளிடமும் ஐடியாக்களை கேட்டு வைத்திருந்தேன். அவள் தான் வட்டக்கனல் டிரக்கிங் பற்றி சொல்லி இருந்தாள். சரி முதல் நாள் அதிகாலையிலேயே அங்கு செல்வது என முடிவு செய்து கிளம்பினோம்.

கொடைக்கானலில் சுற்றுவதற்கு ஏற்பாடு செய்திருந்த காரின் டிரைவர் அஷோக், எங்களுடன் வருவதாக கூறி இருந்தார். ‘டால்பின் நோஸ்’ மற்றும் ‘எக்கோ ராக்’ வரை சென்று வருவது என முடிவு செய்து புறப்பட்டோம். ட்ரெக்கிங் செல்லும் வழி சற்று குறுகலாக, மரங்களின் வேர்களே படிகளாக இருந்தது. அதிகாலை பனியில், டிசம்பர் மாத குளிரும் சேர்ந்து எங்களை கொஞ்சம் வெடவெடக்கத்தான் வைத்தது. அந்த குளிரில், மெதுவாக, கவனமாக அந்த குறுகலான பாதையில் நடக்க ஆரம்பித்தோம். சற்று தூரம் சென்றதும், இரண்டு பேர் கோவேரி கழுதையின் மேல் சில சாமான்களை ஏற்றிக்கொண்டு வந்து கொண்டிருந்தனர். அவர்களை பார்த்ததும், சின்னவர், இவர்கள் யார், ஏன் இவ்வளவு பொருள்களை கழுதையின் மேல் ஏற்றிக்கொண்டு வருகின்றனர் என பல கேள்விகளை அடுக்கிக்கொண்டே சென்றான். அவன் கேள்விகளுக்கெல்லாம் அஷோக் தான் பொறுமையாக பதில் சொல்லிக்கொண்டே வந்தார். அங்கிருந்து 9 கி. மீ . தொலைவில் இருக்கும் வெள்ளக்கிவி கிராமத்திலிருந்து அவர்கள் வருவதாகவும், வாரம் ஒரு முறை அக்கிராமத்தில் கிடைக்கும் பொருட்களை இப்படி கழுதையில் ஏற்றிக்கொண்டு வந்து கொடைக்கானலில் விற்றுவிட்டு தங்களுக்கு வேண்டியதை அங்கிருந்து கொண்டு செல்வர் எனவும் அஷோக் கூறியதை ஆச்சர்யமாகக் கேட்டுக்கொண்டே நடந்து வந்தான். மலைப்பாதை ஆகையினால் சற்று தூரம் நடந்ததும், வேர்க்க ஆரம்பித்து குளிரை கொஞ்சம் கொஞ்சமாக விரட்டியது.

அழகான காட்டுப்பூக்கள் பாதை முழுவதையும் அலங்கரித்துக் கொண்டிருப்பதை ரசித்துக் கொண்டும், என் காமிராவில் படமெடுத்துக் கொண்டும் சென்றதினால் நடந்து போகும் களைப்பு தெரியவில்லை. அப்படி போய்க்கொண்டிருக்கையில் ஆங்காங்கே வளர்ந்திருந்த பூக்களை காண்பித்து அவை தான் ‘நீலக்குறிஞ்சி’ என அஷோக் காண்பிக்கவே, என் சந்தோஷத்திற்கு அளவே இல்லை. ஏனெனில், இந்த வருடம் நீலக்குறிஞ்சி பூக்க போகிறது என பத்திரிக்கையில் வந்த பொழுதெல்லாம் , நம்மால் காண முடியுமா இப்பூவை என்ற ஏக்கம் என் மனதில். இம்முறை விட்டால் மறுபடியும் அதை பார்க்க 12 வருடங்கள் காத்திருக்க வேண்டுமே என்ற கவலை. முகநூலில் சில நண்பர்கள் அப்பூவை படமெடுத்து போட்ட பொழுது, சரி இதிலாவது பார்க்க முடிகிறதே என்று சந்தோஷம் அடைந்தேன். இப்பொழுது, நானும் குறிஞ்சியை பார்த்து விட்டேன் என்ற திருப்தி.

நீலக்குறிஞ்சி

நீலக்குறிஞ்சி

பின்பு டால்பின் நோஸ் பார்க்க சென்றோம். சரி தூரத்தில் இருந்து அப்பாறையை காண்பிப்பார் என நினைத்தால், ஓர் பாறையின்மேல் ஏற வைத்து இது தான் டால்பின் நோஸ் என கூறிவிட்டார். அப்பாறையின் மேல் ஏற கொஞ்சம் பயமாக இருந்தாலும் அங்கிருந்து தெரிந்த மேகம் சூழ்ந்த மலை மற்றும் மரங்களின் அழகான காட்சி அப்பயத்தை எல்லாம் போக்கி விட்டன.

டால்பின் நோஸ் - லிருந்து

டால்பின் நோஸ் – லிருந்து

டால்பின் நோஸ் - லிருந்து

டால்பின் நோஸ் – லிருந்து

நாங்கள் இந்த பக்கம் இயற்கையை ரசித்து கொண்டிருக்கும் பொழுது அந்த பக்கம் சின்னவரும், பெரியவரும் ஓர் பூனையை பார்த்து அதனுடன் விளையாடிக் கொண்டிருந்தனர். நல்ல வேளையாக சின்னவர், நானும் அப்பாறையின் மேல் ஏறுவேன் என அடம்பிடிக்கவில்லை.

எக்கோ ராக் பார்க்க செல்லும் வழியில் வெள்ளாகிவி கிராமமும் தூரத்தில் தெரிந்தது. அங்கும் செல்லலாமா என அஷோக் கேட்டதற்கு, சின்னவர் 9 கி. மீ. நடக்க முடியாது என்பதை மனதில் கொண்டு, வேண்டாம் என மறுத்து விட்டோம். இரண்டையும் பார்த்து விட்டு, அங்கிருந்து செல்ல மனமில்லாமல் மேலே ஏறி வந்தோம்.

எக்கோ ராக்

எக்கோ ராக்

 நாங்கள்

நாங்கள்

வட்டக்கனல் அருவி

வட்டக்கனல் அருவி

இரண்டு நாள் கொடைக்கானல் பயணத்தில் பல இடங்களுக்கு சென்றோம். ஆனால் இந்த ட்ரெக்கிங் சற்று சுவாரசியமாக இருந்ததினால் இதை மட்டும் பகிர்ந்து கொள்ளலாம் என நினைத்தேன்.

அப்புறம், கொடைக்கானல் சென்று பூக்களை படமெடுக்காமல் திரும்பி இருப்பேனா?… பூக்களின் தொகுப்பை தனியாக பதிவிடுகிறேன்…

மயான கொள்ளை – காவேரிப்பட்டிணம்

2016 வருடத்தின் இரண்டாம் பயணம், காவேரிப்பட்டிணத்திற்கு, மயான கொள்ளை திருவிழாவிற்காக. 2 வாரத்திற்கு முன்பே நண்பர்களுடன் பேசிக் கொண்டபடி மார்ச் மாதம் 8-ம் தேதி காலையில் பெங்களூரில் இருந்து புறப்பட்டோம். ஊர் போய் சேர சரியாக 2 மணி நேரம் எடுத்துக் கொண்டது. திருவிழாவிற்காக வண்டிகளை ஊருக்குள் அனுமதிக்கவில்லை. கோவிலுக்கு சிறிது தொலைவில் வண்டியை நிறுத்தி விட்டு, திருவிழாவிற்காக சாலையின் இருபுறமும் புதிதாக முளைத்திருந்த சிறு சிறு கடைகைகளை ரசித்துக் கொண்டே கோவில் போய் சேர்ந்தோம். இங்கு கிராம தேவதைகளான பூங்காவனத்தம்மன் மற்றும் அங்காளம்மன் ஆகிய இருவரையும் முன்னிறுத்தியே திருவிழா கொண்டாடப்படுகிறது. விழா எடுக்கப்படும் காரணத்தையும் கதையையும் Wiki மற்றும் பல இணைய தளங்களில் ஏற்கனவே அதிகமாக பகிரப்பட்டு விட்டிருக்கின்றன. ஆகவே இப்பதிவில், விழாவில் நான் எடுத்த புகைப்படங்கள், ரசித்தவை,  மனதை உறுத்தியவை ஆகியவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

திருவிழாவில் முக்கியமாக, மக்கள் தாங்கள் வேண்டிக்கொண்டபடி நேர்த்திக்கடனை அம்மனுக்கு செலுத்துகின்றனர். கன்னத்தில் அலகு குத்துவது, ஆண்களும்  பெண்களும், சிறுவர் சிறுமியரும்,  காளி போன்று வேடமிட்டுக்கொண்டு மயானத்திற்குச் சென்று சில சடங்குகளை செய்து விட்டு வேடங்களை களைவது போன்றவை நேர்த்திக்கடனில் சேர்கிறது.  இதில், அம்மனின் ஆயுதமான சூலாயுதத்தை மக்கள் பல அளவுகளில் கன்னத்தில் குத்திக் கொள்கின்றனர். ஒரு ஜாண் அளவிலிருந்து, 301 அடி வரையிலும் சூலாயுதத்தின் அளவு வேறுபடுகிறது. இதில் என்னை வெகுவாறு பாதித்த விஷயம், சூலாயுத கம்பிகளில் பிடித்திருந்த “துரு”.  கம்பியுடன் இருக்கும் துரு, கன்னத்தில் “செப்டிக் ” ஏற்படுத்தி விடாதா?. இதிலிருந்து மக்கள் தங்களை காத்துக் கொள்ள என்ன மருந்து எடுத்துக் கொள்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ள ஆவலாக இருந்தது. அடுத்த முறை செல்லும் பொது கண்டிப்பாக அதை அவர்களிடம் கேட்டுக் கொள்ள வேண்டும் என எண்ணிக் கொண்டேன்.

இதோ அங்கு எடுத்த சில படங்கள்.

காளியாக வேடமிட்டுள்ள சிலர்
காளியாக மாறும் முன்...

காளியாக மாறும் முன்…

"மேக்கப் போட்டுக் கொள்ள மாட்டேன்" என்று அழும் குழந்தையை சமாதானப்படுத்தும் தாய்.

“மேக்கப் போட்டுக் கொள்ள மாட்டேன்” என்று அழும் குழந்தையை சமாதானப்படுத்தும் தாய்.

சாமியாடும் பெண்ணை கோழியின் ரத்தத்தைக் கொடுத்து சாந்தியடையச்  செய்கின்றனர்.

சாமியாடும் பெண்ணை கோழியின் ரத்தத்தைக் கொடுத்து சாந்தியடையச் செய்கின்றனர்.

நாக்கில் அலகு குத்திக் கொள்ளும் பொழுது

நாக்கில் அலகு குத்திக் கொள்ளும் பொழுது

சென்னையிலிருந்து பல புகைப்பட நண்பர்கள் அங்கு வந்திருந்ததால் முதல் முறை சென்றிருக்கிறோம் என்ற எண்ணம் துளி கூட இருக்கவில்லை. ஆனால் “மகளிர் தினத்தன்று” , அங்கு, ஒரு பெண் புகைப்படக் கலைஞர் கூட இல்லையே என்ற வருத்தம் இல்லாமல் இல்லை.
மதியம் வரை கோவிலில் நேரத்தை கடத்தி விட்டு ஊருக்கு செல்லலாம் என கிளம்பி வெளியில் வரும் பொழுது தான் தெரிந்தது,  நாங்கள் வரும் பொழுது கூட்டம் சற்று குறைவாக இருந்த தெருக்களை பலவிதமான காளிகள் ஆக்கிரமித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களின் நீண்ட நெடிய சூலத்திலிருந்து தப்பித்துக் கொண்டு ஒரு வழியாக கோவிலைக் கடந்து வந்தோம்.
தென்பெண்ணையாற்றின் கரையோரத்தில் இருக்கும் மயானத்தில் தான் திருவிழாவின் இன்ன பிற சடங்குகள் நடைபெறும். நேரமின்மை காரணமாக அங்கு செல்லாமலேயே ஊர் திரும்பினோம்.

மார்ச் மாதம் ஆதலினால் என் மகன்களுக்கு முழுப்பரீட்சை ஆரம்பித்து இருந்தது. “நான் காவேரிபட்டினத்திற்கு போய் வரவா? ” என பாலாஜி-யிடம் கேட்கும் பொழுது, “நான் வீட்டிலிருந்தே வேலை பார்க்கிறேன், நீ போயிட்டு வா ” என கூறி, நாள் முழுவதும் குழந்தைகளை பார்த்துக் கொண்டு, சாயங்காலம் களைப்பாக வந்த எங்களுக்கு டீ (வேறு)செய்து கொடுத்தார். இரண்டு வருடங்களாக போய் வர வேண்டும் என நினைத்திருந்த காவேரிப்பட்டிணத்திற்கு சென்று வந்தது மிகுந்த சந்தோஷத்தைக் கொடுத்தது. “என்னுடைய இந்த உதவிகளே, இவ்வருடத்தின் உனக்கான மகளிர் தின பரிசு” எனக் கூறி அந்த சந்தோஷத்தை இரட்டிப்பாக்கினார் பாலாஜி.