தெய்யம் – அண்டலூர் காவு

தெய்யம் – கேரள மாநிலத்தின் மலபார் மற்றும் கண்ணூர் பகுதிகளில் வருடந்தோறும் நடைபெற்று வரும் பண்டிகைகளுள் முக்கியமானது. 2 – 3 வருடங்களாகவே இப்பண்டிகையை படமெடுக்க வேண்டும் என்ற ஆசை மனதில் இருந்து கொண்டே இருந்தது. பாலாஜி -யின் நண்பர் ஒருவரின் சொந்த ஊரில் வருடந்தோறும் இப்பண்டிகை நடப்பதறிந்து ஒன்றரை வருடமாக அவரை படாத பாடு படுத்தி, இம்முறை சென்று, ஆசை தீர படமெடுத்து விட்டு திரும்பினேன்.

இப்பயணத்தில் என்னுடைய அனுபவங்களையும், புகைப்படங்களையும் பார்க்கும் முன் தெய்யம் பற்றி ஒரு சிறிய அறிமுகம். வழக்கமாக இப்பண்டிகை,  கிராமத்து கதைகளையும், கிராமத்து தேவதைகளையும்  உள்ளடக்கியே நடத்தப்படுகிறது. நான் சென்று வந்த “அண்டலுர் காவு” எனும் ஊரில் மட்டும் ராமாயணத்தின் யுத்த காண்டத்தின் ஒரு பகுதியான வாலி-சுக்ரீவன் ஆகிய இருவருக்கும் நடக்கும் போர் மற்றும் ராமன் அயோத்தியிலிருந்து இலங்கைக்கு சென்று சீதையை மீட்கும் படலம் ஆகியவை கதைக்களமாக உள்ளது. மேலும் இப்பண்டிகைகளில் பலவகையான கதாபாத்திரங்களை  ஏற்று அழகான அடர்த்தியான ஒப்பனை செய்து கொள்கின்றவர் அனைவரும் பழங்குடியின மக்கள் அல்லது தாழ்த்தப் பட்ட வகுப்பினைச் சேர்ந்தவர்களே. இம்மாதிரியான பண்டிகை நாட்களில், ஒப்பனை செய்து கொண்ட தெய்யங்களை, அனைத்து தரப்பின மக்களும், கடவுளாகவே நினைத்து அவர்களின் ஆசீர்வாதங்களையும் பெற்றுக் கொள்கின்றனர்.

சுக்ரீவனின் ஆசீர்வாதங்களை பெரும் இளம்பெண்...

சுக்ரீவனின் ஆசீர்வாதங்களை பெரும் இளம்பெண்…

கதை “போர்” அடித்து விட்டதா?… சரி.. நிறுத்தி விட்டேன்.

பயணத்தில்,  நண்பரின் வீட்டுக்கருகில் பண்டிகை நடப்பதினால், அவருடைய வீட்டிலேயே தங்க முடிவெடுத்தோம். பெங்களூரிலிந்து இரவு புறப்பட்டு, காலை கண்விழித்தெழும் போதே “சே” வின் ஆளுயர கட் அவுட் கேரளா வந்துவிட்டதை உறுதி செய்தது. பின்பு நண்பரின் வீட்டில் காலை சாப்பாடு மற்றும் பகல் உணவு ஆகியவற்றை முடித்துக் கொண்டு கோவிலுக்குச் சென்றோம். நண்பகல் “யுத்த காண்டம்” நடந்தேறியது. இப்பண்டிகையை படமெடுக்கும் புகைப்படக் கலைஞர்கள் மத்தியில் சில படங்கள் முக்கியமாக கருதப்படுகின்றது. அதில் அக்கலைஞர்கள் ஒப்பனை செய்து கொள்ளும் பொழுது எடுக்கப்படும் படமும் ஒன்று.  அம்மாதிரியான படங்கள் எல்லாம் எடுக்க வேண்டும் என்று முன்கூட்டியே யோசித்து வைத்திருந்தேன். ஆனால் பெண்களை ஒப்பனை அறையில் அனுமதிப்பதில்லை என்று கூறி என்னை அதிர்ச்சி அடையச் செய்தனர். பின்பு யோசிக்கையில் தான் தெரிந்தது, அம்மாதிரியான படங்களை எல்லாம் எடுத்தது ஆண் புகைப்படக் கலைஞர்களே என. மிகுந்த ஏமாற்றத்துடன் வாலி-சுக்ரீவன் போர் காட்சிகளை படமெடுக்க காத்திருந்தேன்.

வாலி -யை போர்க்களத்திற்கு  அழைத்துக்  கொண்டு வரும் போதே கொஞ்சம் கொஞ்சமாக கூட்டம் சேர்ந்து விட்டது. அவசரம் அவசரமாக, எங்கு நின்றால் நல்ல கோணங்களில் படம் கிடைக்கும் என்றெல்லாம் யோசித்து இடத்தை தேர்வு செய்து கொண்டேன். என் நல்ல நேரம், “செண்டா மேளம்” அடித்துக் கலக்கும் மேளக்காரர்களுக்கு நடுவில் மாட்டிக் கொண்டேன். போர் முடியும் பொழுது என் காதின் நிலைமையை நான் சொல்லித்தான் தெரியவேண்டுமா??

அங்கு எடுத்த புகைப்படங்களில் சிலவற்றைப் பார்ப்போம்.

முதலில் வாலி, சுக்ரீவனை அறிமுகம் செய்து கொள்வோம்.

 வாலி

வாலி

சுக்ரீவன்

சுக்ரீவன்

வாலி-ஐ போர்களத்திற்கு அழைத்து வரும் மக்கள்.

வாலி-ஐ போர்களத்திற்கு அழைத்து வரும் மக்கள்.

 

போர்க்களத்தில் சுக்ரீவனை தேடும் வாலி.

போர்க்களத்தில் சுக்ரீவனை தேடும் வாலி.

 

மலை மேல் வாலியும் தரை மேல் சுக்ரீவனும் போரிடுவதற்கு தயாராக...

மலை மேல் வாலியும் தரையில் சுக்ரீவனும் போரிடுவதற்கு தயாராக…

போர்க்களத்தில் ஆக்ரோஷமான சுக்ரீவன்...

போர்க்களத்தில் ஆக்ரோஷமான சுக்ரீவன்…

கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் நடந்தது போர். போர் முடிந்த பிறகு தான் தெரிந்தது, கேமரா வை தூக்கிக் கொண்டிருந்ததினால் என் வலது கை மற்றும் முதுகின் ஒரு புறம் முழுக்க வலி கண்டிருந்ததை. பின்பு இரவு ஸ்ரீ ராமனை பார்க்க வரலாம் என வீடு திரும்பினோம்.

இரவு 9 மணிக்கு மேல் கோவிலுக்கு வந்த எங்களுக்கு அங்கு கூடி இருந்த மக்கள் கூட்டத்தை பார்த்தவுடன், கடைசி வரை தெய்யத்தை பார்த்து விட்டு போக முடியுமா என்ற சந்தேகம் வந்துவிட்டது. முழுமையாக பார்க்க முடியாது என்பதை தெரிந்து கொண்டு கோவிலின் முன் மக்களுக்கு ஆசி வழங்கி கொண்டிருந்த ஸ்ரீ ராமனையும், லக்ஷ்மணனையும், பப்புரான் என அழைக்கப்படும் அனுமனையும் படமெடுத்துக் கொண்டு வீடு திரும்பினோம்.
"தெய்வத்தார்" என்றழைக்கப்படும் ஸ்ரீ ராமன்.

“தெய்வத்தார்” என்றழைக்கப்படும் ஸ்ரீ ராமன்.

 

அங்ககாரனான லக்ஷ்மணன்

அங்ககாரனான லக்ஷ்மணன்

 

லக்ஷ்மணனின் தலை மேலிருக்கும் முடி

லக்ஷ்மணனின் தலை மேலிருக்கும் முடி

பப்புரான் என அழைக்கப்படும் அனுமன்

பப்புரான் என அழைக்கப்படும் அனுமன்

ஒவ்வொரு வருடமும் மலையாள கும்ப மாதத்தின் முதல் ஏழு நாட்கள் நடந்தேறும் இவ்வகையான தெய்யம், பலதரப்பட்ட மக்களின் ஒற்றுமையை வளர்க்கும் நோக்கத்திலேயே நடத்தப்படுகிறது.
தமிழ்நாட்டில் நடக்கும் தெருக்கூத்தை  “தெய்யம்” பல இடங்களில் நினைவூட்டினாலும்,  இது ஒரு வித்தியாசமான அனுபவமாகவே இருந்தது.  உடல்சார்ந்த களைப்பு ஒரு பக்கம் இருந்தாலும் நல்ல படங்கள் கிடைத்த சந்தோஷம் அதையெல்லாம் மறக்கச் செய்தன.