கீழடி – மண்ணுக்குள் மறைந்திருந்த நம் மூதாதையர் கிராமம்

ஒவ்வொரு முறையும் மதுரை செல்வது, ஒன்று அம்மாவை பார்ப்பதற்காக இருக்கும், அல்லது ஏதாவது சொந்தங்களின் திருமணத்திற்கு செல்வதற்காக இருக்கும். ஆனால் இம்முறை “கீழடி” என்னும் இடத்திற்கு செல்வதற்காக மதுரை சென்றோம். கீழடி பற்றி சமீப காலத்தில் நிறைய செய்திகள்,  கிட்டத்தட்ட எல்லா பத்திரிக்கைகளிலும் வந்தாயிற்று. இந்நிலையில், “ஊர்க்குருவிகள்” எனும் பயண அமைப்பு, “கீழடியை நோக்கி..” எனும் பயணத்தை ஏற்பாடு செய்திருந்தது. இதை நண்பர் ஒருவர் மூலமாக அறிந்து நானும், பாலாஜியும் பயணத்தில் கலந்து கொண்டோம். இப்பயணத்தில் எங்களுடன் எங்களுடைய மகன் மதியும் கலந்து கொண்டது கூடுதல் மகிழ்ச்சியை அளித்தது.

கீழடி, மதுரைக்கு அருகில் சிலைமான் மற்றும் திருப்புவனம் ஆகிய கிராமங்களின் இடையில் இருக்கும் மற்றுமொரு சிறிய கிராமம். மத்திய தொல்பொருள் துறையினர் மேற்கொண்டுள்ள ஆராய்ச்சிகளின் பலனாக, மதுரை மண்ணுக்குள் புதைந்து போயிருந்த ரகசியங்கள் வெளிக் கொண்டு வரப்பட்டிருக்கின்றன.  2200 முதல் 2300 வருடங்களுக்குள்  வாழ்ந்த நம் மூதாதையர்களின் கிராமத்தைப் பற்றி தெரிந்து கொள்ளும் ஓர் அரிய வாய்ப்பு தொல்பொருள் துறையினரால் சாத்தியமாயிற்று.

இதுவரை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களின் பணிகளை நேரில் கண்டதில்லை. கீழடியை நோக்கி பயணிக்கும் பொழுது, “ஆராய்ச்சிகளை மேற்கொள்ள எவ்வாறு ஓர் இடத்தை தேர்வு செய்கிறார்கள்?”, “எப்படி பொருட்களை சிதைக்காமல் வெளிக் கொண்டு வருகிறார்கள்?” “எம்மாதிரியான வேலையாட்களை வேலைக்கு அமர்த்துகிறார்கள்?” எனும் பல கேள்விகள் என்னுள்.  இதற்கெல்லாம் விடை எங்களுக்காக காத்திருந்தது.

ஓர் பெரிய தென்னந்தோப்பிற்கு நடுவில் இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டிருந்தனர் தொல்பொருள் ஆய்வினர்.  அங்கு வேலையில் இருந்த தள மேற்பார்வையாளர் ரமேஷ், அனைவரின் கேள்விகளுக்கும் பொறுமையாக பதிலளித்துக் கொண்டிருந்தார்.  முதல் கட்ட ஆய்வாக, ஆற்றுப்படுகைகளை ஒட்டி உள்ள கிராமங்களில் வாழும் மக்களிடையே, தங்கள் கேள்விகளுடன் ஆரம்பித்து, படிப்படியாக, ஏதாவது ஆதாரம் கிடைக்கும் பட்சத்தில், முன்னேறி, சரியான ஓர் இடத்தை தேர்வு செய்கின்றனர்.

தேர்வு செய்த நிலத்தில், ஓர் நாளைக்கு 5 செ. மீ. என்ற அளவில் தினமும் குழியை மிகவும் கவனமாக தோண்டுகின்றனர். இவ்வேலைக்கு, அருகில் இருக்கும் கிராம மக்களில் கட்டிட வேலை பார்ப்பவர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு சிறிது பயிற்சிகளையும் கொடுத்து ஆரம்பிக்கின்றனர். அப்படி ஆரம்பித்த வேலை, இன்று பல தகவல்களை வெளிக் கொண்டு வந்து கீழடியின் பெயரை பிரபலமாக்கி இருக்கின்றது.

மற்றுமொரு சிறப்பு என்னவென்றால், தமிழ்நாட்டை பொருத்தவரை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் பழங்காலத்து நாணயங்கள், அணிகலன்கள், முதுமக்கள் தாளி, நடுகற்கள் போன்ற மக்கள் உபயோகப்படுத்திய பொருட்களை மட்டுமே கண்டுபிடித்து வந்துள்ளார்கள். மக்கள் வாழ்ந்த வீடுகள், வீட்டின் சுவர்கள் ஆகியவற்றை கண்டுபிடித்திருப்பது இதுவே முதன்முறை.  மேலும், அங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ள உறைகிணறு, நம்மில் சில வருடங்களுக்கு முன்பு வரை உபயோகத்தில் இருந்த உறைகிணறுகளை ஒத்திருக்கின்றன.

_MG_8743copy
_MG_8740copy

கிணறு

வீட்டில் புழங்கிய தண்ணீர் வெளியேறுவதற்கான அமைப்பு.

வீட்டில் புழங்கிய தண்ணீர் வெளியேறுவதற்கான அமைப்பு.

சிதைந்த வீட்டின் ஓர் பகுதி.

சிதைந்த வீட்டின் ஓர் பகுதி.

தானியங்களை சேமித்து வைக்கும் குதிர்

தானியங்களை சேமித்து வைக்கும் குதிர்

ஆய்வு செய்த இடங்களை, கண்கள் விரியும் அளவிற்கு ஆச்சரியத்துடன் பார்த்து முடித்த பிறகு, தள மேற்பார்வையாளர் ரமேஷ், அங்கு அவர்கள் கண்டெடுத்த பொருட்களை, மிகவும் சிரத்தையுடன் எடுத்து காண்பித்தார். ஒவ்வொரு பொருளும் அவ்வளவு அழகு!!!. அதில் அக்காலத்து மக்கள் பயன்படுத்திய பானைகள், அப்பானைகளில் பொறிக்கப்பட்டுள்ள கோட்டோவியங்கள், மற்றும் அதில் தமிழ் பிராம்மி எழுத்துக்களால் எழுதப்பட்ட “திஸன்” எனும் பெயரையும் வைத்து வணிகத்திற்காக மக்கள் வடக்கிலிருந்தும், ரோம் போன்ற நாடுகளிலிருந்தும் வந்திருக்கலாம் என யூகிக்கின்றனர்.  சுட்ட களிமண்ணினால் ஆன அணிகலன்கள், தந்ததினால் ஆன பகடைகள், மற்றும் பெண்கள் தங்கள் காதுகளில் பாம்படம் அணிவதற்காக, காது வளர்க்க உபயோகப்படுத்திய அணிகலன், ஆகிய அனைத்தும் கொள்ளை அழகு!!. விளையாட்டுப் பொருட்கள், அழகிய அணிகலன்கள் ஆகியவை ஓர் இடத்திலும், ஈட்டி போன்ற உலோகத்தினால் ஆன ஆயுதங்கள் மற்றும் மக்களின் பாதுகாப்பிற்கு பயன்படுத்தப்பட்ட பொருட்கள் மற்றோர் இடத்திலும் கண்டு பிடிக்கப்பட்டதினால், அம்மக்களிடையே வர்க்க வேறுபாடுகள் இருந்திருக்கலாம் என்றும் கணிக்கின்றனர்.

இவை அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது, அருகிலிருக்கும் கிராமத்து குட்டி பயல்களும் எங்களுடன், சத்தம் எதுவுமின்றி, ரமேஷ் சொல்வதை கேட்டுக் கொண்டிருந்தனர். அவர்கள் அனைவரும் அப்பொழுது தான் அங்கு வந்து அனைத்தையும் கேட்டு தெரிந்து கொள்கின்றனர் என நினைத்தேன். ஆனால் அப்புறம் தான் தெரிந்தது ஒவ்வொரு முறையும் அவர்கள் அப்படித் தான் வருகிறார்கள் என்று. பள்ளிகளில் இருக்கும் வரலாற்று ஆசிரியர்கள் எல்லோரும் ரமேஷ் -ஐ போல திறமை வாய்ந்தவர்களாக இருந்தால், அவரைப் போன்று வரலாற்று பாடங்களுக்கு விளக்கமளித்தால், எப்படிப்பட்ட மாணவ மாணவியராலும் வரலாறு, புவியியல் பாடங்களை வெறுக்க முடியாது.

Advertisements

3 thoughts on “கீழடி – மண்ணுக்குள் மறைந்திருந்த நம் மூதாதையர் கிராமம்

  1. What is this about? An archeological site? Looks interesting… Can u explain… If u don’t mind

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s