தொடரும் வாழ்க்கை

பலமுறை ராமேஸ்வரத்திற்கு சென்று வந்திருக்கிறேன். ஆனால் ஒரு முறை கூட தனுஷ்கோடி சென்றதில்லை. சென்ற வருடம் குடும்பத்துடன் சென்றிருக்கும் பொழுது கூட, அங்கு சென்றுவிடலாமென ராமேஸ்வரத்திலிருந்து கிளம்பி தார் ரோடு முடியும் இடம் வரை சென்று விட்டோம். ஆனால் சாயங்கால நேரம் அங்கு செல்வதற்கான ஜீப், வேன் ஆகியவை இல்லாத காரணத்தினால் ஏமாற்றத்துடன், கோதண்டராமர் கோவில் மட்டும் சென்று திரும்பினோம். இந்த முறை அங்கு செல்வதற்காக முடிந்தவரை எல்லா ஏற்பாடுகளையும் செய்து கொண்டு நான் முதலில் மதுரை சென்று விட்டு, பாலாஜி-ஐ கிறிஸ்தமஸ் லீவ்-க்கு மதுரை வர சொல்லி இருந்தேன். மதுரை சென்றவுடன் என்னுடைய பிளான்-ஐ சொன்னவுடன் பலரும் “டிசம்பர்-ல் அங்கு செல்லாதே” என பயமுறுத்தினர். முதலில் காரணம் புரியவில்லை, அடுத்த நாள் (டிசம்பர் 22) செய்தித்தாள் பார்த்தவுடன் தான் புரிந்தது. 50 வருடத்திற்கு முன் இதே நாளில் தான் தனுஷ்கோடி, பலத்த புயலினால் அழிந்து போய்விட்டிருந்தது. மேலும் 10 வருடங்களுக்கு முன்பு, ஆழிப்பேரலை இந்தியாவை தாக்கியதும் இதே டிசம்பர்-இல் தான். முற்றிலுமாக அழிந்து போன பொழுதிலும், சொந்த ஊரான தனுஷ்கோடியை விட்டு வர மனமில்லாத 300 குடும்பங்கள் இன்றும் அங்கு வாழ்ந்து வருகிறார்கள் எனவும் தினசரியில் படித்து தெரிந்து கொண்டேன். இதையெல்லாம் படித்த பின்பு அங்கு செல்ல வேண்டுமென்ற ஆர்வம் இன்னும் அதிகமானதே தவிர துளி கூட குறையவில்லை.

சென்ற முறை மைசூர்-க்கு காரில் சென்று, நாங்கள் பட்ட கஷ்டம் நினைவுக்கு வர, இந்த முறை ரயிலிலோ அல்லது பஸ்சிலோ தான் செல்ல வேண்டுமென முடிவு செய்து, பஸ்ஸில் கிளம்பினோம்(நானும், பாலாஜி மட்டும்). ராமேஸ்வரம் சென்ற பிறகு, உறவினர் ஒருவர் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த “வழிகாட்டி” ஜெயப்ரகாஷ் எங்களுடன் சேர்ந்து கொண்டார். பத்தாம் வகுப்பு வரையே படித்திருக்கும் அவர், பழனி-க்கு பாதயாத்திரை செல்வதற்கு மாலையிட்டிருக்கும் ஓர் தீவிர கடவுள் பக்தர். வரலாறு என்ற பெயரில் அவர் ராமரைப் பற்றிக் கூறிய கதைகள், அவருடைய அறியாமையை வெளிப்படுத்தினாலும், அதனை எதிர்க்காமல் அமைதியாகக் கேட்டுக் கொண்டேன்.

ஜெயப்ரகாஷுடன் பாலாஜி

ஜெயப்ரகாஷுடன் பாலாஜி


ராமேஸ்வரத்திலிருந்து தனுஷ்கோடி செல்வதற்கு ஓர் ஆட்டோ எடுத்துக் கொண்டு, கோதண்டராமர் கோவில் தாண்டிய பிறகு, அங்கு உள்ளே செல்வதற்கென பிரத்யேகமாக தமிழக சுற்றுலா துறையினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் வேனில் ஏறி தனுஷ்கோடி சென்றடைந்தோம்.

 கோதண்டராமர் கோவில்.

கோதண்டராமர் கோவில்.


தனுஷ்கோடி ரயில் நிலையம்.

தனுஷ்கோடி ரயில் நிலையம்.

அங்கு சென்றவுடன் முதலில் சந்தித்தது, புயலினால் சிதிலமடைந்திருந்த சர்ச்-ன் வாசலில் அமர்ந்திருந்த முனிசாமி தாத்தா. தனுஷ்கோடி-ஐ புயல் தாக்கும் பொழுது அங்கிருந்த பள்ளியில் படித்துக் கொண்டிருந்தாராம். அப்பொழுது அவருக்கு 12 வயதாம். அவ்வளவு சிறிய வயதில் புயலிலிருந்து தப்பித்து இன்றும் வாழ்ந்து கொண்டிருப்பதை அவர் கூறக் கேட்கும் பொழுது உடல் சிலிர்த்தது. இப்பொழுதும் அம்மண்ணை விட்டு செல்ல மனமில்லாமல் அங்கேயே வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

புயலின் சீற்றத்தை எதிர்கொண்ட தேவாலயம்.

புயலின் சீற்றத்தை எதிர்கொண்ட தேவாலயம்.


முனிசாமி தாத்தா

முனிசாமி தாத்தா

அன்றைய கோவிலின் இன்றைய நிலை.

அன்றைய கோவிலின் இன்றைய நிலை.

அத்தியாவசிய தேவைகள் :
அவர் மட்டுமல்லாமல், அங்கு வாழும் இன்னும் சில மக்களை சந்தித்தோம். மின்சாரம், சாலை போன்ற எந்தவொரு வசதியும் இல்லாமல் வசித்து வரும் அவர்களிடம் “எப்படி இங்கே வாழ்கிறீர்கள்?” என வியப்புடன் கேட்டேன். சூரிய சக்தியினால் எரியும் விளக்கே இவர்களின் இருளை போக்கி வருகிறது. மேலும் அரசாங்கம் சரியான சாலை வசதி செய்து கொடுப்பதற்கான வேலைகளை துவங்கி இருப்பதாகவும் கூறினர். இங்கு இருக்கும் குழந்தைகள் 5-ம் வகுப்பு வரை படிப்பதற்காக ஓர் பள்ளியும் இருக்கிறது. விடுமுறை நாட்களில், அங்கு வரும் சுற்றுலா பயணிகளிடம் “சங்குகள்” விற்கின்றன அக்குழந்தைகள்.

 சங்குகள் விற்கும் குழந்தை.

சங்குகள் விற்கும் குழந்தை.

சுற்றி கடலால் சூழப்பட்ட இந்த தீவுக்குள் குடி தண்ணீருக்கு என்ன செய்வார்கள் இம்மக்கள் என எனக்கு சந்தேகம் வரவே, அவர்களிடமே அதைப் பற்றிக் கேட்டேன். உடனே பக்கத்தில் இருந்த கிணற்றின் அருகில் கூட்டிச் சென்று, “இதோ இருகிறதே, இம்மாதிரியான கிணறுகள் நிறைய இருகின்றன இங்கு” எனக் காண்பித்தனர்.

குடி தண்ணீர் கிணறு.

குடி தண்ணீர் கிணறு.

இதில் இருக்கும் தண்ணீர் எப்படி உப்பு கரிக்காமல் இருக்கும் என மனதில் நினைத்தவாறே, “இந்த தண்ணியா உபயோகப்படுத்துறீங்க?, உப்பு கரிக்காது?” என என் சந்தேகத்தைக் கேட்டேன். உடனே அதிலிருந்து சிறிது தண்ணீர் எடுத்து கொடுத்து குடித்து பார்க்க சொன்னார்கள். “காவேரி”(பெங்களூரில் இருப்பதினால்) தண்ணீர் தோற்றது போங்க. அவ்வளவு ருசி.

அவர்களுடைய ஓர் நாளைய வாழ்கை நிகழ்வுகளை கேட்கும் பொழுது அப்படியே தலை சுற்றியது. காலை 2 மணிக்கெல்லாம் கடலுக்கு சென்று மீன் பிடித்து வந்து, 7 மணிக்குள் ராமேஸ்வரத்திற்கு அனுப்பி விடுகிறார்கள். பின்பு மீன் பிடிக்க உபயோகப்படுத்திய வலையை சரி செய்து, மாலை 3 மணிக்கு நண்டுகளை பிடிக்க அதற்கான வலையை கடலில் சென்று போட்டு வருகின்றனர், பின்பு போய் எடுத்து வருவதற்காக. இப்படியாக கழிகிறது ஓர் நாள்.

இன்றைய கோவில்

இன்றைய கோவில்

“எப்பொழுது புயல் வருமோ!!!” என்ற பயத்துடனேயே எவ்வளவு நாட்கள் இங்கே இருப்பது, அதற்கு பதிலாக வேறு பாதுகாப்பான இடத்திற்கு செல்லலாமே எனக் கேட்டதற்கு ” பிறந்த ஊரை விட்டு எங்கே செல்வது?, அது மட்டுமல்லாமல் எங்கள் அப்பா, தாத்தா எல்லோரும் இங்கு தானே இருந்திருகிறார்கள். மீன் பிடிப்பதை விட்டு வேறு வேலையும் தெரியாதே எங்களுக்கு”, மேலும் “வேறு இடங்களுக்கு சென்று மீன் பிடித்தால் அங்கு மீன் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு இருக்கிறதல்லவா” என்று அவர் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல இயலவில்லை. இயற்க்கையின் உணவு சமன்பாட்டை பாதிக்காத வகையில் வாழ்க்கையை எப்படி நடத்திச் செல்வது என இவர்களிடம் தான் கற்றுக் கொள்ள வேண்டும். சுற்றுப் புற சூழலை பாதிக்காத வகையில் வாழ்ந்து வரும் அவர்களுக்கும், பிறந்த மண்ணிலிருந்து அன்னியப்பட்டுச் சென்று “Fast Food” சாப்பிடும் நமக்கும் எவ்வளவு வித்தியாசம்!!!.

Advertisements

4 thoughts on “தொடரும் வாழ்க்கை

  1. பயணம் மூலம் பல தகவல்களை அறிய முடிந்தது…

    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்….

  2. kamalesh says:

    Excellent information, Will share with my office colleagues too.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s